Published : 02 Mar 2018 10:51 AM
Last Updated : 02 Mar 2018 10:51 AM

குரு சிஷ்யன்: நட்சத்திரங்கள்் மத்தியில் ஒளிரும் நிலா!

 

றம் சார்ந்த கல்வியைச் சிறந்த ஆசிரியர் ஒருவரால் மட்டுமே வழங்க முடியும். 1990-ம் ஆண்டில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியேற்ற என் உள்ளத்தில் இந்த எண்ணம்தான் ஆழமாகப் பதிந்திருந்தது.

கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட எனது பேராசிரியப் பணியில் குறிப்பிடத்தக்க மாணவ - மாணவியர் எத்தனையோ பேர் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்கள். என்னிடம் பயிலும் எல்லா மாணவர்களுமே என்னிடம் அன்பு பாராட்டுபவர்களாகவே இருந்தனர்; இருக்கின்றனர். எத்தனையோ சம்பவங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. நட்சத்திரங்கள் மத்தியில் ஒளிரும் நிலவைப் போல அந்த ஒரு மாணவனை மட்டும் என்னால் என்றென்றும் மறக்க இயலாது. அவன்தான் மழவை சு.பெ.தமிழமுதன்.

2014-ம் ஆண்டில் பொறையாற்றுக்கு அருகிலுள்ள காராம்பள்ளம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பெரியார் ஈ.வெ.ரா. பிறந்த நாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக நான் சென்றிருந்தேன். அந்த விழாவில், இளைஞர் ஒருவன் துடிப்பாகப் பேசினான். மிக இளைய வயதில் பெரியாரியச் சிந்தனைகளை மிகவும் ஆழமாக அந்த இளைஞர் பேசியவிதம் வியப்பைத் தந்தது. அவன் யாரென்று விசாரித்தேன். ‘பொறையாறு கல்லூரி மாணவர்` என்று சொன்னார்கள். 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, எங்கள் கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும் மாணவன் என்று அறிந்துகொண்டேன்.

பெரியாரியம் கற்றறிந்த முதிர்ந்த தலைவனைப்போல், பெரியார் பற்றிய நிறைந்த தகவல்களோடும் அருமையான மொழிநடையோடும் காத்திரமான வீச்சோடும் அந்த நிகழ்வில் தமிழமுதன் பேசியது மிகவும் பிடித்திருந்தது. அன்று துளிர்த்தது எங்கள் ஆசிரியர் - மாணவர் உறவு. பெரியார் தொடர்பான எந்தவொரு செய்தியையும் அவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற அளவுக்கு அதில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். வாசிப்பதிலும் நூல்கள் வாங்குவதிலும் மிகுந்த ஆர்வமாய் இருந்தான். ‘பெரியாரின் பேரன்’ என்றுதான் தன்னுடைய உரையை அவன் தொடங்குவான். கறுப்புச் சட்டைதான் எப்போதும் அணிவான். பெரியாரை வெறும் வார்த்தையாக இல்லாமல் முழுமையாக உள்வாங்கியிருந்தான் தமிழமுதன்.

தனது விடுதி அறையில் பெரியாரின் பெரிய படத்தை ஒட்டி வைத்திருந்தான் (மற்ற மாணவர்களின் அறையைப் பெரும்பாலும் நடிகர், நடிகைகளின் படங்களே அலங்கரித்திருந்தன). தன்னுடன் பயின்ற மாணவர்களோடு, தொடர்ந்து உரையாடி, அவர்களையும் பகுத்தறிவாளர்களாக மாற்றினான். இறை நம்பிக்கை இருந்த இடத்தில், அறிவை முதன்மைப்படுத்திய வித்தியாசமான மாணவனாக தமிழமுதன் என் கவனத்தில் பதிந்தான்.

கல்லூரி தொடங்கி மாநில அளவிலான பேச்சுப் போட்டிவரை கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்திருக்கிறான். தமிழமுதன் பங்கேற்கும் போட்டிகளில் பெரும்பாலும் முதற்பரிசு அவனுக்கானதாகவே இருந்தது. எந்தக் குறிப்பும் இன்றி மணிக்கணக்காகப் பேசக்கூடிய நினைவாற்றல் உடையவனாக அவன் இருந்தான். பேச்சு இன்றைக்குப் பெரும் வியாபாரமாகிவிட்ட சூழலில், சமூக மாற்றத்துக்கு எதிரான ஒரு சொல்லைக்கூட அவன் உச்சரித்து நான் கேட்டதில்லை. கொள்கை வழிசார்ந்து பேசுகிற இளைஞனாக அவன் திகழ்ந்தான். எளிய குடும்பத்திலிருந்து வந்த அவன், தனது பரிசுத் தொகையைக் கொண்டே மூன்றாண்டு படிப்பையும் முடித்தான். கல்லூரி ஆண்டு மலரில் அவனைப் பற்றிய செய்திகள் மிகுந்திருந்தன.

பெரியாரிய இயக்கமொன்றில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாகச் செயலாற்றிய அவன், மாணவர்களின் பல்வேறு உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைத்தான். தன் சொந்த முயற்சியில் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு பிரச்சாரப் பயணத்தைத் தமிழகம் முழுவதும் மேற்கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாகக் கவிதை பழகினான். ‘புதிய கோடாங்கி’யில் அவன் எழுதிய, ‘நீங்கள் நிர்பயாக்கள்; நாங்கள் நந்தினிகள்’ என்ற கவிதை மிகுந்த கவனம் பெற்றது. எனது நட்பின் மூலம் அண்ணல் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் குறித்தும் வாசிக்கத் தொடங்கினான்.

தரங்கம்பாடி கடற்கரையில் தினமும் மாலை நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது எனது வழக்கம். அப்போதெல்லாம் என்னோடு உரையாடியபடி வருவான். எல்லா ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கொதித்தெழுகிற மனநிலை அவனுடையதாய் இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் என்னோடு தொடர்பில் இருந்தான். அலை பேசியில் அழைத்து, தகவல்களைப் பகிர்ந்துகொள்வான். உற்சாகத்தோடு இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.

ஒருநாள் கைபேசியில் என்னை அழைத்து, “அய்யா, நான் இயக்கத்திலிருந்து வெளியேறி விட்டேன்…” என்றான். “ஏன் இந்த முடிவு..?” என்று கேட்டேன்.

“இங்கேயும் மேல் கீழ் என்று பார்க்கிறார்கள்…” என்றான்.

‘சாதி என்பது ஒரு மனநிலை’ என்பார் அம்பேத்கர். அது இங்கு யாரைத்தான் விட்டுவைத்தது?

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x