Published : 16 Nov 2013 03:18 PM
Last Updated : 16 Nov 2013 03:18 PM

பைங்கிளிகளின் புகலிடம்

"உயிர்மூச்சு" பகுதியில் வெளியாகி இருந்த "வீடு தேடி வந்த சிட்டுக்குருவிகள்" கட்டுரையைப் படித்துவிட்டு பாராட்டியிருந்த வாசகர் வடிவேல்முருகன், நெரிசல் மிகுந்த சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் ஒரு வீட்டைத் தேடி வந்து பச்சைக்கிளிகள் உணவருந்திச் செல்லும் அற்புதம் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறோம் என்று கடிதம் எழுதியிருந்தார்.

ஒவ்வொரு நாள் காலையிலும் பச்சைக்கிளிகள் காலையில் உணவு தேடி கிழக்குப் புறத்தை நோக்கியும், மாலையில் கூடடைவதற்கு மேற்குப் புறத்தை நோக்கியும் இரண்டு முதல் ஐந்து வரை கூட்டமாகப் பறப்பதை நீங்களும் பார்த்திருக்கக்கூடும். ஆனால் சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் மாலை 4-4.30 மணிக்குச் சென்றால் ஒரு வீட்டு மொட்டை மாடி, அங்கிருந்து நீளும் ஓயர்கள், என அனைத்திலும் வரிசைகட்டி உட்கார்ந்திருக்கும் பச்சைக்கிளிகள் கூட்டமாய் உணவருந்திக் கொண்டிருக்கின்றன.

அந்தத் திகைப்பு நமக்குள் அடங்குவதற்கு முன்னதாகவே, அருகிலிருக்கும் அரச மரத்துக்கு கூட்டமாகப் பறப்பதும், மீண்டும் மாடிக் கட்டைச் சுவருக்குத் திரும்புவதுமாய் இருக்கின்றன. பரபரப்பான அந்தச் சாலையில் விரையும் வாகனங்களையோ, மக்களையோ அந்தக் கிளிகள் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.

சாலையில், வண்டியில் போகும் சின்னக் குழந்தைகள் பச்சைக்கிளி கூட்டத்தை வாய்பிளந்து பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். சிலர் தங்கள் செல்போன்களால் பச்சைக்கிளிகள் கூட்டத்தை பரவசமாக படமெடுத்து செல்கிறார்கள். சென்னையின் பரபரப்பான ஒரு பகுதியில், இவ்வளவு பச்சைக்கிளிகள் இயல்பாகக் கூடுவது நிச்சயம் சாதாரண விஷயமில்லை. காரணம் சென்னையில் மரங்கள் குறைந்து, கட்டடங்கள் பெருகிவிட்டதுதான்.

பச்சைக்கிளிகள் இப்படிக் கூடுவதற்குக் காரணம் கேமரா ஹவுஸ் நிறுவனத்தின் கேமரா மெக்கானிக் சேகர். ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து 100 அடி தொலைவில் உள்ள அந்த வீட்டுக்குக் கீழே, தலையில் தொப்பியுடன் கிளிகளுக்கு காவல் நின்று கொண்டிருந்தார் சேகர்.

"தினசரி மாலை 4-6.30 வரை இங்கேதான் நமக்கு டியூட்டி. பாசியாற வரும் இந்தக் கிளிகளை கல்லால் அடிக்க சில பையன்கள் வந்துவிடுகிறார்கள். ஒரு முறை ஒரு அம்மா, கிளி வளர்க்க ஆசையாக இருக்கிறது, ஒன்றை பிடித்துப் போகட்டுமா என்று கேட்டார். சிலர் கிளியை பிடித்துப் போய் விற்பதற்குக்கூட வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கிளிகளைப் பாதுகாக்கத்தான் காவல் நிக்கிறேன். காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் வேற எந்த வேலையையும் நான் பார்ப்பதில்லை. நான் இருப்பது வாடகை வீடுதான். 20 வருஷமா இந்த வீட்ல இருக்கேன். 2 வருஷமா கிளிகள் வருகின்றன.

என் வீட்டு மொட்டை மாடியில் மாடப்புறாக்களும், காக்கைகளும் பசியாறவும், தாகம் தணித்துக் கொள்ளவும் தானியங்களும் தண்ணீரும் வைப்பது வழக்கம். அப்போது ஒன்றிரண்டு கிளிகளும் வரும். ஆனால் தானே புயல் வந்ததற்குப் பிறகு, கிளிகள் அதிகம் வர ஆரம்பித்தன. பத்து இருபதாகி, நாற்பது அறுபதாகி, பின்னர் நூற்றுக்கணக்கில் வர ஆரம்பித்தன. சில நேரம் ஆயிரக்கணக்கான கிளிகள், ஒரேநேரத்தில் கூடுகின்றன.

இயற்கையாக வாழும் இந்தப் பச்சைக்கிளிகள், எந்தத் தொந்தரவும் இல்லாததாக உணர்வதால்தான் இங்கே வருகின்றன. ஆரம்பத்தில் மாடி கட்டைச் சுவரில் அரிசி, பொட்டுக்கடலை, உப்புக்கடலை போன்றவற்றை வைத்து வந்தேன். கிளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்ததால், மாடி கட்டைச்சுவர்களுக்கு இடையே மரக்கட்டைகளை வைத்து இரை வைத்து வருகிறேன்.

காலை 5-5.30 மணிக்கெல்லாம் இரை வைக்க எழுந்து விடுவேன். அப்போது கிளிகள் தலைக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்கும். இரையை வைத்து முடிக்க அரை மணி நேரம் ஆகும். இதற்கு ஒரு நாளைக்கு 20 கிலோவுக்கு மேல் அரிசி தேவைப்படுகிறது. பரபரப்பான இந்த இடம் அவற்றுக்கு பாதுகாப்பு உணர்வைத் தராது என்பதால், உடனடியாக கொத்திச் சாப்பிடும் உணவையே போடுகிறேன்.

அடையாறு ஸ்டைல்ஒன் கடையில் வேலை பார்க்கும் கண்ணன், எலெக்ட்ரிக்கல் வேலை பார்க்கும் ராஜா எனக்கு உதவுகிறார்கள். இப்போது சிலர் செய்தி கேள்விப்பட்டு, உணவு தர முன்வருகிறார்கள். அவற்றை பரிசோதித்துவிட்டுத்தான் வைப்பேன்.

இந்தக் கிளிகள் வர ஆரம்பித்து 2 வருஷமா நான் எங்கேயும் போறதில்லை. என்றைக்காவது வேறு வழியில்லாமல் நான் வெளியே போக வேண்டி வந்தால், என் மருமகள் சாமுவும் என் மனைவி ராணியும்தான் கவனித்துக் கொள்வார்கள்.

வழக்கமாக விஸ்காம் மாணவர்கள், கேமரா சம்பந்தப்பட்ட புராஜெக்ட் செய்யத்தான் என்னைத் தேடி வருவார்கள். இப்போது நியூ காலேஜ் மாணவர்கள் கிளிகளை படம், வீடியோ, ஆடியோ எடுத்துப் போய் புராஜெக்ட் செய்திருக்கிறார்கள். கிளிகளும் இப்போது புராஜெக்ட் மெட்டீரியல் ஆகிவிட்டன. இந்த வாயில்லா ஜீவன்கள் என்னைத் தேடி வர்றதை நினைச்சா சந்தோஷமாத்தான் இருக்கு," என்று முடிக்கிறார் சேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x