Published : 15 Dec 2017 11:42 AM
Last Updated : 15 Dec 2017 11:42 AM
ரி
ட்டர்ன் கிப்ட் கலாச்சாரம் இப்போது பெருகிக்கொண்டிருக்கிறது. திருமணம் போன்ற விழாக்களுக்குச் சென்று, புது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பரிசுப் பொருட்களை நாம் கொடுத்தது மாறி, இன்று திருமண வீட்டார் பரிசுகள் கொடுத்து அனுப்புகிறார்கள். இந்த ரிட்டர்ன் கிப்ட் கான்செப்ட்டையும் ஃபேஸ்புக்கையும் வைத்து சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாதந்தோறும் கணிசமாக சம்பாதிக்கிறார்.
அந்த இளைஞரின் பெயர் பவன்குமார் (22). பொறியியல் படித்துவிட்டு, எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று அலையாமல், ரிட்டர்ன் கிப்ட் பிசினஸ் செய்யும் ஐடியா இவருக்கு உதித்தது எப்படி?
“நான் ஒய்வில் இருக்கும்போது ஃபேஸ்புக் பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் அதில் மூழ்கியிருந்தபோது ‘சென்னை ஷாப்பிங் குரூப்’ கண்ணில்பட்டது. அதில், நிறையப் பேர் கல்யாணத்துக்கு ரிட்டர்ன் கிப்ட் கொடுக்கவேண்டும், அதற்கு பொருட்கள் வேண்டும் எனப் பதிவிட்டிருந்தனர்.
நான் அதைப் பார்த்தபிறகு, என் வீட்டு மொட்டை மாடியில் வளரும் மரக்கன்றுகளை ஏன் ரிட்டர்ன் கிப்டாக விற்கக் கூடாது எனத் தோன்றியது. பின்னர் என் மரக்கன்றுகளைப் பற்றிய தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். என் பதிவைப் பார்த்துவிட்டு ஒருவர் அணுகினார். 30 மரக்கன்றுகள் கேட்டார்.
இப்படித்தான் என்னுடைய ரிட்டர்ன் கிப்ட் தொழில் தொடங்கியது” என்கிறார் பவன்குமார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இப்படி எதேச்சையாகத் தொழிலைத் தொடங்கிய இவர், இன்று இதை முழு நேரத் தொழிலாகவே மாற்றிக்கொண்டுவிட்டார். இதற்காக ஒரு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார். ரிட்டர்ன் கிப்டுக்காக 75 முதல் 80 வகையான மரக்கன்றுகளை எப்போதுமே தயார்செய்து வைத்துக்கொள்கிறார். ஒரு மரக்கன்றை 30 ரூபாய்க்கு விற்கிறார்.
“முதலில் மரக்கன்றுகள் வைத்து மட்டும்தான் தொழிலை ஆரம்பித்தேன். ஃபேஸ்புக் மூலமே என் தொழிலை விளம்பரப்படுத்தி வருகிறேன். இதனால், என்னுடைய ரிட்டர்ன் கிப்ட் இந்தியாவில் செல்லாத இடங்களே இல்லை. மரக்கன்று ரிட்டர்ன் கிப்ட் கொடுத்த அனுபவத்தால், இப்போது இயற்கை முறையில் மாடித் தோட்டம் அமைத்துத் தரும் வேலையையும் செய்யத் தொடங்கியிருக்கிறேன்” என்று பெருமையாகச் சொல்கிறார் பவன்.
பொறியியல் படித்து விட்டு, வேலை கிடைக்கவில்லை என்று புலம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் பவன்குமாரின் ஐடியா புது பல்பு ஏற்றி வைத்தால் நல்லதுதானே!
பவன்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்க: https://www.facebook.com/Pkrgreens/
- ச. ராஜலட்சுமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT