Published : 27 Oct 2017 11:42 AM
Last Updated : 27 Oct 2017 11:42 AM
ப
ழுத்த அனுபவசாலிகள்தான் உலகத் தலைவர்களாக வேண்டுமா என்ன? பல சந்தர்ப்பங்களில் திறமையுள்ள இள வயது க்காரர்கள்கூட உலகத் தலைவர்களாகி ஆச்சரியமூட்டியிருக்கிறார்கள். இந்த வரிசையில் ஆஸ்திரியாவின் செபாஸ்டின் குர்ஷ் 31 வயதில் பிரதமரானால் (அந்த ஊரில் வேந்தர் என்கிறார்கள்), உலகின் இளம் தலைவர் என்கிற அந்தஸ்தைப் பெறுவார்.
அண்மையில் ஆஸ்திரியாவில் நடைபெற்ற தேர்தலில் செபாஸ்டின் குர்ஷினுடைய கன்சர்வேட்டிங் மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் பதவிக்கு அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதரக் கட்சிகளுடன் சேர்ந்து அந்தப் பதவியை கைப்பற்றுவதில் அவர் முனைப்புக் காட்டி வருகிறார். 27 வயதிலேயே முக்கிய துறையான வெளியுறவுத் துறையைக் கவனித்து வந்தவர் செபாஸ்டின் குர்ஷ். இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளின் இளம் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற அந்தஸ்தை ஏற்கெனவே பெற்றிருந்தார். ஆனால், தற்போது பிரதமரானால், உலகிலேயே இளம் உலகத் தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகி விடுவார்.
வட கொரியாவின் அதிபராக இருக்கும் ஜிம் ஜாங் உன்தான் இதுவரை உலகின் இளம் தலைவராக இருந்து வருகிறார். 36 வயதான அவர், அதிபர் பதவியை ஏற்கும்போது 30 வயதுதான் ஆனது. அந்தச் சாதனையை செபாஸ்டின் குர்ஷ் முறியடிக்க முடியாது என்றாலும், தற்போதைய நிலையில் உள்ள உலகத் தலைவர்களில் மிகவும் இள வயதுக்காரர் என்கிற பெருமையைப் பெறலாம். இதற்கு முன்பு ஐரோப்பாவின் குட்டி நாடான சான் மரினோவின் தலைவர்களில் ஒருவரான வெனிஷா அம்ரோஸியோ இந்தப் பெருமையைப் பெற்றிருந்தார். அவர் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர்வரை சான் மரினோவின் தலைவராக இருந்தபோது அவரது வயது 28தான். கிம் ஜாங் உன்னுக்கு பிறகு உலகின் இளம் தலைவராக வெனிஷா பார்க்கப்பட்டார். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் அவரது சுழற்சி முறை பதவி முடிவுக்கு வந்ததால், தற்போது பிரதமராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ள செபாஸ்டினுக்கு உலகின் இளம் தலைவர் என்ற அந்தஸ்து கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் இளம் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கிம் ஜாங் உன் சர்ச்சைக்குரிய தலைவராகவே பார்க்கப்படுகிறார். ஐரோப்பாவின் பெரிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் (39 வயது), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45 வயது) போன்ற இளம் தலைவர்கள் மக்கள் செல்வாக்குமிக்கவர்களாக விளங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் செபாஸ்டின் குர்ஷுக்கு இடம் கிடைக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT