Last Updated : 30 Mar, 2018 10:15 AM

 

Published : 30 Mar 2018 10:15 AM
Last Updated : 30 Mar 2018 10:15 AM

குரு - சிஷ்யன்: கவிதையாக வாழ்ந்த மாணவன்!

ச்சையப்பன் கல்லூரியில் படித்தால் திரைப்படத் துறைக்குப் போய்விடலாம் என்றொரு காலகட்டம் இருந்தது. அக்கல்லூரியில் படித்த கவிஞர் வைரமுத்து திரைப்படத் துறையில் தமக்கென்று தனி அடையாளத்தை ஆழமாகப் பதித்திடவே, அக்கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களிடம் வளர்ந்தது. இளங்கலைத் தமிழ் மற்றும் முதுகலைத் தமிழ்ப் படிக்க வந்த பலரும் கவிஞர்களாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு, படிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு ‘படிக்கட்டும் பைந்தமிழ்ப் பாடும் பச்சையப்பன் கல்லூரி’யில் கால் பதிக்கத் தொடங்கினார்கள்.

அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் கவிஞர் வைரமுத்து, கபிலன், நா.முத்துக்குமார், இளைய கம்பன். இவர்களுக்குப் பாடம் நடத்திய அனுபவம் எனக்கு உண்டென்றாலும், இவர்கள் தங்கள் திறமையால் வளர்ந்து திரைப்படத் துறையில் வெற்றி கண்டவர்கள்.

இவர்களில் நா.முத்துக்குமார் மட்டும் தனித்து நின்றவர். காரணம், மேலே சொன்னவர்களில் இவர் மட்டும்தான் முனைவர் பட்டம் பெற்றவர். வகுப்பறையில் காட்டும் அமைதியும் அடக்கமும் அவரை முன்னிறுத்தும். என் மாணவனாக 1993-95 ஆண்டுகளில் படித்தார். வகுப்பறையில் நுழைந்த முதல் நாள், அவரது நீண்ட முகமும் குறுந்தாடியும் கொண்ட தோற்றத்தில் என்னை ஈர்த்தார். மாணவப் பருவத்தின் தோற்றமே இறுதிவரை அவரது புறத்தோற்றத்தில் தெரிந்தது. அகத்தோற்றத்தில் ஆழமிக்க கற்பனை கொண்டவராகவும் இருந்தவர் முத்துக்குமார். நான் பாடம் நடத்தும் பாணியும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு நாள் வகுப்பு முடிந்து வெளியே வரும்போது, “இவ்வளவு ‘அப்டேட்’டாக இருக்கிறீர்களே. உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, சார்” என்று முத்துக்குமார் என்னிடம் சொன்னார். அவரும் தீவிரமாக வாசிப்பை நேசிப்பவர் என்பதைப் பின்னாளில் அறிந்துகொண்டேன். புத்தகக் கண்காட்சி வந்தால் போதும்; கை நிறைய அல்ல. பை நிறைய புத்தகங்களை வாங்கி வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.

இன்னொரு நாள், புத்திலக்கியங்கள் பற்றிய விமர்சனங்களைத் திறனாய்வு செய்வது தொடர்பாக வகுப்பில் பாடம் நடத்தினேன். சில நேரம் முத்துக்குமார் கேட்கும் கேள்வி என்னைத் திக்குமுக்காடச் செய்தது உண்டு. எதையேனும் மேற்கோளாகக்காட்டி அவர் இப்படிச் சொல்லி இருக்கிறார். இவர் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று சொல்லித் தப்பித்துக்கொண்டதோடு, முத்துக்குமாரின் கருத்து என்ன என்று வகுப்பு இடையே கேட்டு வைப்பேன்.

சில நேரத்தில் மோன நிலையிலிருந்து விடுபட்டுப் பதில் சொல்வார் அடக்கமாக – ஆரவாரமின்றி! அவர் கருத்தை ஏற்று அப்படியும் சொல்லலாம் என்று கூறி வகுப்பை நிறைவு செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. கூர்மையான கேள்விக் கணைகள் அவரிடமிருந்து வரும். வகுப்பறைக்கு வருவது அரிதாகிப்போன காலங்களும் உண்டு. அப்போதெல்லாம் குறும்படத் தயாரிப்பில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார் என்று தெரியவந்தது.

ஒரு நாள் வகுப்பில், “குறும்புதினங்களுக்கும், புதினங்களுக்கும் வித்தியாசம் என்ன?” என்று கேட்டார். சில ஆங்கில மேற்கோள்களைக் காட்டி, உதாரணம் சொன்னேன். அடுத்த நாள் வகுப்பறையிலும் அந்த சர்ச்சை தொடர்ந்ததைப் பல ஆண்டுகளுக்குப் பின் மலரும் நினைவாக என்னிடம் உரையாடி ஞாபகப்படுத்தினார்.

முதுகலைத் தமிழ் முடித்த பின்னர், என்னிடம் அவர் ஆய்வு நிறைஞர் பட்டத்துக்குப் பதிவு (எம்.ஃபில்) செய்துகொள்ள விரும்பினார். அதுவும் இக்கால இலக்கியத்தில் செய்ய வேண்டும் என்று எண்ணினார். என்னிடம் மாணவர்கள் மூவர் முன்பே பதிவுசெய்திருந்ததால், தமிழ்ப் பேராசிரியர் சா.மாரிமுத்துவிடம் பதிவுசெய்யச் சொன்னேன். இருப்பினும், அவ்வப்போது ஆய்வு தொடர்பான கருத்துகளை அவருக்கு வழங்கியதுண்டு.

ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்ற பின்னர், முனைவர் பட்டத்துக்கு என்னிடம் பதிவுசெய்துகொள்ள வேண்டினார். அந்தத் தருணத்திலும் என்னிடம் இடமில்லாது போகவே, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ. செயதேவனிடம் பரிந்துரைத்தேன். அவரிடம் டாக்டர் பட்டம் பெற்றார்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணம், அவர் இலக்கியம் பற்றித் தெளிந்த அறிவும் படைப்பாற்றலும் கொண்டிருந்ததுதான். இடையே சில கவிதை நூல்களை வெளியிட்டார். அவர் கவிதை நூல்களை வெளியிட்ட தருணத்தில், ஜப்பானிய காதல் கவிதைகளை மொழிபெயர்த்து, அதை என்னிடம் கொண்டுவந்து காட்டி, அணிந்துரை கேட்டார். நானும் மனமுவந்து எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு இரு சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இலக்கிய அமைப்புகளின் சங்கமம் நடந்தபோது, டெல்லியில் நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்த அறையில் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார். என்னுடைய பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றதை அவருடைய மனைவியிடம் சொல்லி, என்னை அறி முகப்படுத்தியது இன்னும் நினைவில் நிழலாடுகிறது. அவரது கவிதை நூல்களைப் பற்றிய பேச்சு பகலுணவு நேரத்துக்குப் பின்னரும் உணவு விடுதியில் நீடித்தது.

அதன்பின், ‘கவிஞர் தமிழன்பன் 80 அகவை நிறைவு விழா’கவியரங்கில் பங்கேற்குமாறு அழைத்திருந்தேன். அன்றைய தினம் பாடல் காட்சிக்காக, கோவாவுக்குச் செல்ல இருந்தாலும், காலையிலேயே வந்து கவிதை வாசித்து விட்டுத்தான் சென்றார். இக்கட்டான சூழலிலும்கூட, சொன்ன வாக்கைக் காப்பாற்றும் அவரது பண்பை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

ORGI இராம.குருநாதன்

இறுதியாக என்னிடம் ஒரு நாள் பேசும்போது, ‘இனிய உதயம்’ இதழில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி எழுதிய ‘லிங்கூ’ என்ற கவிதை நூல் பற்றி நான் எழுதியிருந்த மதிப்புரையைப் படித்துவிட்டுப் பாராட்டினார். லிங்குசாமியிடமும், ‘என் ஆசிரியர் எழுதியது’ என்று சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார். இதை 2016 ஆகஸ்ட் 13 அன்று காலை என்னிடம் சொன்னார். அடுத்த நாள் காலை, முத்துக்குமார் அமரரான செய்தியைக் கேட்டதும் பேரிடியாயிற்று.

ஒரு கவிஞனின் அகால மரணம் என்பது சாதாரணமானது அல்ல. வரலாற்றுச் சுவடுகள் இன்னும் அழியாது தன்னை வரைந்துகொண்டுதான் இருக்கும், அவர் படைத்த நூல்கள் வழியாக!

கட்டுரையாளர் : தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு), பச்சையப்பன் கல்லூரி,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x