Published : 20 Sep 2017 09:12 AM
Last Updated : 20 Sep 2017 09:12 AM
ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில், ஒரு தொடர் குற்றச்செயலை மதிநுட்பத்துடன் துப்பறியும் கதையே ‘துப்பறிவாளன்’.
விஷால் ஒரு தனியார் துப்பறிவாளன். ஷெர்லாக்குக்கு வாட்ஸன் போல, விஷாலின் நண்பன் பிரசன்னா. தன் திறமைக்கேற்ற வழக்குக்காக காத்திருக்கும் விஷாலைத் தேடி வருகிறது, ஒரு நாய் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு. அதை விசாரிக்கத் தொடங்கும்போது, பணத்துக்காக ஆட்களைக் கொல்லும் ஒரு பயங்கர கும்பலிடம் போய் நிற்கிறது.
நேர்த்தியான திரைப்படமாக்கல், தொழில்நுட்பத்தோடு சஸ்பென்ஸ் கலந்து இயக்கியிருக்கிறார் மிஷ்கின். துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தை புரியவைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட காட்சிகள், திரைக்கதை அமைப்பு ஆகியவை பார்வையாளர்களைக் கட்டிப்போடுகின்றன. அவரது முந்தைய பட சாயல்கள் இருந்தாலும், எந்தக் காட்சியும் உறுத்தலாக இல்லை.
துப்பறிவாளனின் நடை உடை, வீடு, விதவிதமான ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவது, விபத்தைப் போலவே கொலைகளை செய்வது என துப்பறியும் கதைக்குத் தேவையான பல அம்சங்கள் படத்தில் இருக்கின்றன.
கணியன் பூங்குன்றன் என்ற அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட துப்பறிவாளனான விஷால், முந்தைய கதாபாத்திரங்களைவிட இப்படத்தில் தனித்துவமாகத் தெரிகிறார். தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, துப்பறிவாளன் பாத்திரத்தை உணர்ந்து உழைத்திருக்கிறார். சவாலான வழக்குக்காக அலைவது, குற்றத்தை மோப்பம் பிடிப்பது, எதிரிகளுடன் மல்லுக்கட்டுவது என நன்கு மெனக்கெட்டிருக்கிறார். அதிக புத்திசாலித்தனம், எதற்கெடுத்தாலும் கோபம், அறை முழுக்க புத்தகங்கள், உயரமான இருக்கை, தலையில் தொப்பி என விஷாலை நன்றாகவே ரசிக்க முடிகிறது.
காதல் காட்சிகள் இல்லாததால், கதாநாயகி அனு இமானுவேலின் கதாபாத்திரம் பெரிதாக இல்லை. பாடல்கள் இல்லாதது பெரிய ஆறுதல்.
பிரசன்னா இயல்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். விஷாலுடனே அனைத்துக் காட்சிகளிலும் வருகிறார். இறுதிக்காட்சியில் மட்டும் கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறார்.
கொடூர கொலைகள் செய்யும் வில்லன் வினய், வில்லி ஆண்ட்ரியா ஆகியோர் வித்தியாசமான கெட்டப்பில் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கின்றனர். இதுவரையில் சாக்லேட் பாயாக மட்டுமே நடித்த வினய், வில்லன் கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தியிருக்கிறார். வழக்கமாக நிறைய பேசும் பாக்யராஜ் இதில், குறைவாகப் பேசி கவனிக்க வைக்கிறார். ஆண்ட்ரியாவும், பாக்யராஜும் அதிகம் பேசாமலே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளனர்.
ஒரு தனியார் துப்பறிவாளனை ஒட்டுமொத்த காவல்துறையும் நம்புமா? காவல்துறையிடம் இருந்து ஆண்ட்ரியா அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. விஷால் துப்பறிந்து செல்லும் சில இடங்களில் பாக்யராஜ் மறைந்திருந்து பார்ப்பது எப்படி என்று தெரியவில்லை. வில்லன்கள் குழு எப்படி ஒன்றிணைந்தது என்பதற்கான காரணங்கள் சரியாக இல்லை.
அரோல் கொரேலியின் பின்னணி இசை, கதைக்கு உயிரூட்டுகிறது. கார்த்திக் வெங்கட்ராமின் கேமரா கோணங்களும், படமாக்கப்பட்ட விதமும் நேர்த்தி. சண்டைக் காட்சிகளில் தினேஷ் காசியின் உழைப்பும், மிஷ்கினின் ஈடுபாடும் மிளிர்கிறது.
தமிழ் சினிமாவுக்குப் புதிய முயற்சி. மொத்தத்தில், இலக்கை ஓரளவு நெருங்கிவிட்ட துப்பறிவாளன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT