Published : 08 Dec 2017 11:58 AM
Last Updated : 08 Dec 2017 11:58 AM

பிதாமகனின் சேவை!

 

வெ

ளியூர்களுக்குச் செல்லும்போது, கிடைக்கும் நல்ல அனுபவங்கள் எப்போதுமே மனதில் பசுமையாக நிழலாடும். ஒருவேளை அது துயரமானதாக இருந்தால், அதனால் பயனில்லை என்று கருதி மறக்கவே விரும்புவோம். ஆனால், சென்னையில் வசிக்கும் இளைஞர் காலித் அஹமதுக்குக் கிடைத்த துயர அனுபவம், அவரை ஒரு சமூக சேவகராக்கியிருக்கிறது. 

ஓராண்டுக்கு முன்பு காலித் அஹமது (23) கோவைக்குச் சென்றிருந்தார். அந்தப் பயணத்தின்போது வயதான ஒருவர், சாலையோரம் தண்ணீர் கேட்டுக் கெஞ்சிக்கொண்டிருந்தார். யாரும் தண்ணீர் கொடுக்க முன்வராத நிலையில், அவரை வாஞ்சையோடு அணுகி, தண்ணீர் கொடுத்திருக்கிறார் காலித். தண்ணீர் குடித்த சற்று நேரத்தில், அந்த வயதானவர் இறந்துவிட்டார். போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, அவர் ஆதரவற்றவர் என்பது தெரியவந்தது.

வயதானவர் இறந்தது காலித்தை மனத்தளவில் பாதித்திருந்த வேளையில், அவர் ஆதரவற்றவர் என்பது இன்னும் அவரைச் சோகத்துக்குள்ளாக்கியது. அதனால், ஆதரவற்ற முதியவரை அடக்கம் செய்துவிட்டு, ஊர் திரும்பியிருக்கிறார். இந்தச் சம்பவம் காலித்தைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. தினமும் இப்படி எத்தனை ஆதரவற்றவர்கள் இறக்கிறார்களோ என வருந்திய காலித், நாம் ஏன் ஆதரவற்றவர்களின் சடலங்களை அடக்கம் செய்யக் கூடாது என்ற கேள்வியையும் அவருக்குள் எழுப்பியிருக்கிறது. விளைவு, ‘உறவுகள்’ என்னும் பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார் காலித்.

kalith காலித் அஹமது

காலித்துக்கு அவருடைய நண்பர்கள் சிலரும் துணை நிற்க, இந்த அறக்கட்டளை மூலம் தினந்தோறும் ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்வதை ஒரு கடமையாகவே நிறைவேற்றி வருகிறார்கள். சரி, ஆதரவற்றோர் சடலங்கள் பற்றி இவர்களுக்கு எப்படித் தகவல்கள் கிடைக்கின்றன?

“ஆதரவற்றோரின் சடலங்கள் பற்றிய தகவல்கள் காவல்துறையினர் மூலமே வரும். குறைந்தது வாரத்துக்கு 5 ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்கிறோம். பொதுவான முறையிலேயே அடக்கம் செய்து பிரார்த்தனை செய்வோம். இறந்தவர் பற்றிய தகவல்கள் கிடைத்தால், அவர் சார்ந்த மதத்தின்படியும் அடக்கம் செய்வோம்” என்கிறார் காலித்.  

கொடுமையிலும் கொடுமை, சுற்றுலா செல்லும்போதோ வெளியூர் செல்லும்போது இறக்க நேரிடுவதுதான். அந்தச் சமயத்திலும் இவர்கள் கைகொடுக்கிறார்கள். வாடகைக்கு அவசர ஊர்தியை எடுத்து, இறந்தவரின் வீட்டுக்கு கொண்டுசெல்ல உதவுகிறார்கள். இதேபோல சில ரத்த பந்தங்கள் ஏழ்மையின் காரணமாக உடலை அடக்க செய்ய முடியாமல் கஷ்டப்பட்டாலும், அவர்களுக்கும் ‘உறவுகள்’ அமைப்பு கைகொடுக்கிறது.

“மனிதன் பிறக்கும்போது உடன் இருப்பதைவிட, இறக்கும்போது உடனிருந்து உதவிடுவதே சிறந்தது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். எவ்வளவோ ஆதரவற்ற முதியவர்கள் துன்புறுவதையும் உடுத்தத் துணிகூட இல்லாமல் அல்லலுறுவதையும் பார்த்திருக்கிறோம். வீட்டில் உள்ள முதியவர்களை யாரும் தூக்கியெறிந்துவிடாதீர்கள். வயதான பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வது உங்கள் கடமைதானே. அதை மீறாதீர்கள். நான் செய்யும் இந்தச் சிறு உதவியை இறைவன் கொடுத்த வரமாகப் பார்க்கிறேன். இதனாலேயே என்னுடைய இந்த முயற்சிக்கு என் பெற்றோர், நண்பர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைத்து வருகிறது” என்று சொல்லும் காலித் அஹமது, “இந்தப் பணிக்கு அவசர உதவியாக ஊர்தி தேவைப்படுகிறது. அதை வாங்க முடிந்த உதவியை யார் வேண்டுமானாலும் செய்யலாம்” என்றும் அழைப்பு விடுக்கிறார். 

தொடர்புகொள்ள: https://www.facebook.com/ uravugaltrust/

- ச. ராஜலட்சுமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x