Published : 01 Dec 2017 11:31 AM
Last Updated : 01 Dec 2017 11:31 AM
எ
னது முப்பதாண்டு காலக் கல்லூரி ஆசிரியர் வாழ்வில் பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். பல மாணவர்கள் படிக்கிற காலத்தில் அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பார்கள். கல்லூரிப் படிப்பு முடிந்து சென்ற பிறகு, அவர்களைப் பார்ப்பதோ தொடர்புகொள்வதோ அரிதாகிவிடும். இன்னும் சில மாணவர்கள், கல்லூரி படிப்பு முடிந்து மேற்படிப்புக்காகவோ வேலைக்கோ வெளி மாநிலம், வெளிநாடு சென்றாலும்கூட எப்போதும் ஏதோவொரு வகையில் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார்கள்.
என்னைக் கவர்ந்த மாணவர்கள் பற்றி யோசிக்கும்போது பல மாணவர்களின் முகங்கள் எனக்கு நினைவில் வந்து போகின்றன. ஆனாலும், பல நூறு மாணவர்களில் சட்டெனத் தனித்துத் தெரியும் இரு மாணவர்களை என் வாழ்வில் என்றும் மறக்க முடியாது.
முதல் மாணவன், மணியழகு. 1994-ல் விலங்கியல் துறையில் என் வகுப்பில் சேர்ந்தான். வகுப்பில் எப்போதும் ஆர்வமில்லாதவனைப் போல உட்கார்ந்திருப்பான். ஏதாவது கேட்டாலும் மவுனமாகவே இருப்பான். பல கிராமப்புற மாணவர்கள் படிக்கும் கல்லூரி அது. அவர்களின் குடும்பச் சூழல் காரணமாகப் பல மாணவர்கள் சற்று உள்ளொடுங்கியே இருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்களிடம் கூடுதல் அக்கறையோடு பேசுவது என் இயல்பு.
மணியழகோடு நான் எப்படியெல்லாமோ பேசிப் பார்த்தேன். ம்ஹூம், அவனது போக்கில் எவ்வித மாற்றமுமில்லை. இரண்டாண்டுகளில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தான். இதுகுறித்து மற்றொரு பேராசிரியரோடு கலந்து பேசினேன். பின் இருவரும் சேர்ந்து மணியழகிடம் பேசினோம். முதலில் அவனுக்குள் இருந்த தாழ்வுமனப்பான்மையைப் போக்கினோம். அவனாலும் மற்ற மாணவர்கள்போல் படிக்க முடியும் என்பதால் கொஞ்சம் முயற்சி செய் என்று தூண்டியதோடு, அவனைப் போல் தோல்வியடைந்த பல மாணவர்கள் கல்லூரி இறுதியாண்டில் சாதனை படைத்த சில சம்பவங்களையும் அவனிடம் பகிர்ந்து கொண்டோம்.
எங்களின் தொடர் உரையாடல் அவனின் மனநிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. மூன்றாமாண்டில் முந்தைய ஆண்டின் பாடங்களில் இரண்டைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களிலும் மறுதேர்வெழுதி, தேர்ச்சி பெற்றான். மூன்றாமாண்டு பாடங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றான். அவனுக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதையறிந்து, விளையாட்டு தொடர்பான படிப்பைத் தொடருமாறு கூறினோம். சென்னையில் விளையாட்டு தொடர்பான படிப்பை முடித்து, இன்றைக்குத் தென் மாவட்டத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணியாற்றி வருகிறான். இப்போதும் எங்கே பார்த்தாலும் அவன் என்மீது காட்டும் அன்பும் மரியாதையும் நெகிழ வைக்கும்.
உலகம் சுற்றும் மாணவன்
அடுத்தது, முருகன். 1999-ல் கல்லூரியில் படிக்க வந்தான். கருத்த உருவம், சற்றே முன்னே நீட்டிய பற்கள், வறுமையின் குறியீடாய் எப்போதும் முகத்தில் தொக்கி நிற்கும் பயம். இவைதான் முத்துவின் அடையாளம். போக்குவரத்தையே அறியாத சிற்றூரிலிருந்து தினமும் நடந்தே கல்லூரிக்கு வருவான். பேருந்துச் சலுகை கிடைத்ததும் அதில் வந்து சென்றான்.
என் வகுப்பின் முதல் நாளில் எல்லோரைப் பற்றியும் விரிவாக அறிமுகம் செய்துகொள்வது வழக்கம். பெயரையும் ஊரையும் மட்டுமே சத்தமேயில்லாமல் சொன்னான் முருகன். அருகில் சென்ற பின்னர், ‘எதிர்காலத் திட்டம் என்ன?’ என்றேன். என் கேள்விக்குப் பதிலேதும் சொல்லத் தெரியாமல் அமைதியானான். வகுப்பில் அமைதியாக இருப்பான்.
ஆனாலும், சிறுதேர்வுகளில் அவன் காட்டிய முனைப்பும் எதையும் அறிந்துகொள்ளத் துடிக்கும் ஆர்வமும் எனக்கு மிகவும் பிடிக்கும். வகுப்பிலிருந்த 25 பேரில் அவன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. முருகனிடமிருக்கும் தயக்கத்தையும் லேசான பயத்தையும் போக்கினால், அவனுக்குள்ளிருக்கும் சுடர் மேலெழும்பும் என்று எண்ணி, அதற்கான செயல்பாடுகளைச் செய்தேன்.
இரண்டாமாண்டில் முருகன் சக மாணவர்களோடும் ஆசிரியர்களிடமும் வெகு இயல்பாகத் பழகத் தொடங்கினான். மூன்றாம் ஆண்டு இறுதியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். வறுமையின் நெருக்குதலையும் மீறி முதுநிலைப் படிப்பில் சேர்ந்தான். பேராசிரியர் ஒருவரின் உதவியால் எம்.ஃபில். படிப்பையும் முனைவர் பட்டத்தையும் முடித்தான். பிறகு, தன் திசையைத் தானே தேர்ந்தெடுத்து, விடாமுயற்சியோடு இயங்கினான். அவனது தொடர் முயற்சியின் விளைவாக ஜப்பான் நாடு அவனை அரவணைத்தது. இன்றைக்கு கனடா, ஜப்பான் என உலகின் பல திசைகளில் தன் பயணத்தைத் தொடர்கிறான். செய்யாறுக்கு வரும்போதெல்லாம் மறவாமல் என்னை வந்து சந்தித்து அன்பைப் பரிமாறிப் போகும் முருகன் போன்ற மாணவர்களால் ஆசிரியர்களுக்கு என்றென்றும் பெருமை.
குரு - சிஷ்யன் உறவு என்பது படித்ததனால் வாய்த்த பதவி எனினும், அது நீடிப்பது மனிதத்தால் மட்டுமே என்பது என் உறுதியான எண்ணம்.
கட்டுரையாளர்: முன்னாள் விலங்கியல் துறைத் தலைவர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT