Published : 08 Dec 2017 11:55 AM
Last Updated : 08 Dec 2017 11:55 AM
ஆண்டுக்கு ஒருமுறை கண்காட்சியும் பொருட்காட்சியும் நடக்கும் பெரம்பலூர் பேருந்து நிலையத் திறந்தவெளி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. நான் அங்கே சென்றிருந்தேன். அப்போது ஒரு மாணவன் என்னிடம் வந்து, “சார், இந்தப் புத்தகத்தை நீங்க படிச்சிருக்கீங்களா? ஜெயகாந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ரொம்ப நல்லா இருக்கும்” என்றான்.
அந்த மாணவனோடு பேசியபோது, நான் முதல்வராகப் பணியாற்றும் பொறியியல் கல்லூரியில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவன் அவன் என்பதைத் தெரிந்துகொண்டேன். இதற்கு முன்பு கல்லூரியில் அந்த மாணவன் எனக்கு அறிமுகமாயிருக்கவில்லை.
பெரும்பாலும் கல்லூரி முதல்வருக்கு இரண்டு விதமான மாணவர்களிடம்தான் நேரடித் தொடர்பும் அறிமுகமும் கிடைக்கும். நன்கு படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரவரிசையில் இடம் பிடிக்கும் மாணவர்கள் முதல் வகை. கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்கு உட்படும் மாணவர்கள் மற்றொரு வகை. இவை இரண்டிலும் இல்லாமல் மாற்றுச் சிந்தனையோடு எனக்குப் புத்தகங்கள் வழியாக அறிமுகமான மாணவன்தான் நாகா அதியன். அதன் பிறகு, கல்லூரியில் அடிக்கடி அவன் என் கவனத்துக்கு வரத் தொடங்கினான்.
பொதுவாகக் கல்லூரியில் எல்லா மாணவர்களும் பாடம் சார்ந்த புத்தகங்களோடுதான் இருப்பார்கள். ஆனால், நாகா அதியன் மட்டும் பாடப்புத்தகங்களோடு இலக்கியம் சார்ந்த புத்தகங்களை வைத்திருப்பான். அவற்றைப் படிக்குமாறு தன் நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டிருப்பதையும் பலமுறை பார்த்திருக்கிறேன்.
கவிதை, பேச்சுப் போட்டிகளில் மாவட்டம் முதல் மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு பரிசுகளைப் பெற்று, தமிழ் இலக்கியப் பங்களிப்பில் எங்கள் கல்லூரியைக் கவனம் பெறச் செய்தான் நாகா அதியன். தகவல் தொழில்நுட்பத் துறை மாணவன் என்பது எனக்கு அவனது இரண்டாவது அறிமுகமே. அவனுடைய கவிதைகளும் கட்டுரைகளும்தான் எனக்கு முதல் அறிமுகம். கல்லூரியில் படிக்கும்போதே, தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகை ஒன்றில் ‘மாணவர் தலைவராக’த் தேர்வானான்.
ஒருமுறை எங்கள் கல்லூரியில் புகழ்பெற்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் சுதந்திர தினப் பட்டிமன்றம் நடந்தது. இதில் ஒரு கல்லூரி மாணவரும் உடன் பேசினால் நன்றாக இருக்குமென்று நினைத்தபோது, என் கண்முன் வந்து நின்றது நாகா அதியன்தான்.
‘அறிவியல் வளர்ச்சியால் மனித குலம் பெறுவது எங்கும் இனிமையா? ஏங்கும் தனிமையா?’ எனும் தலைப்பிலான பட்டிமன்றத்தில், ‘எங்கும் இனிமையே’ என்னும் அணியில் அவன் பேசினான். இவ்வளவு நாட்களாக ஒரு மாணவனாக, புத்தக வாசிப்பாளனாக, இதழியலாளனாக மட்டுமே தெரிந்த நாகா அதியன், தான் படித்துக்கொண்டிருக்கும் பொறியியல் படிப்பின் நன்மைகளை நயமாக எடுத்துச்சொல்லி, அன்றைக்கு அரங்கம் அதிரும் கரவொலிகளைப் பாராட்டாகப் பெற்றான். அவன் பேசிய பிறகு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், “நல்ல திறமை வாய்ந்த, சிந்தனைமிக்க மாணவனைப் அறிமுகப்படுத்திய முதல்வரைப் பாராட்டுகிறேன்” என்றார். அந்த இனிமையான நினைவுகளை இன்றைக்கும் எண்ணி மகிழ்கிறேன்.
தகவல் தொழில்நுட்பத் துறையில், ‘கல்லூரியின் சிறந்த மாணவன்’ என்ற பெருமையோடு கல்லூரியிலிருந்து விடைபெற்றுச் சென்றான் நாகா அதியன். ஒரு நாள் இரவு 11 மணிக்கு என்னைத் தொடர்புகொண்டு, “விவசாயம் சார்ந்த சில கேள்விகளுக்கு விளக்கம் வேண்டும்” என்றான். “படித்தது பி.டெக்., சந்தேகம் விவசாயத்திலா? எங்கே இருக்கிறாய், என்ன வேலை செய்கிறாய்?” என்று கேட்டேன். அதற்கு, “பொதிகை தொலைக்காட்சியில் ‘வேளாண் களம்’ என்னும் வேளாண்மை சார்ந்த நேரலை நிகழ்ச்சியின் நெறியாளராக இருக்கிறேன்” என்றான். உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தது.
பொறியியல் படிப்பை வெற்றிகரமாகப் படித்து முடித்து, ஐ.டி. உலகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்காமல், வேளாண்மை சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு நெறியாளனாக தன்னுடய பயணத்தைத் தொடங்கிய நாகா அதியன், இன்றைக்குத் தமிழகத்தின் அரசியல் தலைவர் ஒருவரின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் தன்னுடைய பணியைச் செவ்வனே செய்துவருகிறான்.
வருடா வருடம் ஆயிரக்கணக்கான மாணவர்களை நான் சந்தித்தாலும், சுய கற்றலின் மூலம் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்ட நாகா அதியன், என்னை ஆசிரியனாக எனக்கு அறிமுகம் செய்து வைத்த மாணவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
பின்னர், வெகுநாட்கள் தொடர்பில்லாமல் இருந்த நாகா, 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, சமூக வலைத்தளம் மூலமாக மீண்டும் என் கவனத்துக்கு வந்தான்.
அப்போது நாகா அதியன் தன் நண்பர்களோடு இணைந்து, 4 நாட்கள் இரவு பகல் பாராமல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, உணவு, உடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது போன்ற மீட்புப் பணிகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செய்தி அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.
சமூகச் சிந்தனையோடும் சரியான இலக்கோடும் பயணிக்கும் நாகா அதியன் எங்கள் கல்லூரி மாணவர் என்பதில் இன்றும் - என்றும் பெருமையே.
கட்டுரையாளர்: முதல்வர், தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,
பெரம்பலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT