Published : 22 Aug 2025 11:55 AM
Last Updated : 22 Aug 2025 11:55 AM
சென்னையில் கடற்கரை, தியேட்டர்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் என இளைஞர்கள் சந்திக்கும் இடங்கள் எல்லாம் மலையேறிவிட்டன. இப்போது இளைஞர்கள் சந்திக்க வேண்டும், ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று யோசித்தாலே நீண்டுகொண்டே செல்லும் மால்கள் தொடங்கி விதவிதமான காபி ஷாப்கள், ரிசார்ட்டுகள், தீம் பார்க்குகள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், பைக்குகள் சீறிச் செல்லும் ஈ.சி.ஆர். சாலை போன்றவற்றைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஏசி மால்களில் உலா: சென்னை மெரினா கடற்கரை அந்தக் காலம் முதலே சந்திப்புகளுக்கான முக்கிய இடமாக இருந்துவருகிறது. இப்போதும் இளைஞர்களின் சந்திக்கத் திட்டமிடும் இடங்களில் மெரினா, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை போன்றவை இருந்தாலும், முன்புபோல மணிக்கணக்கில் இளைஞர்கள் அங்கே ஒன்றுகூடி அரட்டையடிக்க விரும்புவதில்லை. இளைஞர்கள் அங்கே நீண்ட நேரம் இருக்க காவலர்களும் விடுவதில்லை. எனவே, அந்த இடங்களைப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் கைப்பற்றிவிட்டன.
சுவையாகச் சாப்பிட பல நாட்டு நொறுக்குத் தீனி, சாப்பாட்டுக்கு நேரமாச்சே என்று நினைக்காமல் இருக்க விதவிதமான ஹோட்டல்கள், ஹாயாக சினிமா பார்க்க மினி தியேட்டர்கள், ஜாலியாகப் பொழுதுபோக்க விதவிதமான விளையாட்டுகள் என ஒரு புத்தம் புது உலகம் மால்களில் கிடைத்தால், இளைஞர்கள் சும்மா விடுவார்களா? இப்படிச் சகல வசதிகளும் உள்ள மால்கள்தான் இன்று சென்னை இளைஞர்களின் ஃபேவரைட் சந்திப்பு மையம்.
முழுவதும் குளிரூட்டப்பட்ட மால்களில் கும்பலாகக் கூடிப் பேசியபடியே சுற்றுவதை ஹாபியாக வைத்திருப்போர் ஏராளம். அதற்கேற்பச் சிறிதும் பெரிதுமாகச் சென்னையின் எல்லா இடங்களிலுமே மால்கள் இன்று முளைத்துவிட்டன.
பொழுதுபோக்கு ரிசார்ட்: சென்னையில் இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஓரிடத்தில் இணைக்கும் மையப் புள்ளியாக ரிசார்ட்டுகள் மாறி வருகின்றன. ‘சென்னையின் ஐ.டி. காரிடர்’ என்றழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு (ஓ.எம்.ஆர்.) இணையாக உள்ள ஈ.சி.ஆர். சாலை இந்த ரிசார்ட்டுகள் நிறைந்திருக்கிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் மட்டுமல்ல, பல துறைகளிலும் பணியாற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் வார இறுதி நாட்களை உற்சாகமாகக் கழிக்க ரிசார்ட்டுகளையே தேர்வு செய்கிறார்கள்.
ரிசார்ட்டுகளில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரையில் அமர்ந்து அரட்டையடிப்பது, படகு சவாரி செய்வது, விதவிதமான உணவு வகைகளை வரவழைத்து சாப்பிடுவது, விளையாடி மகிழ்வது, சீறிப் பாயும் பைக்குகளில் அருகே உள்ள சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றுவருவது என மொத்தமாகத் தங்களை மறந்து மனதைப் புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்ள பல அம்சங்கள் இங்கே இருக்கின்றன.
காபி ஷாப்கள்: இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கவும் ஆசை தீர மணிக்கணக்கில் பேசவும் காஃபி ஷாப்களையும் தேர்வு செய்கிறார்கள். சென்னையில் நூற்றுக்கணக்கான காபி ஷாப்கள் வந்துவிட்டன. சூரியன் உதிக்கும் பொழுதில் தொடங்கப்படும் காபி ஷாப்கள் இரவு 11 மணி வரை பரபரப்பாகவே காட்சியளிக்கின்றன. நண்பர்கள், காதலர்கள், பிசினஸ் பேச என வந்துகொண்டே இருக்கிறார்கள்.
காபி ஷாப்களில் இன்னொரு வசதியும் உள்ளது. ஒரு காபியோ கூல் டிரிங்க்ஸோ வாங்கி விட்டு, மணிக்கணக்கில் அரட்டை அடிக்கலாம். அந்நியர்களின் பிரவேசம் கிடையாது, உறுத்தலான பார்வைகள் கிடையாது. அடுத்தவர் வேலையில் இடைஞ்சல்கள் என்கிற பேச்சுக்கு இடமில்லை.
சென்னை நடை! - சென்னையில் பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடிச் செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் சென்னையின் வேர்களைத் தேடிசெல்லும் இளைஞர்களும் தற்போது பெருகி வருகிறார்கள். இதற்கென்றே பாரம்பரிய நடை, மரபு நடை போன்ற பெயர்களில் குழுக்களும் இயங்கிவருகின்றன. இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளோர் சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைத் தேடிச் செல்கிறார்கள்.
வடசென்னை, சென்னை துறைமுகம், புனித ஜார்ஜ் கோட்டை என பல்வேறு நடைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு பகுதியின் வரலாற்றை, ஆளுமை களை, அடையாளங்களைத் தெரிந்து கொள்ள நடை செல்வது மட்டுமில்லாமல், உணவு நடை, பண்பாட்டு நடை என்று நடைகள் விரிவடைந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT