Published : 17 Mar 2023 06:07 AM
Last Updated : 17 Mar 2023 06:07 AM
லைட்ஸ் ஆன் மீடியா தயாரிப்பில் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’பருந்தாகுது ஊர் குருவி’. “உள்ளூர் காவல் நிலையத்தில் ’பெட்டி கேஸ்’களை ஏற்றுக்கொள்வதை ஒரு பிழைப்பாகச் செய்து வருகிறான் ஒரு சாதுவான இளைஞன். அவன் ஒரு நிரபராதியைக் ’கெட்ட’ போலீஸிடமிருந்துக் காப்பாற்றக் காட்டுக்குள் ஆடும் ஆட்டம்தான் கதை.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிற பழமொழியை ’சர்வைவல் த்ரில்ல’ராக உருவாக்கி இருக்கிறேன்” என்கிறார் இயக்குநர். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மாரி செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார். “இப்படத்தின் இயக்குநர் தனபாலன் அண்ணா உதவி இயக்குநராக இருந்தபோது, நான் ஆபிஸ் பாயாக இருந்தேன். எனக்கு முன்னாலேயே அவர் இயக்குநராக வேண்டியவர்.
அவரை அறிமுகப்படுத்தும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை. சினிமாவை ஆழமாகப் புரிந்து கொண்டவர். இவரிடமிருந்து தான் நான் சினிமா கற்றுக் கொண்டேன். அவர் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்” என்று வாழ்த்தினார்.
காதலைக் கொல்லும் புகை! - அரசு திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவு பயின்று ஆபாவாணனின் படங்களில் பணிபுரிந்தவர் எம்.பாஸ்கர். அவரது எழுத்து, இசை, இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’கற்றது மற’. “நல்ல பழக்க வழக்கங்களை, மதிப்பீடுகளை, அற உணர்வைப் பெற்றோரிடமிருந்துதான் முதலில் கற்றுக்கொள்கிறோம்.
ஆனால், 18 வயதுக்குப் பிறகு சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளும் தேவையற்ற பழக்கங்களைத் தேவையான சமயத்தில் விட்டொழித்துவிட வேண்டும்.
இல்லாவிட்டால் எவ்வளவு இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை ஒரு முக்கோணக் காதல் த்ரில்லர் கதையாக இயக்கியிருக்கிறேன். இதில் புகைப் பழக்கம் பற்றி நுணுக்கமாகப் பேசியிருக்கிறோம் ” என்கிறார் இயக்குநர். இப்படத்தில் சுதிர், விக்டர், பௌசி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இணைய விளையாட்டில் ஒருவன்! - இணைய விளையாட்டுகளில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துகொள்வது தற்போது தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. ’கேம் ஆன்’ படத்தின் மூலம் அதைக் கதைக்களம் ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தயானந்த். ரியல் எஸ்டேட் துறையில் வேலையை இழக்கும் நாயகனைக் காதல் தோல்வியும் துவள வைக்கிறது.
அந்தச் சமயத்தின் இணைய விளையாட்டில் 30 ஆயிரம் ரூபாய் வெல்லும் அவன், அதன்பின்னர் அந்த உலகம் விரிக்கும் மாய வலையில் எப்படிச் சிக்குகிறான், அந்த உலகை இயக்குபவர்கள் யார், அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பது கதை.
கஸ்தூரி கிரியேஷன்ஸ் - கோல்டன் விங்ஸ் புரொடக் ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில். கீதானந்த், நேகா சோலங்கி, மதுபாலா, ஆதித்யா, சுபலேகா சுதாகர், வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT