Published : 08 Jun 2018 11:36 AM
Last Updated : 08 Jun 2018 11:36 AM
“சா
ர், நீங்க கிளாஸ் எடுத்தா, நாள் முழுக்க உட்கார்ந்து கேட்க ரெடி”; “உங்களபோல உண்டுங்களா”, “நீங்க வந்தாதான் சபையே நிறையுது” - இந்த மாதிரி ஐஸ்கீரிம் வார்த்தைகளைக் கல்லூரியில் அடிக்கடி எதிர்கொள்வேன். நீங்களும்கூட எதிர்கொண்டிருக்கலாம். இந்த வார்த்தைகள் ஒன்றைதான் குறிக்கின்றன, அது முகஸ்துதி!
சிலருக்கு இந்த மாதிரி வாழ வேண்டும்; அந்த மாதிரி வாழ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தனியாத தாகமாக இருக்கும். இந்த எதிர்பார்ப்பு சிலருக்கு உண்மையான உழைப்பால் கிடைத்து விடும். உண்மையான உழைப்புக்கு நெருக்கமாக இல்லாமல் உயர நினைப்பவர்களும் உண்டு. இந்த ரகத்தினர் பெரும்பாலும் கையில் எடுப்பது முகஸ்துதியைத்தான்.
ஆளுக்கு தகுந்தாற்போல முகஸ்துதி பாட தயங்கவே மாட்டார்கள். எதை எடுத்தாலும் ஜால்ரா தட்டுவார்கள். ஒருவரை புகழ்ச்சியால் குளிப்பாட்டி தங்களைப் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் மத்தியில் வளர்த்துக்கொள்வார்கள். அப்படி வளரும் மதிப்பு நிலையானதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் பாதாளத்தில் தள்ளிவிடும். இதற்கு உதாரணமாக என்னிடம் படித்த மாணவனின் கதையையே சொல்லலாம்.
முகுந்த், இன்னிக்கும் நினைவில் நிற்கிற மாணவன். தலையில் தூக்கி ஐஸ்ஸையே வைத்துவிடுவான். “சார் நீங்க வகுப்பு எடுக்கிறதாலதான் இந்தப் பாடம் ரொம்ப பிடிக்குது”என்று என்னிடம் மட்டுமல்ல, எல்லா பேராசிரியர்களிடமும் சொல்லிச் சிரிப்பான். அந்த அளவுக்கு முகஸ்துதியில் முகுந்த் எக்ஸ்பர்ட்.
“இப்படியெல்லாம் பேசினால்தான், அடுத்த லெவலுக்குப் போக முடியும்” என்று அடிக்கடி சொல்லும் முகுந்தைப் பார்த்து, “இதுவல்லவோ லட்சியம்” என்று சக மாணவர்கள் கலாய்ப்பார்கள்.
புராஜெக்ட் பற்றி வகுப்பெடுத்தால் போதும்; “சார், நீங்க புராஜெக்ட் பண்ண சொல்லித்தரும் விதம் இருக்கே, அடடா..!” என ஆரம்பிப்பான். இப்படி மிகைப்படுத்தி பேசும்போது பலமுறை முகுந்தைக் கண்டித்திருக்கிறேன்; அறிவுரையும் கூறியிருக்கிறேன். அன்று ஒரு நாள் அவனது கட்டுக்கடங்காத புகழுரை கோபத்தை மூட்டியது. அதனால் கொஞ்சம் கடுமையாக முகத்தைக் காட்டிவிட்டேன். அதன் பிறகு என்னிடம் அப்படிப் பேசுவதை நிறுத்திக்கொண்டான். ஒரு வழியாகப் படிப்பையும் முடித்து சென்றுவிட்டான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, புதிதாக கார் வாங்குவதற்காக ஒரு கார் ஷோரூமுக்குப் போயிருந்தேன். அங்கே நுழைந்ததும் அங்கிருந்த மேலாளர், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“சார், என் தம்பி உங்க மாணவன்தான். உங்கள எனக்கு நல்லா தெரியும்” என்று பேச ஆரம்பித்தார். கார் வாங்குவது தொடர்பான விஷயங்கள் முடிந்த பிறகு, அங்கிருந்து புறப்படத் தயாரானேன். அப்போது அந்த மேலாளர் என்னிடம் வந்து “உங்க ஸ்டூடண்ட் முகுந்த் தெரியுமில்லையா? என் தம்பியோட கிளாஸ்மேட்தான்” என்றார்.
“நல்லா தெரியுமே, நாலு ஆண்டுக்கு முன்னால் இந்த ஷோரூமில் உதவி மேலாளரா இருக்கேன்னு சொன்னதா ஞாபகம்” என்றேன்.
“சரிதான் சார், இப்ப எங்க இருக்காருன்னு தெரியல” என்று அவர் பீடிகை போட்டவுடன் எனக்கு அதிர்ச்சியானது.
“ஏன் என்னாச்சு? இப்போ எங்க இருக்கான்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டேன்.
“வேலைக்கு சேர்ந்த உடனே சிலர் வேலையைக் கத்துகிட்டு முன்னுக்கு வர நினைப்பாங்க. ஆனா, முகுந்த் இதில் தலைகீழ். எந்த உயரதிகாரியைப் பிடிச்சு ஐஸ் வைச்சா, கம்பெனியில் முன்னேறலாம் என்று செயல்பட்டார். உயரதிகாரிளைக் கண்டால் புகழ்ந்துகொண்டே இருப்பது, அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதையே வேலையாக வைச்சிருந்தார். எப்படியோ காக்கா புடிச்சு 10 கிளைகளுக்கு மண்டல உதவி மேலாளரரா ஆனார். எங்க எல்லோருக்குமே பெரிய ஆச்சர்யமா இருந்துச்சு. ஆனா, கொஞ்ச நாளில் அவரது சாயம் வெளுக்க ஆரம்பிச்சிடுச்சு. பொறுப்பு எடுத்துகிட்ட பிறகு அவரால சமாளிக்க முடியல. கம்பெனிக்குக் கிடைச்ச ஆர்டரை சரியா முடிக்கத் தெரியமா சொதப்பிட்டாரு.
அதனால நிர்வாகத்தோட கோபத்துக்கு ஆளாகி, இரண்டு மாசத்துக்கு முன்னாடி ராஜினாமா பண்ற நிலைமை ஆயிடுச்சு. இப்ப என்ன பண்றாரு, எங்க இருக்காருன்னு தெரியலை” என்று வருத்தமான குரலில் சொன்னார்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் மேலாளரிடமிருந்து விடைபெற்று நகர்ந்தேன். கல்லூரிக் காலத்தில் முகுந்த் அடித்த முகஸ்துதிகள் ஞாபகத்துக்கு வந்தன. “வேலைக்குப் போயும் அவன் மாறவே இல்லை போலும்” என்று நினைத்துக்கொண்டே வீட்டுக்கு வந்தேன்.
முகஸ்துதியை மட்டும் நம்பினால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதை அதிக விலை கொடுத்து கற்றுகொண்டு விட்டான் முகுந்த். முகஸ்துதி, எப்போதும் யாரையும் உயர்த்திவிடாது. அது உயரத்தில் வைத்திருப்பதைப் போன்று நம்ப வைக்கும், அவ்வளவே. எப்போதும் முகஸ்துதியால் முன்னேறுபவன் மட்டுமல்ல, முகஸ்துதியை நம்புபவனும் அறிவை இழப்பான்; கெட்டும் போவான். முகஸ்துதிக்கு ஒரு நாளும் அடிமையாகக் கூடாது!
(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர்: பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT