Published : 25 May 2018 11:37 AM
Last Updated : 25 May 2018 11:37 AM
ஐ
பிஎல் கிரிக்கெட்டில் தமிழ் கமெண்ட்ரி கொடுக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என ஒரு பட்டாளமே இறங்கியிருக்கிறது. இதுவரை ஆங்கிலத்தில் புரிந்தோ புரியாமலோ கமெண்ட்ரி கேட்டுவந்தவர்கள், தமிழ் கமெண்ட்ரியின் வரவால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ் கமெண்ட்ரியில் அசராமல் அடித்துவிளையாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், நையாண்டித்தனமாகப் பேசும் ஆர்.ஜே. பாலாஜி இருவரிடமும் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் கமெண்ட்ரி, கிரிக்கெட், ஐபிஎல் பற்றி பல விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.
கலகலப்பா கமெண்ட்ரி
ஆங்கிலத்திலும் தமிழிலும் கமெண்ட்ரி செய்வதில் என்ன வித்தியாசம் என ஸ்ரீகாந்திடம் கேட்டதும், “ஆங்கிலம், தமிழ் பெரிய வித்தியாசமில்லை. ஆங்கிலத்தில் சாதாரணமா பேசுவதைப் போலத்தான் தமிழில் செய்கிறேன். ஆனால், அதை என்னோட ஸ்டைலில் பேசுகிறேன். எப்பவும் கலகலப்பாக இருப்பது என்னுடைய பழக்கம். அந்தக் கலகலப்பைத் தமிழ் கமெண்ட்ரியிலும் கொடுக்கிறேன். தமிழ் கமெண்ட்ரிக்காகப் பிரத்யேகமாக எந்தப் பயிற்சியும் செய்வதில்லை. எப்பவும் கமெண்ட்ரியை எனர்ஜியா செய்யணும்னு நினைப்பேன். அதுதான் என்னோட கொள்கை. என்னுடைய பேட்டிங் ஸ்டைல் மாதிரியே தமிழ் கமெண்ட்ரியையும் செய்கிறேன்” எனப் படபடத்தார் ஸ்ரீகாந்த்.
சினிமா படங்களை மேற்கோள் காட்டி கமெண்ட்ரி செய்வதில் ஆர்.ஜே. பாலாஜி ரகளை செய்கிறார். “ஏன் இப்படி” என்று கேட்டதும் கலகலவெனச் சிரிக்கிறார். “கிரிக்கெட் பார்க்குறப்ப நண்பர்களோட சேர்ந்து பார்க்குற அனுபவத்தைக் கொடுக்கணும். அதுதான் என்னோட விருப்பம். ஃபீல்டிங் செய்துவிட்டு இரண்டு வீரர்கள் கையைப் பிடிச்சு தட்டிக்குவாங்க. ‘இணைந்த கைகள்’ படத்தில் வரும் ராம்கி, அருண்பாண்டியன் போல தட்டிக்குறாங்க என்று சொல்லிவிடுவேன்.
அடிக்கடி ராயுடு ரன் அவுட் ஆகிடுறாரு என்று கமெண்ட்ரியில் கருத்து சொல்வார்கள். ‘வடக்குப்பட்டி ராமசாமி முகத்தில் முழிச்சிட்டு’ வந்திருப்பார்ன்னு டக்குன்னு சொல்லிவிடுவேன். ரெண்டு பேர் உருண்டு புரண்டு பந்தைத் தடுத்தால் ‘சூர்யா - தேவராஜ்’ மாதிரி தடுக்குறாங்கன்னு சொல்வேன். சினிமாவில் பார்த்த, மக்களுக்கு ரொம்ப பரிச்சயமான விஷயங்களைச் சொல்றப்ப, அது எளிதில் அவர்களைச் சென்றடையும். இதுக்கெல்லாம் எதுவும் பயிற்சி எடுப்பதில்லை. கிரிக்கெட் களத்துக்கு ஏற்றாற்போல திருக்குறள்கூட சொல்வேன்” என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
மல்கோத்ராஜி மந்திரம்
என்னதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி மேல் வெற்றி பெற்றாலும், ‘வயதானவர்கள் அணி’ என்று கிண்டல் செய்கிறார்களே என்று கேட்டதும் ஸ்ரீகாந்திடமிருந்து சட்டெனப் பதில் வந்தது. “சிஎஸ்கே கலக்குறாங்கப்பா. செமையா சாத்துறாங்க. ராயுடு, தோனியின் பேட்டிங் ஸ்டைலைப் பாருங்க. அவுங்க ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. இருவரும் பிரமாதமாக விளையாடுறாங்க. எப்பவும் அனுபவம்தான் தேவை. அனுபவம் வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தது சரின்னு தற்போது அவர்கள் நிரூபிச்சிருக்காங்களா இல்லையா?” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் ஸ்ரீகாந்த்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போதெல்லாம் ஆர்.ஜே. பாலாஜி ‘ஹூடிபாபா’ என்று கத்திக்கொண்டேயிருப்பதைப் பார்த்திருப்போம். ‘ஹூடிபாபா’ன்னா என்ன என்று அவரிடமே கேட்டோம். “ஹூடிபாபான்னா எந்த அர்த்தமும் இல்லை. அது ஒரு மந்திரம். அந்த மந்திரத்தைப் போட்டா மேட்ச் ஜெயிக்கலாம்னு எனக்கு நம்பிக்கை. சிலர் இடத்தை மாத்தி உட்கார்ந்தவுடனேயே எதிரணி வீரர்கள் அவுட் ஆவதாக நினைப்பார்கள். அதுபோலத்தான் ஹூடிபாபா நான் கண்டுபிடிச்ச மந்திரம். ‘மல்கோத்ராஜி மந்திரம்’ன்னு இன்னும் நிறைய மந்திரம் கைவசம் இருக்கு” என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
யாருக்கு ஜெயம்?
கமெண்ட்ரி அறைக்குச் செல்லும் அவசரத்தில் இருந்த ஸ்ரீகாந்திடம் ‘எந்த அணி கோப்பையை வெல்லும், சென்னை அணியில் தமிழ் ஆட்களை பார்க்க முடியவில்லையே’ எனக் கேள்விகளை அடுக்கினோம். “சிஎஸ்கே அணிதான் கண்டிப்பா ஜெயிக்கும். நீங்க எழுதி வைச்சுகோங்க. அப்புறம், இது ஒரு நிறுவனத்தோட (ஃபிரான்சைஸ்) அணி. அதுல தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாகியிருக்கிறார்களே. அதையும் நாம் பார்க்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
‘கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் அதிகமாகத் தெரியாமல் கமெண்ட்ரி செய்வது கஷ்டமாகத் தெரியவில்லையா, ரவீந்திர ஜடேஜாவை அடிக்கடி குறைகூறுவது பற்றி மற்றவர்கள் எதுவும் சொல்லவில்லையா’ என ஆர்.ஜே. பாலாஜியிடம் கேள்விகளை முன்வைத்தோம். “புள்ளிவிவரங்கள் தெரியாமல் கமெண்ட்ரி செய்கிறேன் என்பது தவறானது. கிரிக்கெட் விதிமுறைகள், கிரிக்கெட்டின் அடிப்படை தெரிந்துதான் கமெண்ட்ரி செய்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட்டை கவனித்துவருகிறேன்.
ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங் என இரண்டுமே சரியில்லை. ஆனா, ஒவ்வொரு போட்டியிலும் வாய்ப்பு கிடைக்குது. மேட்ச் பார்ப்பவர்களுக்கே இது எழும் கேள்விதான். மக்களுக்கு எழும் கேள்வியை அவர்கள் சார்பாக கமெண்ட்ரியில் சேர்க்கிறேன். மற்றபடி ஜடேஜாவைக் கிண்டல் எதுவும் செய்யவில்லை பாஸ்" என்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
புது ஹீரோயின்களுடன் மட்டுமே நடிக்க என்ன காரணம்? - விஜய் ஆண்டனி விளக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT