Published : 24 Nov 2017 11:22 AM
Last Updated : 24 Nov 2017 11:22 AM

ஓர் அவலத்தின் ஆவணம்!

 

தி

வ்யபாரதி இயக்கிய ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. தமிழகத்தில் மலம் அள்ளும் தொழிலாளிகளின் இழிநிலையையும் அவர்கள் மீதான சமூகப் புறக்கணிப்பையும் ஆவணப்படுத்திய படைப்பு அது. அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ம. பழனிகுமார். மதுரையைச் சேரந்த 26 வயது இளைஞர். இவர் ஓர் ஒளிப்படக் கலைஞரும்கூட. அண்மையில் சென்னை லலித் கலா அகாடமியில் இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் அமைப்பு ஒருங்கிணைத்த ‘நானும் ஒரு குழந்தை’ என்னும் ஒளிப்படக் கண்காட்சியில் பழனிகுமாரின் ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வை இந்த ஒளிப்படங்கள் பிரதிபலித்தன. 

இந்தப் படங்களுக்காக அவர் இரண்டு ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். இதற்காகத் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்திருக்கிறார்.  

உலுக்கும் பதிவுகள்

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழனிகுமாரின் ஒளிப்படங்கள் எல்லாமே முகத்தில் அறைந்தாற்போல உண்மையை மனத்தில் பதிய வைத்தன. நாம் பெரும்பாலும் நுழைய விரும்பாத பொதுக் கழிப்பிடங்களைத் தொழிலாளிகள் சுத்தம் செய்வதைப் படமாக்கி இருக்கிறார் பழனி. முதுகில் கொப்பளத்தோடு சாக்கடையில் இடுப்புவரை மூழ்கி சுத்தம் செய்யும் தொழிலாளி, பாதாளச் சாக்கடையில் விழுந்து இறந்தவரின் உறவினர்கள் பெருங்குரலெடுத்து அழும் ஒப்பாரி போன்ற உண்மையின் அப்பட்டமான பதிவுகள் மனதை உலுக்குகின்றன. 

கோயில் வாசலில் சாவு மேளம் வாசித்துக்கொண்டிருப்பவர்களின் நடுவில் சுற்றி நடப்பதைப் புரிந்துகொள்ள முடியாத வெள்ளந்தித் தனத்தோடு பார்க்கும் சிறுவன், பின்புலத்தில் துப்புரவுத் தொழிலாளிகள் வரிசை கட்டி நிற்க கையில் ஒரு துடைப்பத்தை இழுத்துப்போகும் சிறுமி போன்ற ஒளிப்படங்கள் மனித குலத்துக்கு விரோதமான தொழில் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதன் அடையாளங்கள்.

எல்லா ஒளிப்படங்களையும் கறுப்பு வெள்ளையில் காட்டியிருக்கிறார் பழனி. ஒளிப்படக் கண்காட்சி என்றாலே இயற்கை எழிலும் அழகிய விலங்குகளும் காட்சிப்படுத்தப்படும் நிலையில் இந்தக் கண்காட்சியில் இந்த மக்களின் அவல வாழ்க்கை படமாகி இருந்தது. கண்களில் நீர் வழியும் முதிய துப்புரவுத் தொழிலாளியின் ஒளிப்படம் மனதைவிட்டு அகல வெகுநேரம் ஆனது.

மாற்றத்துக்கான கலை

“பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது எனக்குக் கேமரா கிடைத்தது. பல ஊர்களுக்கு ஒளிப்படத்துக்காகப் பயணிக்கத் தொடங்கினேன். அப்போது திவ்யபாதியிடம் உதவியாளராகப் பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் ‘கக்கூஸ்’ ஆவணப்படத்துக்காகப் படம்பிடிக்கும்போதே அந்த மக்களின் வாழ்க்கைச் சூழல் என்னைப் பாதித்தது. எந்த அடிப்படை வசதியும் இல்லாத வீடுகள். கழிப்பறை இல்லாமல் சாலையோரம் ஒதுங்கும் மக்களின் வேதனையைப் பார்க்க நேர்ந்தது.

palani kumar (2) பழனிகுமார் right

மலம் அள்ளுவது தவிர அவர்களுக்கு எந்த வேலையும் தரப்படாமல் அவலத்தில் அழுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளும் துப்புரவுப் பணியில் ஈடுபடுகிறார்கள். கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் அதிலிருந்து மீட்கப்பட என் ஒளிப்படக் கலை மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அவர்களது குடியிருப்புக்குப் போய் அந்த வாழ்க்கையைப் பதிவுசெய்யத் தொடங்கினேன்.

தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்தில இன்னும் மலக்குழிகளில் அடைப்புகளை நீக்க ஒரு இயந்திரம் கண்டுபிடிக்காமல் இருப்பது அபத்தமான விஷயம்” என்கிறார் பழனிகுமார்.  உங்கள் குடும்பத்தார் நீங்கள் செய்யும் வேலைக்கு எப்படி ஆதரவு தருகிறார்கள் என்று கேட்டதற்கு, “என் குடும்பத்துக்கே என் ஆதரவு தேவைப்படுகிறது” என்று புன்னகையோடு பதில் சொல்லும் இந்த இளைஞரின் பணி முக்கியமானது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x