Published : 27 Oct 2017 09:45 AM
Last Updated : 27 Oct 2017 09:45 AM
‘ம
னதால் இணைவோம், மாற்றத்தை வரவேற்போம்’ என்ற வரிகளோடு, பல புதிய நிகழ்ச்சிகளுடன் தனது சேனல் இலச்சினையை (லோகோ) சமீபத்தில் மாற்றியிருக்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. நடிகைகள் ஜோதிகா, துளசி, நடிகர்கள் ஆரி, ஹரிஷ் ஆகியோரைக் கொண்டு, விளம்பரப் படத்தையும் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜீ தமிழ் (ஹெச்.டி) தொலைக்காட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவர்(பிசினஸ் ஹெட்) சிஜு பிரபாகரன் நம்மிடம் பேசியதில் இருந்து..
திடீரென புதிய லோகோ அறிமுகத்துக்கு என்ன காரணம்?
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் மக்கள் அளித்த கருத்துக்கணிப்பு வாயிலாகவே இந்த மாற்றத்தைக் கொடுத்திருக்கிறோம். பெண்கள் முன்னேற வேண்டும். அந்த முன்னேற்றத்தில் அவர்களுக்கான பாதுகாப்பும் இருக்க வேண்டும். அதைக் கருவாகக் கொண்டுதான் இந்த லோகோ, அதற்கான வடிவமைப்பு, விளம்பரப் படம் எல்லாமே அமைந்திருக்கும். இதை ஜோதிகா போன்ற ஒரு நட்சத்திரம் சொல்லும்போது பெண்களிடையே பெரிய மாற்றத்தைக் காண முடியும். இந்த இரு விளம்பரப் படங்களையும், தேசிய விருது வென்ற சுதா கொங்கரா இயக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எங்கள் ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. ஜீ தமிழ் தொடங்கி 9 ஆண்டுகள் ஆகின்றன. அதுவும் ஒரு காரணம்.
நிகழ்ச்சிகள், தொடர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முயற்சிதான் வரவேற்புக்கு காரணம். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது முந்தைய தலைமுறைக்கும் இளம் தலைமுறைக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் அக்கறை. தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள், கதைகள் என எல்லாவற்றையும் அப்படித்தான் தேர்வு செய்கிறோம். 20 ஆண்டுகளில் ஒரு சேனல் என்ன செய்திருக்கிறது என்று பார்க்கும்போது, தொடர்கள்தான் அதைத் தாங்கி நிறுத்தும். ‘தலையணைப் பூக்கள்’, ‘யாரடி நீ மோகினி’ என்று பல தொடர்களை உதாரணமாகச் சொல்லலாம். திரைப்படங்களைப் பொறுத்தவரை, யார் நடித்திருக்கிறார்கள் என்பதோடு, அப்படம் என்ன கருத்தைப் பிரதிபலிக்கிறது என்பதையும் பார்க்கிறோம். தீபாவளிக்கு ஒளிபரப்பான ‘விக்ரம் வேதா’, சமீபத்தில் தொலைக்காட்சி உரிமம் பெற்றுள்ள ‘மெர்சல்’ ஆகியவற்றைக்கூட அந்த அடிப்படையிலேயே தேர்வு செய்திருக்கிறோம்.
200-300 அத்தியாயங்களில் முடிகிற தொடர்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன்?
நேயர்கள் நேரத்தை செலவழிக்க நாம் சரியான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். தவிர, புதிய கதைகள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. எதுவாக இருந்தாலும் மக்களுக்குப் பிடித்ததை முழுமையாகத் தரவேண்டும் என்பதே நோக்கம். அது சேனல்களின் கடமையும்கூட.
சன், விஜய் தொலைக்காட்சிகள் உங்களுக்குப் போட்டியா?
போட்டி இல்லை என கூறமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு இடம் உண்டு. ஒவ்வொருவருமே வளர நிறைய இடம் இருக்கிறது. அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்டவர்கள். எங்கள் வளர்ச்சியும் பெருமைப்படும் விதமாகவே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT