Last Updated : 02 Sep, 2016 12:15 PM

 

Published : 02 Sep 2016 12:15 PM
Last Updated : 02 Sep 2016 12:15 PM

இளசுகளின் பசுமைக் கொண்டாட்டம்

சென்னையின் பழமையான மால்களில் ஒன்று அது. கார் லாஞ்ச், பைக் லாஞ்ச், ராக் இசை நிகழ்ச்சி போன்றவையெல்லாம் நடக்கும் அதன் மையப்பகுதி அன்று வித்தியாசமான வண்ணம் பூண்டிருந்தது. இளைஞர்கள், குழந்தைகள் மட்டுமில்லாமல் போவோர், வருவோரிடம் இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஸ்பென்சர் பிளாசாவில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பெயர் ‘சென்னை பசுமைத் திருவிழா' . இதன் ஒரு பகுதியாக இயற்கை உணவுகளின் முக்கியத்துவம், அவற்றின் பயன்கள் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையில் ஓவியப் போட்டி, நடனப் போட்டி, பேச்சுப் போட்டி, மைம் நாடகம், பசுமை ஆடை அணிவகுப்பு போன்ற போட்டிகளும் களைகட்டி இருந்தன. இப்போட்டிகளில் பங்கேற்ற 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு என்ன பரிசாகக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் வீட்டுக்குப் போன பிறகும் பசுமையைப் பரவலாக்க வசதியாகப் பரிசுகளுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நடிகர் ஆரியும், இந்தியாவின் பசுமை நாயகன் டாக்டர் கே. அப்துல் கனியும் பரிசுகளை வழங்கினர். ‘ரோட்ராக்ட் ஜெனித் கிளப்’, நாசரேத் கல்லூரியின் ‘ரோட்ராக்ட் கிளப்’ ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

எல்லாமே இயற்கை

மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் காய், கனிகளை இயற்கை முறையில் நாமே உற்பத்தி செய்துகொள்ள வசதியாக, பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாகக் காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. இயற்கை உணவுகள் தயாரிப்பு முறை, இயற்கை உணவுகளின் பயன்பாடு, ஊட்டச்சத்து, இயற்கை உணவுகளின் அவசியத்தை உணர்த்தும் குறும்படங்கள் திரையிடல் போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பிடித்திருந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாக, வெறுமனே இயற்கை உணவு குறித்துத் தெரிந்துகொண்டு என்ன செய்வது? இயற்கை உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வசதியாக, இயற்கை உணவு உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள், இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய சிறுதானியங்கள், பல்வேறு வகை அரிசிகள், எந்தக் கலப்படமும் இல்லாத செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள் போன்ற பல இயற்கை உணவுப் பொருட்கள் அங்கே கிடைத்ததில் முக்கியமானவை.

இயற்கை ஆடைகள்

உணவுப் பொருட்கள்தான் என்றில்லை, முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகளும்கூட விற்பனை செய்யப்பட்டன. இந்தத் தற்காலிக விற்பனைச் சந்தையில் உற்பத்தியாளர்களே நேரடியாகப் பங்கேற்றதால், விலையும் கட்டுபடியாகக்கூடிய அளவில் இருந்தது.

நம் பாரம்பரிய உணவும் அதில் பொதிந்து கிடக்கும் இயற்கையான ஊட்டச்சத்தும் நம் உடலுக்கு எப்படி ஆரோக்கியத்தைத் தருகிறது என்பதை இக்கால இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த நிகழ்ச்சி உணர்த்தியது. ஆரோக்கியமில்லாத சக்கை உணவு (ஜங்க் ஃபுட்ஸ்), போன்றவற்றைக் குறித்து இவர்கள் மாறுபட்டு சிந்திப்பார்கள் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x