Published : 09 Feb 2018 12:04 PM
Last Updated : 09 Feb 2018 12:04 PM
பா
ய்மரம் மட்டுமே பொருத்தப்பட்ட படகுகள் வரிசையாகச் செல்வதைக் காணப் புதுச்சேரி கடற்கரை சாலையெங்கும் அண்மையில் மக்கள் கூட்டம். விளையாட்டுப் போட்டிக்காகப் பாய்மரப் படகோட்டும் வழக்கம் 19-ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டாலும், புதுச்சேரியில் பாய்மரப் படகுப் போட்டி இந்த ஆண்டுதான் முதன் முதலாக நடைபெற்றுள்ளது.
புதுச்சேரி அரசும் பிரான்ஸ் அரசும் இணைந்து சர்வதேசப் பாய்மரப் படகுப் போட்டிகளை நடத்திக்காட்டியுள்ளன. படகில் இயந்திர உதவி ஏதுமின்றி காற்றின் வேகத்தில் பயணிக்கும் வகையில் செல்வதே பாய்மரப் படகுப் போட்டி. தேங்காய்திட்டு துறைமுகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குப் பாய்மரப் படகை 12 முறை சுற்றி வரும்படி போட்டி அமைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் போட்டி நடைபெற்றது குறித்து அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஜோசப்பிடம் கேட்டோம். “புதுச்சேரியில் கடலிருந்து வரும் ‘கழிமுக’ப் பகுதிகள் நிறைய உள்ளன. அப்பகுதியில் நீர் விளையாட்டுகளை நடத்தலாம். அதற்கு இந்த முயற்சி உறுதுணையாக இருக்கும். இளைஞர்கள் கடலைத் தூய்மையாகப் பராமரிக்கும் எண்ணமும் இந்த விளையாட்டால் வரும்” என்கிறார் ஜோசப்.
இந்தப் போட்டியில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த அனிருத்தும் வெற்றிபெற்றார். பொதுவாக, பாய்மரப் படகுப் போட்டியைப் பணக்காரர்களின் விளையாட்டு என்பார்கள்.
இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற பலரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தனர். புதுச்சேரியிலும் மீனவ இளைஞர்கள் பலரும் இப்போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
இனி ஒவ்வோர் ஆண்டும் புதுச்சேரியில் சர்வதேசப் பாய்மரப் படகுப் போட்டியை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். புதுச்சேரியிலிருந்து பாய்மரப் படகுப் போட்டியில் சர்வதேசத் தரத்தில் வீரர், வீராங்கனைகள் உருவாகும் காலமும் வெகு தொலைவில் இல்லை.
படங்கள்: எம். சாம்ராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT