Published : 02 Sep 2017 09:55 AM
Last Updated : 02 Sep 2017 09:55 AM

சின்னத்திரையோரம்: அமானுஷ்ய சக்தி

விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் 1,000 அத்தியாயங்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில், திகில் அமானுஷ்யங்கள் கலந்த தொடராக ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

தொடரின் நாயகன் ரியோ, நாயகி ரச்சிதா. இவர்கள் இருவரையும் மையமாகக் கொண்டு சமீபகாலமாக வரும் அமானுஷ்யம் நிறைந்த அறிமுகக் காட்சிகள் (ப்ரோமோ) ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. அதில் சுவாரசியமான திருப்பமாக இனி வரும் வாரங்கள் அமையும். பல அமானுஷ்ய விஷயங்கள் மற்றும் மீனாட்சியின் நடவடிக்கை காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் மீனாட்சிக்குதான் பேய் பிடித்திருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், உண்மையிலேயே மீனாட்சிக்குள் ஏதும் அமானுஷ்ய சக்தி இருக்கிறதா, அல்லது வேறு யாருக்குள் இருக்கிறது என்பது போன்ற பல கேள்விக்கான பதில்கள் இந்த வார அத்தியாயங்களில் விவரமாக ஒளிபரப்பாக இருக்கிறது.

 

சினிமா நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியில் ‘புத்தம் புது காலை’, ‘ஹாலி வெர்சஸ் கோலி’, ‘வேந்தர் ரிவ்யூஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவரும் மோகனா, நடிப்பின் மீது துளிர்த்த காதலால் சின்னத்திரைக்குள் நுழைந்திருக்கிறார்.

‘‘சொந்த ஊர் திருச்சி. சின்னத்திரைக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகிறது. கல்லூரி நாட்களில் இருந்தே மேடை நாடகங்கள், குறும்படங்களில் அதிக நாட்டம் உண்டு. இதனால், படித்து முடித்த பிறகு வேலைக்குப் போகும் எண்ணம் வரவே இல்லை. ஊரில் இருந்து சென்னைக்கு வந்ததே சின்னத்திரை, சினிமாவில் தனித்த அடையாளம் பெற வேண்டும் என்பதற்காகதான். வேந்தர் தொலைக்காட்சியில் சினிமா விமர்சனம், ஹாலிவுட், கோலிவுட் திரை நிகழ்ச்சிகள் என்று மனதுக்கு மிகவும் பிடித்த வேலைகளைச் செய்து வருகிறேன். பொழுதுபோக்காக வழங்கும் நிகழ்ச்சிகளில் நம் ஆர்வத்துக்கும், அனுபவத்துக்கும் நிறைய விஷயங்கள் கிடைப்பதால் ஒரு ஷோவுக்குகூட விடுமுறை எடுக்காமல் வழங்கி வருகிறேன்’’ என்கிறார் மோகனா.

ஆடை வடிவமைப்பில் ஆர்வம்

விழித்திரு’ என்று வித்தியாசமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் ஜெ.ஜெமிமா ஃப்யூலா. இவருக்கு ஆடை வடிமைப்பாளர் என்ற மற்றொரு முகமும் இருக்கிறது.

‘‘சின்ன வயதில் இருந்தே கண்கவரும் ஆடைகள் என்றால் கொள்ளை பிரியம். அந்த ஆர்வத்தில்தான் ஆடை வடிவமைப்பாளர் ஆனேன். சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆடை வடிவமைப்பாளராகத்தான் கேரியரை தொடங்கினேன். சத்யம் தொலைக்காட்சியில் வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெண்களுக்கும், சமூகத்துக்குமான நிகழ்ச்சியாக அமைந்து வருகிறது. அதனாலேயே தொகுப்பாளர் பணி என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தால்கூட, எந்த சூழலிலும் ஆடை வடிவமைப்புக்கு இடைவெளி விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஃபேஷன் ஷோ, வெட்டிங் டிசைனிங் காஸ்ட்யூம்ஸ் என்றுஅந்த வேலையும் அசத்தலாக நகர்ந்து வகிறது’’ என்கிறார்

செய்தி படிக்கிறார்.. தேர்வுக்கு படிக்கிறார்

நியூஸ் 7 - தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வலம்வரும் லலிதா அகோரம், செய்தி வாசிப்போடு சேர்த்து நிகழ்ச்சி தொகுப்பு, வானொலி செய்திகள் வாசிப்பு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது என்று பல பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘‘தற்போதைய சூழலில் செய்தி வாசிப்பு மிகவும் முக்கிய அங்கமாக விளங்குகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளினி என்ற தகுதியும், பயிற்சியும் அதற்கு மிகவும் பயனளிக்கிறது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வழக்கமான செய்தி வாசிப்பு பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பல கோணங்களை முன்னெடுக்கிறார்கள்.

சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள விவகாரங்கள், குற்றச் சம்பவங்கள், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல், பயனுள்ள தகவல்கள், தமிழக நிகழ்வுகள், தேசிய செய்திகள், சர்வதேச அளவிலான நிகழ்வுகள் என பல்வேறு பிரிவுகளில் பங்களிப்பு ஆர்வமாக உள்ளது. பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு மருத்துவத் துறையில் பணியாற்றினேன். மீடியா மீது கொண்ட ஆர்வத்தால் இங்கு வந்துவிட்டேன்.

நியூஸ் 7 தமிழ் சேனலில் செய்தி வாசிப்பு, வியப்பூட்டும் விஞ்ஞானம், டாக்டரிடம் கேளுங்கள், ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிப்பு என்று ஓடிக்கொண்டிருக்கிறேன். இதுகூடவே சிவில் சர்வீஸ் தேர்வுக்கான படிப்பும் நகர்கிறது. நல்ல வேலைகளை எப்போதும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் திட்டம்’’ என்கிறார் லலிதா அகோரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x