Last Updated : 14 Feb, 2025 10:40 AM

 

Published : 14 Feb 2025 10:40 AM
Last Updated : 14 Feb 2025 10:40 AM

நட்பு நட்புதான்... காதல் காதல்தான்! | காதலர் தினம் ஸ்பெஷல்

‘லவ் ஆச்சு நட்பில்லையே... நட்பாச்சு லவ் இல்லையே’ - 2000ஆம் ஆண்டுகளின் இறுதியில் பட்டித்தொட்டி எங்கும் ரிங்டோனாக, காலர்-டியூனாக சக்கைப்போடு போட்ட ‘ஜூன் போனால் ஜூலை காற்றே’ என்கிற பாடலின் வரிகள் இவை. ‘ஆட்டோகிராஃப்’, ‘பிரியமான தோழி’ போன்று ஆண்-பெண் நட்பு உறவைக் கொண்டாடியத் தமிழ்ப் படங்கள் சில உள்ளன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தப் படங்களில் ஆண் பெண்ணுக்கு இடையேயான நட்பு, காதலாக மாறாது. ‘நட்பு வேற, காதல் வேற’ எனப் பிரித்துப் பார்த்து நட்பில் மரியாதை, அன்பு, உரிமை கலந்தும்; காதலில் தயக்கம், பாசம், ஸ்பரிசம் கலந்தும் இருந்ததுதான் வழக்கம். அதையும் தாண்டி 90களில் நட்பே காதலான கதைகளையும் பார்த்திருப்போம். இதன் புதிய பரிமாணம்தான் சிச்சுவேஷன்ஷிப் (situationship) என்கிறார்கள் 2கே கிட்ஸ்.

அதென்ன சிச்சுவேஷன்ஷிப்? - காதலிப்பது வீட்டில் தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காகக் காதலிக்கு ‘அருண்’ என்கிற பெயரையும், காதலனுக்குப் ‘பிரியா’ என்கிற பெயரையும் செல்போனில் பதிவுசெய்து தப்பிப் பிழைத்து காதல் செய்தது முந்தைய தலைமுறை. அதிகபட்சமாக ‘பேபி’, ‘டார்லிங்’, ‘செல்லம்’ எனக் ‘கொஞ்சல்ஸ்’ மொழி இருந்தது. இந்தத் காலத்து காதலில் ‘லவ்வர்’ என்பவரையே ‘பே’, ‘ஹப்ஸ்’, ‘ஸ்வீட்ஸ்’, ‘சுகர்’ போன்று பல பெயர்களில் அழைத்துக் கொஞ்சுகிறது.

அந்தக் காலத்தில் ‘லவ் செட் ஆகும், ஆகாது’ என்கிற இரண்டே ஆப்ஷன்தான். ஆனால், இன்றோ காதல் உறவுக்குள் இருக்கும் வெவ்வேறு சாதக பாதகங்களைப் பொறுத்து ‘ரெட், பச்சை, நீலம்’ எனப் பல்வேறு வண்ணங்களில் வகைப்படுத்தி அவற்றைக் ‘கொடிகள்’ என்றும் அழைக்கிறார்கள், 2கே கிட்ஸ். இப்படிக் காதலும் காதல் உறவுகளும் பல மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றன.

அப்படி ‘நட்புக்கு ஒரு படி மேலே, ஆனால் காதலுக்கு ஒரு படி கீழே’ என்கிற அளவில் இருப்பதுதான் சிச்சுவேஷன்ஷிப்! அதென்ன சிச்சுவேஷன்ஷிப்? நமக்குத் தெரிந்தது எல்லாம் ‘மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப்’தான் என நீங்கள் நினைப்பது புரிகிறது. அதாவது, ஆண் - பெண் இருவர் நட்பாக இருக்கலாம், காதலிக்கவும் செய்யலாம். ஆனால், காதலின் அடுத்தக் கட்டமாக திருமணம், வாழ்நாளுக்குமான ‘கமிட்மெண்ட்’ எல்லாம் இந்த உறவில் இருக்கக் கூடாது என்பதுதான் இதில் சொல்லப்படாத விதி.

எந்தவோர் எதிர்ப்பார்ப்பும் திட்டமும் இல்லாமல் போகும் வரை காதலிக்கலாம் என்பதுதான் ‘கான்செப்ட்’. ‘செட்’டானால் ஒரு வேளை அந்தக் காதல் திருமணத்தில் முடியலாம். ‘செட்’ ஆகவில்லை என்றால், அந்தக் காதல் ‘ஸ்லோ ஃபேடு’ (slow fade) ஆகலாம், ஒருவர் இன்னொருவரை ‘ghost’ செய்யலாம். ‘ஸ்லோ ஃபேடு’ என்றால் மெல்ல விலகிக்கொள்ளலாம். சட்டென்று காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ‘எஸ்கேப்’ ஆகிவிடுவதுதான் ‘கோஸ்ட்’. இதற்குதான் ‘சிச்சுவேஷன்ஷிப்’ என்று திருநாமம் சூட்டியிருக்கிறார்கள்.

நட்பும் காதலும் தனித்தனியாக இருந்தபோதே 90’ஸ் கிட்ஸால் சமாளிக்க முடியவில்லை. நட்பில் காதல், காதலில் நட்பு என்கிற இந்தக் குழப்ப மனநிலையை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ, இந்த ஈராயிரக் குழவிகள். இந்தக் காதலர் தினத்தில் ‘கோஸ்ட்’ ஆகாமல் இருக்க சார்ந்தோருக்கு வாழ்த்துகள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x