Last Updated : 19 May, 2017 10:57 AM

 

Published : 19 May 2017 10:57 AM
Last Updated : 19 May 2017 10:57 AM

வேலையற்றவனின் டைரி 29 - திரையோர எசகுபிசகு நினைவுகள்

எனது முதல் திரையரங்க அனுபவம், ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களுடன் ஆரம்பித்தது. அப்போது எனக்கு 8, 9 வயதிருக்கக்கூடும். ஒரு விடுமுறைக்குத் தஞ்சாவூர் சென்றிருந்தபோது, நானும், என் பாட்டியும் ஞானம் தியேட்டரில், ‘சிரி சிரி முவ்வா’ (தெலுங்கு) மேட்னி பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்தோம். அப்போது வண்டிப்பேட்டையில் எதிரே வந்த என் அம்மாவும். உஷா அக்காவும் ‘மீண்டும் கோகிலா’ படம் பார்க்கப்போவதாகச் சொன்னார்கள். நானும் அவர்களோடு போகிறேன் என்று சொன்னேன். பாட்டி என்னையும் அழைத்துப்போகச் சொன்னதால், அழைத்துச் சென்றார்கள்

அன்று முதல் இன்று வரையிலும், நான் தியேட்டர்களில் பார்த்த திரைப்பட அனுபவங்களின் ஒரு ட்ரெய்லர் மட்டும் இங்கே.

அரியலூரில், ஒரு முறை சக்தி தியேட்டரில், ஏதோ பழைய படத்தின் சோகமான க்ளைமாக்ஸ் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. நான் திடீரென்று என் அம்மா அழுதுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுப் பதற்றத்துடன், “ஏன்ம்மா அழுவுறீங்க?” என்றேன். சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்ட அம்மா சிரித்தபடி, “ஒண்ணுமில்லடா” என்றார். சில வினாடிகளில் திரையைப் பார்த்து அம்மா மீண்டும் அழ, நான் தம்பியிடம், “தினகரு… அம்மா அழுவுறாங்கடா…” என்றேன். அவன் பதறிப்போய் எழுந்து, “ஏம்மா அழுவுறீங்க? யாராச்சும் அடிச்சுட்டாங்களா?” என்று சுற்றிலும் பார்த்தான். இப்போது எங்கம்மா எங்களைத் தள்ளிவிட்டு, திரையைப் பார்த்து குமுறி, குமுறி அழ ஆரம்பித்துவிட்டார். தினகர் என்ன நினைத்தானோ? திடீரென்று சத்தமாக, “அம்மா… அழாதீங்கம்மா…அழாதீங்கம்மா…” என்று கதறினான். அதைப் பார்த்துவிட்டு நானும் அழ, சுற்றியிருந்த பலரும் தங்கள் கண்களைத் துடைத்தபடி எங்களைப் பார்த்து சிரித்தது, இன்னும் நினைவில் இருக்கிறது.

‘முதல் மரியாதை’ படம் பார்த்தபோது, ஒரு பெரிய கூத்து நடந்தது. பெரம்பலூர், கிருஷ்ணா தியேட்டரில் ‘முதல் மரியாதை’ படம் பார்த்தேன். தனியாகவே போயிருந்தேன். படம் முடியும் சமயத்தில் வடிவுக்கரசி, “ஒரு நாள், ஒருத்தன் கூட படுத்துக் கிடந்து புள்ளையோட வந்தேன்” என்று கூறவும், அந்தப் பிள்ளைதான் சிவாஜி-வடிவுக்கரசியின் மகள் அருணா என்று அறிந்து, தியேட்டரே அதிர்ச்சியில் உறைந்தது. நான் மட்டும் திருதிருவென்று விழித்தேன். சிறுவனான எனக்கு, திருமணமாகியிருக்கும் சிவாஜிக்கும், வடிவுக்கரசிக்கும்தான் குழந்தை பிறக்க முடியும். வடிவுக்கரசி யாரு கூடவோ பிறந்துச்சுங்கிறாங்களே என்று ஒன்றும் புரியாமல் மண்டை குடைந்தது. பக்கத்தில், வெள்ளை வேட்டி, சட்டையுடன், நெற்றியில் பட்டையுடன், பூர்ணம் விஸ்வநாதன் போல் பளபளவென்ற தோற்றத்தில் அமர்ந்திருந்த பெரியவரிடம், “ஏங்க… அருணா, சிவாஜி மகள் இல்லையா?” என்றேன்.

“இல்லப்பா”

“வடிவுக்கரசி, சிவாஜியத்தான கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அப்புறம் அவங்களுக்குத் தானே அருணா பிறந்திருக்கணும்?” என்று நான் சயன்ட்டிஃபிக்காகக் (?) கேட்டேன். பூர்ணம் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு, “இல்ல தம்பி… அது வேறொருத்தனுக்குப் பிறந்த குழந்தை” என்றார். நான் விடாமல், “அதெப்படி? வடிவுக்கரசி, சிவாஜியத்தான கல்யாணம் பண்ணிகிட்டாங்க? இல்லன்னா சிவாஜி ரெண்டாவது புருஷனா?” என்று கேட்டேன். பூர்ணம், “ஏன்டா இப்படி என்னைக் கொல்ற? படத்த பாக்க விடுரா” என்பது போல் என்னைப் பார்த்தார். நான் தொடர்ந்து, “உங்களுக்குப் புரியலன்னு நினைக்கிறேன். கல்யாணம் பண்ணிகிட்டது சிவாஜியும், வடிவுக்கரசியும். அப்புறம் குழந்தை மட்டும்” என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே பூர்ணம் எழுந்து சென்று வேறு சீட்டில் உட்கார்ந்துகொண்டார். பிறகு பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்த நண்பர் ஒருவருடன் பம்ப் செட்டில் குளித்துக்கொண்டே கேட்டபோதுதான் மேட்டர் புரிந்தது. படம் பார்த்து ரெண்டு நாள் கழித்து, “ஆ…” என்று அதிர்ந்தேன்.

குடும்பத்தோடு திரைப்படங்கள் செல்வதில் சில சங்கடங்கள் உண்டு. 1980-களில், கதாநாயகி வெள்ளைச் சேலையுடன், கதாநாயகனைக் காதலித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று மழை பெய்தால் பெற்றோர்களுக்குக் குப்பென்று வியர்த்துவிடும். ஏனெனில், அப்போது கதாநாயகிகள் மழையில் நனையும்போதுதான் கதாநாயகனிடம் கெட்டுப்போவார்கள். வெறும் விவசாயத்துக்காகவும், குடிநீருக்காகவும் மட்டும் மழையைப் பயன்படுத்திக்கொண்டிருந்த இந்தப் பிற்போக்கான சமூகத்தில், மழையை இந்த விஷயத்துக்கு நம்மாட்கள்தான் முதலில் பயன்படுத்தினார்கள் என்பதில் இன்று வரையிலும் எனக்குப் பெருமைதான். எனவே, திரையில் மழை பெய்தவுடன், என் தந்தை, “டேய்… முறுக்கு வாங்கிட்டு வாடா…” என்று கான்டீனுக்குத் துரத்திவிடுவார். இயக்குநர்களும் புத்திசாலித்தனமாக, முறுக்கு வாங்கி வரும் நேரத்துக்குள், அந்தக் காட்சி முடிவது போல்தான் வைத்திருப்பார்கள்.

இதே அனுபவம் பின்னாளில் எனக்கு சென்னையில் உல்டாவாக நடந்தது. நான் எனது மனைவி, மகனுடன் படம் பார்க்கச் செல்லும்போது, திரையில் எசகுபிசகான காட்சிகள் வரும்போது, என் மனைவி என் கையில் கிள்ளி, காதில், “பையன உச்சா இருக்க அழைச்சுட்டுப் போங்க” என்பார். நான், “டேய் வா… உச்சா இருந்துட்டு வரலாம்” என்று அழைத்துச் சென்றுவிடுவேன். ஆனால் சில சமயங்களில், “எது எசகுபிசகான சீன்?” என்பதில் எனக்கும், என் மனைவிக்கும் கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, நாங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்குள், அந்தக் காட்சியே முடிந்துவிடும்.

ஒரு முறை பைலட் தியேட்டரில், ‘பொல்லாதவன்’ படம் பார்க்கச் சென்றிருந்தோம். அதில் இடைவேளைக்குப் பிறகு தனுஷ், திவ்யா ஸ்பந்தனா தோன்றும் ஒரு பாடல் காட்சி வந்தது. அந்தப் பாடலை வெற்றி மாறன் எடுத்திருந்த விதம் குறித்து, இன்று வரையிலும் எனக்கு அவர் மீது கோபம் உண்டு. ஒன்று, பாட்டு முழுவதையும், பையனை உச்சாவுக்கு அழைத்துச் செல்வது போல் எடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால், உச்சா பிரச்சினையே ஏற்படாதவாறு எடுத்திருக்க வேண்டும். அந்தப் பாடல் ஒரு மாதிரி ரெண்டும்கெட்டானாக இருந்தது.

ஒரு காட்சியில் என் மனைவி, “பையன உச்சாக்கு அழைச்சுட்டு போங்க” என்றாள். “உச்சா போற அளவுக்கெல்லாம் ஒண்ணுமில்ல” என்று நான் கூறிக்கொண்டிருந்தபோதே, திரையில் லைட்டாக ஒரு எசகுபிசகு. அப்போது மூன்றாவது படித்துக்கொண்டிருந்த என் மகன், நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக, “உச்சா போலாமா?” என்று என்னிடமே கேட்க, எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என் மனைவி பல்லைக் கடித்துக்கொண்டு, “நீங்க மவன உச்சாக்கு அழைச்சுட்டு போகணும். ஆனா அவன் உங்கள அழைச்சுட்டுப் போறான்.” என்று கடிந்துகொள்ள, நான் பாக்யராஜ் போல் ‘திருதிரு’வென்று விழித்தபடி, மகனை உச்சா அழைத்துச் சென்றேன். வெளியே வந்தவுடன் என் மகன், “எனக்கு உச்சால்லாம் வரல” என்று பாடல் முடியும் வரையிலும் வெளியே காத்திருந்தான்.

இப்போது என் அன்புக்குரிய தமிழ்ச் சமூகத்தின் முன்பாக, சங்க காலம் முதல் இன்றைய கெத்து காலம் வரையிலும், தமிழகத்தில் தோன்றிய எந்த அறிஞர்களாலும், சிந்தனையாளர்களாலும் கேட்கப்படாத ஒரு மாபெரும் கேள்வியைக் கேட்கிறேன்: “தியேட்டரில் தன்னை எதற்கு உச்சா இருக்க அழைத்துச் செல்கிறார்கள் என்று ஒரு சிறுவனுக்குத் தெரிந்த பிறகும், அவனை உச்சா இருக்க அழைத்துச் செல்வது நியாயமா?”

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x