Published : 02 Mar 2018 10:59 AM
Last Updated : 02 Mar 2018 10:59 AM
செ
ஸ் (சதுரங்கம்) விளையாடுபவர்களுக்கு கிராண்ட்மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெறுவது கனவாகவே இருக்கும். அந்தக் கனவை எட்டிப் பிடிக்கக் காத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ராகுல். கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு முந்தைய நிலையில் உள்ள ராகுல், சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளுக்குப் பறந்துகொண்டிருக்கிறார்.
சென்னை முகப்பேரில் உள்ள ராகுலின் வீட்டுக்குச் சென்றால், பரிசுகளும் கோப்பைகளும் கேடயங்களுமாக அவரது அறையில் நிறைந்துக்கிடக்கின்றன. தற்போது இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆவதற்கான இரண்டாம் நிலையைத் தாண்டிவிட்ட ராகுல், கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான நிலையை நெருங்கி வருகிறார்.
அண்மையில் செக் குடியரசில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் ஒட்டுமொத்தமாக 5-வது இடத்தைப் பிடித்தோடு, 2,305 புள்ளிகளும் பெற்றதன் மூலம் அந்த நிலையை அடையும் முயற்சியில் முன்னேறியிருக்கிறார்.
முகப்பேர் ஸ்பார்ட்ரன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்துவரும் அவர், செஸ் விளையாட்டில் அடியெடுத்து வைத்ததற்கு சுவாரசியமான பின்னணி இருக்கிறது. 6 வயதாக இருக்கும்போது கிரிக்கெட்டில் ஈடுபாட்டுடன் இருந்த ராகுல், தினமும் கிரிக்கெட் விளையாடிவிட்டு கை, காலில் அடிப்பட்டு வந்திருக்கிறார்.
ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாட வைத்தால், இந்தப் பிரச்சினை தீரும் என்று நினைத்த அவரது தந்தை விஜயகுமார், செஸ் விளையாடக் கற்றுக்கொடுத்திருக்கிறார். அன்று சாதாரணமாக செஸ் விளையாட கற்றுக்கொண்ட ராகுல், பிறகு அதிலேயே மூழ்கி, இன்று கிராண்ட்மாஸ்டர் என்ற நிலையைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
விளையாடத் தொடங்கிய சில மாதங்களிலேயே மாவட்டம், மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றிக்கொடி கட்டிய ராகுல், 2010-ல் 7 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய செஸ் போட்டியில் பங்கேற்றதுதான் குறிப்பிடும்படியான முதல் செஸ் போட்டி. தொடர்ந்து தேசிய அளவில் ஏராளமானப் பரிசுகளைப் பெற்றவர், இரண்டரை ஆண்டுகளாகச் சர்வதேசப் போட்டிகளிலும் முத்திரைப் பதித்து, இண்டர்நேஷனல் மாஸ்டராக உருவெடுத்திருக்கிறார்.
மலேசியா, எகிப்து, அபுதாபி, ஆஸ்திரியா எனத் தொடர்ந்து பல நாடுகளுக்கு பறந்தபடி இருக்கும் ராகுல், படிப்புக்கும் பங்கம் வராமல் பார்த்துக்கொள்கிறார். கிராண்ட்மாஸ்டர் நிலையைத் தொட்டுவிடுவேன் என்றும் உற்சாகமாகக் கூறுகிறார் ராகுல்.
“செஸ் போட்டியில் இன்டர்நேஷனல் மாஸ்டர், கிராண்ட்மாஸ்டர் என இரு வகை உண்டு. தற்போது இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆவதற்கான இரண்டாம் நிலையைத் தாண்டிவிட்ட நான், தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர்களை எதிர்த்து விளையாடி வெற்றி பெற வேண்டும்.
ஏற்கெனவே பல இன்டர்நேஷனல், கிராண்ட்மாஸ்டர்களை வென்றிருக்கிறேன். கிராண்ட்மாஸ்டர் என்ற நிலையை அடைய வேண்டுமென்றால், ஓராண்டில் 12 தொடர்களிலாவது பங்கேற்க வேண்டும். அப்படி விளையாடிப் புள்ளிகளைப் பெற்றதால்தான் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து கிடைக்கும். இன்னும் ஓராண்டுக்குள் அந்த நிலையை எட்டிவிடுவேன்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ராகுல்.
சர்வதேச அளவில் தொடர்ந்து செஸ் போட்டியில் பங்கேற்றுவந்தாலும் அரசுகள், செஸ் சங்கங்களின் உதவி ராகுலுக்கு இதுவரை கிடைக்கவில்லை. தன் தந்தையின் உதவியால் இந்த அளவு உயர்ந்துவந்திருப்பதாகக் கூறுகிறார் ராகுல். “ஒவ்வொரு முறையும் போட்டிக்கு செல்ல நிறைய பணம் செலவாகிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் என் அப்பாவின் ஏற்பாட்டில்தான் வெளியூர்களுக்கு செல்ல முடிகிறது.
இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும்வகையில் தொடர்ந்து செஸ் விளையாடி வரும் எனக்கு, அரசு உதவ முன்வந்தால் உதவியாக இருக்கும். ஸ்பான்சர்கள் கிடைத்தால்கூட போதும். செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம்” என்கிறார் ராகுல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT