Published : 10 Nov 2017 09:33 AM
Last Updated : 10 Nov 2017 09:33 AM
பு
துக் கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி என இரு கல்லூரிகளில் காலையும் மாலையும் பணியாற்றிய காலத்தில், ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்ற பாரதியின் வரியை அடிக்கடி நினைவூட்டும் வண்ணமாக அன்பான மாணவர்களைப் பெற்றதில் இன்றளவும் பெருமிதம் கொள்கிறேன்.
திருமண அழைப்பிதழை, “உங்களுக்குத்தான் சார் முதல் பத்திரிகை” என்று தேடிவந்து தந்துவிட்டுச் செல்லும் முன்னாள் மாணவர்களும், பரபரப்பான தெருவில் தற்செயலாகப் பார்த்தபோது, அங்கேயே வழியில் என்னை நிறுத்தி, தன் கணவன் வீட்டாரிடம், “நான் அடிக்கடி சொல்லுவேன்ல, எங்க சார், அவரு இவர்தான்..!” என்று பூரிப்போடு என்னை அறிமுகப்படுத்திய மாணவியும், வெற்றிப் பரிசுகளோடு வந்து வாழ்த்துபெறும் வருங்கால நட்சத்திரங்களும் என் மனதில் கல்வெட்டுக்களாய் நிற்பவர்கள்.
குலாம் நபி ஆசாத், மாயவரம் அமீன், தேவா முத்துக்குமார், நாடன் சூர்யா, ரேடியோ மிர்ச்சி ஷா என நீளும் ஒரு நட்சத்திரப் பட்டாளமே என் மன வானில் ஒளிவீசி வருகின்றனர். நிறைய மாணவர்கள் என் மனதில் இடம்பிடித்திருப்பதால், தனியாக ஒருவரை அடையாளப்படுத்துவது என்பதில் சற்றே தயக்கம். ஆனாலும், ஏராளமான மாணவர்களுக்கிடையிலும் தனித்துவம் ததும்பும் மாணவனாக, எனது உடன்பிறவாத் தம்பியாக ஜொலிப்பவர் வி.வி.கணேஷ்.
புதுக் கல்லூரியில் நான் பணியாற்றிய காலத்தில், 2007-2009 காலகட்டத்தில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவனாக கணேஷ் எனக்கு அறிமுகமானார். பெரும்பாலும் வகுப்பில் அமைதியாக இருப்பார். அதேநேரத்தில் ஏதாவது விவாதங்கள் எழும்போது சட்டெனத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கணேஷின் ஆற்றல் அபரிதமானது. பாடம் தொடர்பானவை மட்டுமல்ல, சமூகம் குறித்தும் பல ஆழமான கேள்விகள் கணேஷிடமிருந்து வெளிப்படும். இருவரும் சகோதரர்களாகப் பல நேரம் உரையாடியிருக்கிறோம்.
ஒல்லியான உருவம், உறுதியான நெஞ்சம், ஆர்வம் ததும்பும் பார்வை, சுறுசுறுப்பு என என்னைப் போலவே தென்பட்ட கணேஷ், நல்ல பேச்சாற்றல் உடையவன் என்பதை அறிந்தபோது, பெரிதும் மகிழ்ந்துபோனேன். எனது ஆற்றுப்படுத்துதலில் அவனது ஆர்வமும் ஆற்றலும் அம்பின் கூர்மையை அதிவிரைவாகப் பெற்றன. செலுத்தப்பட்ட இலக்குகள் தோறும் விளக்குகள் எரிந்தன. செல்லுமிடமெல்லாம் அவனது சொல்லின் திறனால், வெல்லுமிடமாக அவனுக்கு விளங்கியது.
புதுக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டத்தில் என்னோடு மாணவராகக் களமாடிய சுலைமான், பின்னாளில் புதுக் கல்லூரியின் பேராசிரியராகி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலராகவும் ஆன பிறகு, கிராமங்களில் பல நாட்கள் நடக்கும் நாட்டு நலப் பணி முகாமின் இலக்கிய நிகழ்ச்சிகளின் விருந்தினராக ஆண்டுதோறும் என்னை அழைப்பார்.
அங்கு வி.வி.கணேஷின் பட்டிமன்றப் பேச்சு உற்சாகப் பேரலைகளை உருவாக்கும். ஒருமுறை அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டியில் முதற் பரிசு பெற்று, மறைந்த முதல்வர் ஜெ, ஜெயலலிதா முன்னிலையில் பேசும் வாய்ப்பு கணேஷுக்குக் கிட்டியது. மேடையில் கம்பீரமாக நின்றபடி கணேஷ் முதல்வரை விளித்து, “உங்களையும் சேர்த்து எனக்கு இரண்டு தாய். நீங்கள் இல்லாவிட்டால் தமிழகம் இருக்கும் இருண்டதாய்..!” என்று பேசி, அரங்கை அதிர வைத்தான். அவனுக்குத் தனது சிறப்புப் பரிசையும் சேர்த்துத் தந்தார் முதல்வர் ஜெயலலிதா.
கல்லூரி வளாக எல்லைகளைத் தாண்டிய ஆசிரிய -மாணவ உறவு எனக்கும் கணேஷுக்குமானது. வெறும் உரையாடலோடு மட்டுமே நின்றுவிடாமல், அவனது குடும்ப விழாக்களுக்கும் என்னை விரும்பி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானது. என்னிடம் தயாராகும் புதிய தலைமுறை சமூகத்துக்குக் கைகொடுக்கும் பொதுநல உணர்வுடையவர்களாய், அறச்சீற்றமும் மொழிப்பற்றும் உயர்ந்த பண்புகளும் உடையவர்களாய் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. கணேஷும் அத்தகையதொரு வெளிச்சத்தின் விளைச்சல்.
கட்டுரையாளர்: பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர், காயிதே மில்லத் கல்லூரி, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT