Published : 27 Oct 2017 11:38 AM
Last Updated : 27 Oct 2017 11:38 AM
மா
ணவர்களிடம் ஆசிரியர்கள் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்கிற கருத்துடையவன் நான். ஆனாலும், ஆசிரியரின் எதிர்பார்ப்பையும் மீறி, ஏதோ ஒரு மாணவர் ஆசிரியரிடம் இணக்கமாகவும் பல்வேறு திறமைகளுடனும் விளங்கும்போது மற்ற மாணவர்களைவிட, அந்த மாணவர் மீது கொஞ்சம் அதிக அன்பையும் பாசத்தையும் காட்டுவதை ஆசிரியர்களால் தவிர்க்க முடியாது. அப்படி என்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மாணவன்தான் ஜெயராஜ்.
பாடும் திறமை
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே உள்ள திருமுக்காடு எனும் கிராமம்தான் ஜெயராஜின் சொந்த ஊர். மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே தந்தையை இழந்தவன். அதன் பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தான். 1996-ம் ஆண்டில் என்னிடம் 9-ம் வகுப்பில் படித்தான். எனக்கு கீபோர்டு வாசிக்கத் தெரியும் என்பதால், பள்ளி பாடல் குழுவுக்குப் பொறுப்பாளராக இருந்தேன். பாடல் குழுவுக்கு மாணவர்களைத் தேர்வுசெய்த நேரத்தில்தான் ஜெயராஜ் எனக்கு நெருக்கமானான். ஜெயராஜுக்கு அப்படியொரு குரல்வளம். அவனது திறமையை அங்கீகரிக்கும் வகையில் பாடல் குழுவுக்கு அவனைத் தலைவனாக்கினேன். பள்ளியில் தொடங்கிய அவனது பாடல் பயணம் கல்லூரிவரை தொடர்ந்தது. 2000-2003 ஆண்டுவரை கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான பாடல் போட்டிகளில் தொடர்ந்து முதல் பரிசை வென்றான். திருச்சி வானொலியிலும் அவனது குரல் ஒலித்தது.
தொடர்ந்த உறவு
செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பை ஜெயராஜ் படித்தபோது, நான் பாண்டிச்சேரிக்கு மாறுதல் பெற்று போனேன். பல ஆண்டுகள் எங்கள் உறவில் இடைவெளி விழுந்தது. ஆனால், என்னைத் தேடிவந்து அந்த இடைவெளியை ஜெயராஜே ஒரு நாள் போக்கினான். படித்து முடித்த பிறகு வேலை இல்லாத சூழலில் காதல் திருமணம் செய்துகொண்டான். காதல் திருமணம் அவரது வாழ்க்கையில் நெருக்கடிகளைக் கொண்டுவந்தது. அதுவரை சினிமாவில் பாடகராக வேண்டும் என்பதுதான் அவனது கனவாக இருந்தது. ஆனால், காதல் திருமணத்துக்குப் பிறகு வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வைராக்கியம் அவனை வேறு பாதையில் ஓட வைத்தது. தொடக்கத்தில் கோயில் ஒன்றில் டீ, பிஸ்கட் விற்பனை செய்யும் கேன்டீன் ஒன்றை ஆரம்பித்து கடுமையாக உழைத்தான். பின்னர், மேற்படிப்புக்காக அந்தத் தொழிலை விட்டான். எம்.ஏ., எம்.எட். முடித்த பிறகு சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினான்.
தாக்குபிடிக்கும் திறன்
அதன் பின் தன் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக ஜெயராஜ் தொடர்ச்சியாகச் செய்துபார்த்த பல பரிசோதனை முயற்சிகள்தான் நான் அவனை நேசிக்க முக்கியக் காரணம். ஹாலோ பிளாக் தொழில், கேட்ரிங் சர்வீஸ், பயணவழி உணவகம், போட்டோ ஸ்டுடியோ, ஆடியோ சவுண்ட் சிஸ்டம் எனப் பல்வேறு தொழில் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துபார்த்தான். அத்தனையிலும் தோல்வி. குடும்பம், குழந்தைகள் எனப் பொறுப்புகள் வந்தபின்னும் சோதனை முயற்சிகள் தொடர்ந்தன. ஆனால், அவன் சோர்ந்துவிடவில்லை. தனது தொழில், குடும்பம், தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்வது ஜெயராஜின் வழக்கம். அப்போது எல்லாம், “விரைவாக உனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்” என்பதை மட்டும் அவனிடம் ஒவ்வொரு முறையும் சொல்வேன்.
பொய்த்துப் போகாத ஆசை
இன்று அப்படியொரு தனித்த அடையாளத்துடன்தான் ஜெயராஜ் இருக்கிறான். இன்று அவனுக்கு வெற்றிகரமான தொழிலதிபர், தன்னம்பிக்கை எழுத்தாளர், பேச்சாளர் எனப் பல முகங்கள் உண்டு. தொழில் நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறான். தமிழில் தலைமைத்துவம், வாழ்க்கைத் திறன்கள் பற்றி சொல்லித்தரும் ‘லைஃப் ஷைன் லீடர்ஷிப் பவுண்டேஷன்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறான். சினிமாவில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்கிற ஜெயராஜின் கனவு நிறைவேறினால், அவனது ஆசை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
கட்டுரையாளர்: பேராசிரியர், கல்வியியல் துறைத் தலைவர்,
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT