Published : 29 Dec 2017 10:55 AM
Last Updated : 29 Dec 2017 10:55 AM
மீ
ம்ஸ் கிரியேட்டர்களின் தவிர்க்க முடியாத நாயகனாக இந்த ஆண்டும் ஃபுல் மீல்ஸ் கொடுத்தார் வடிவேல். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, சினிமா என விதவிதமான மீம்ஸ் கிரியேட்டர்களின் கைவண்ணத்தில் உருவான மீம்ஸ்கள் மூலம், இந்த ஆண்டும் முழுக்க ரசிக்க வைத்தார் வடிவேல். மீம்ஸ்களில் வடிவேல் ஏன் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார்?
சமூக ஊடகங்கள் பெருகிய பிறகே மீம்ஸ்களும் பெரிய அளவில் வரத்தொடங்கின. மீம்ஸ்கள் வரத் தொடங்கிய காலத்தில், வடிவேல்தான் உச்சத்தில் இருந்தார். அந்த வகையில் பகடிகளையும் நையாண்டித்தனத்தையும் வெளிப்படுத்தும் மீம்ஸ்களுக்கு வடிவேல் சட்டென பொருந்தியது ஒரு காரணம். அதற்கேற்ப வடிவேலுவின் வித்தியாசமான உடல்மொழியும் முகபாவனைகளும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வசதியாகவே இருக்கின்றன.
சுயமாகத் தன்னை பகடி செய்துகொண்டு அவர் செய்த காமெடிகள் அனைத்தும் இன்று மீம்ஸ்களில் அதிகம் வெளிப்படுகின்றன. ஊருக்குள் உதார்விட்டுத் திரிவது, ஹீரோக்களின் பஞ்ச் வசனங்கள், அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள், போலித்தனமான ஆவேசம், வாய்ச்சவடால் மேடை பேச்சைக் காலங்காலமாகப் பார்த்தவர்கள் தமிழக மக்கள்.
இவற்றை மையமாக வைத்து வடிவேல் செய்த காமெடிகள், தமிழர்களின் வயிற்றைப் புண்ணாக்கின. அந்தக் காட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இன்றைய சூழ்நிலையோடு பொருந்திபோகவே செய்கின்றன. அதனால், வடிவேலுவின் காமெடி காட்சிகளைக் கொண்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீஸ்ஸ்களை உருவாக்குகிறார்கள்.
சினிமாவில் வடிவேல் நடிப்பதில் தொய்வு ஏற்பட்டாலும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்கள், வாட்ஸ்அப் செய்திகள் எனப் பலவற்றிலும் மீம்ஸ்களாக வடிவேலு நீக்கமற நிறைந்திருக்கிறார். தமிழகத்தில் ஹீரோக்கள் பேசிய பஞ்ச் வசனங்களைவிட, ஆத்மார்த்தமாக இளைஞர்களின் மனதுக்குள் ஊருவிய வசனங்கள் வடிவேலுவுடையவை. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டுமல்ல, மீம்ஸ்கள் இருக்கும்வரை மீம்ஸ் கிரியேட்டர்களின் நாயகனாக வடிவேலு சிம்மாசனமிட்டிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்!
வாட்ஸ் அப் கலக்கல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT