Last Updated : 02 Feb, 2018 11:23 AM

 

Published : 02 Feb 2018 11:23 AM
Last Updated : 02 Feb 2018 11:23 AM

குரு - சிஷ்யன்: தோழியாய் வாய்த்த மாணவி!

ன் மாணவிகளோடு உரையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. பாடங்கள் தொடர்பாக மட்டுமல்ல; படித்த நூல்கள், பிடித்த எழுத்தாளர்கள் குறித்தும் அவர்களோடு நான் கலந்துரையாடுவதுண்டு. பெண்கள் வாழ்வில் கல்வி எவ்வாறு ஒளியேற்றும் என்பது குறித்தும், பெண் முன்னேற்றத்துக்குக் கல்வி எந்த விதத்தில் வழி அமைக்கும் என்பது பற்றியும் அவர்களோடு பல முறை உரையாடியிருக்கிறேன்.

காவிரிக் கரையோரத்தில் கடைக்கோடிக் கிராமம் ஒன்றில் பிறந்து, கல்வியைத் துணையாகக் கொண்டு முன்னேறி வந்திருக்கும் எனக்கு, என்னைப் போல் கிராமத்துப் பின்னணியிலிருந்தும் கல்வி பெற வேண்டுமென்ற ஆவலோடு வந்திருக்கும் மாணவிகளிடம் பகிர ஏராளமான விஷயங்கள் இருந்தன.

அது 2014-ம் ஆண்டு. கரடு முரடான வாழ்க்கைப் பாதையில் என் கைபிடித்து அழைத்துச் செல்வோர் யாருமற்று இருந்த நேரத்தில், கடுங்கோபமும் தனிமையின் அழுத்தமும் நிறைந்து, இறுகிய முகத்தோடு நின்றிருந்த ஒரு மாலை வேளையில் அந்த மாணவி என்னருகே வந்தாள்.

“வணக்கம்…” என்று அவள் சொன்ன போது, அவளது முகம் மார்கழிப் பூவென மலர்ச்சியுடன் இருந்தது.

“என் பெயர் கீதாவாணி. என் முனைவர் பட்ட ஆய்வுக்கு நீங்கள்தான் நெறியாளராக இருக்க வேண்டும்” என்று கேட்டாள்.

இதற்கு முன் அவளை நான் பார்த்ததில்லை. அதனால், “என்னை எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டேன்.

“உங்கள் நூல்கள் வழியாக உங்களை நான் அறிவேன்” என்று கூறினாள்.

அவள் இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு படைப்பாளியை அவளது படைப்பின் வழியாக அறிந்துகொள்வது தானே சரியான அறிமுகமாக இருக்க முடியும்.

‘பெண் கவிஞர்களின் கவிதைகளில் பெண் மொழிப் புனைவு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்ய முனைந்தாள். ஆய்வுக் காலங்களில் தன்னைப் பற்றியோ தன் குடும்பத்தைப் பற்றியோ கீதாவாணி எதுவும் என்னிடம் பேசியதில்லை. சில நேரத்தில் அவளின் முக வாட்டம் கண்டு விசாரித்தாலும், “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு, உடனே ஆய்வுக் கட்டுரை தொடர்பான பேச்சைத் தொடங்கி விடுவாள்.

தன்னுடன் ஆய்வு செய்யும் மாணவிகளுடனும் முதுகலை படிக்கும் மாணவிகளிடமும் இணக்கமாகப் பழகும் பண்பு அவளிடம் இருந்தது. சில காலம் அவளோடு பேசியதிலிருந்து அவளைப் பற்றிக் கொஞ்சம் அறிந்துகொண்டேன்.

மண முடிந்த அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதும், அவனது நினைவிழப்பு நோய்க்காகச் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும், ஒரு குழந்தையைப் போலிருக்கும் அவளது அம்மாவையும் அவளே பாராமரித்துவருகிறாள் என்பதையும் அறிந்தபோது, அவளைப் பற்றிய எனது மதிப்பீடு இன்னும் உயர்ந்தது.

யார் மனமும் புண்படாமல், பிறர் தேவையறிந்து செயல்படும் அவளது செயல், அனுபவம் முதிர்ந்த தாய்மையை எனக்கு நினைவூட்டியது. எனது பணிச்சுமையின் பொருட்டு, அவளுடைய ஆய்வுக் கட்டுரையைப் பார்க்க முடியாமல் இருந்தால், பொறுமையாகக் காத்திருந்து விவாதிப்பாள். குறைவாகப் பேசி நிறைவாகப் பணியாற்றும் அவளின் செய்நேர்த்தி பாராட்டும்படியிருக்கும்.

என்னை வெகுவாக அழுத்தும் குடும்ப உறவுகளின் எதிர்பார்ப்புகளில், மனம் வருந்தி அமர்ந்திருக்கும் நேரத்தில், “ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்ற அவளது கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் வெட்கப்படுவேன். என் முகம் பார்த்து என் மனநிலையைப் படம் பிடித்து விடுவாள்.

எங்கள் இருவருக்குமான உரையாடல் ஆய்வைக் கடந்து இலக்கியம், சமூகம் போன்றவை பற்றியும் இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத அவளது பேச்சால், பலரும் தங்களது சோகங்களை அவளிடம் சொல்லி இளைப்பாறிக் கொள்வதுமுண்டு.

ஒரு முறை அவள் எழுதிவந்த ஆய்வுக் கட்டுரையில், எழுத்துப் பிழை அதிகமாக இருக்கவே, நான் சற்றே கடுமையாகக் கோபமுற்றேன். அதன்பின், சில நாட்கள் கல்லூரிக்கு வருவதையே நிறுத்திக்கொண்டாள். பிறகு, ஒரு நாள் கல்லூரிக்கு வந்தவள், “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் கோபித்துக்கொள்ளும்படி அவ்வளவு பிழைகளுடன் காட்டியது என் தவறுதான். பிழைகளைக்கூடத் திருத்தாமல் அவசரமாகக் காட்டிவிட்டேன். இனி அப்படியான தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று கனிவோடு கேட்டுக்கொண்டாள்.

ஆய்வின் தொடக்கக் காலத்தில் ஆய்வு மொழியிலொரு தெளிவு இல்லாமல் இருந்தவள், ஆய்வை முடித்தபோது மொழியும் திறனாய்வும் செம்மையடைந்திருப்பதைக் கண்டு அவளது நெறியாளராக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

மாலை நேரத்தில் நெறியாளர் - ஆய்வாளர் என்ற பேதம் இல்லாமல், இருவரும் தாய்-சேய் உறவாகப் பழகும் இனிய நாட்களாக ஆய்வுக் காலங்கள் கடந்தோடின.

proff மல்லிகா

வறுமையிலும் நறுமுகை காட்டும் அவளின் உழைப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, கடும் முயற்சி, விட்டுக்கொடுக்கும் பண்பு, ஆய்வுத் தேடல், குடும்பம்- கல்லூரி பணிகளைத் துலாபாரமாகத் தாங்கும் பக்குவம் அனைத்தும் கீதாவாணியைத் தனித்த முத்திரையுடன் அடையாளப்படுத்தின.

கடந்த ஆண்டு முதல் எங்கள் கல்லூரியிலேயே தற்காலிக விரிவுரையாளராகப் பணி செய்து வருகிறாள் கீதாவாணி. யாருக்காகவும் காத்திராமல் ஓடும் நதிபோல, அந்த நதியின் போக்கிலேயே உள்ளிருந்து வளைந்து கொடுக்கும் நாணலைப் போல நதியாகவும் நாணலாகவும் வாழ்வில் பல வெற்றிகளையும் உயரங்களையும் என் மாணவி பெறுவாள் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்குண்டு.

கட்டுரையாளர் : இணைப் பேராசிரியர்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x