Published : 06 Jan 2023 06:34 AM
Last Updated : 06 Jan 2023 06:34 AM
‘குட் லக் ஜெர்ரி’ என்கிற டார்க் காமெடி, ‘ரூஹி’ என்கிற ஹாரர் காமெடி, ‘குன்ஜன் சக்சேனா’ என்கிற பயோபிக் ட்ராமா என நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி. அந்த வரிசையில் சேர்ந்துள்ளது அவரது நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘மிலி’. இதுவொரு சர்வவைல் ட்ராமா. மலையாளத்தில் ‘ஹெல’னாக வெளிவந்து, பிறகு தமிழில் ‘அன்பிற்கினியா’ளாக ரீமேக் ஆன படம்தான் இந்தியில் ‘மிலி’ ஆகியிருக்கிறது. ஜான்வியின் நடிப்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
நிதின் சத்யாவின் ‘கொடுவா’
‘சத்தம் போடாதே’, ‘சென்னை 28’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனிக்க வைத்தவர் நிதின் சத்யா. தற்போது அவர் நாயகனாக நடித்து முடித்துள்ள படம் ‘கொடுவா’. ராமநாதபுரம் மாவட்டத்தில் இறால் வளர்ப்புப் பண்ணை ஒன்றில் பராமரிப்புத் தொழிலாளியாக வேலை செய்யும் இளைஞன், அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சினை, பழிவாங்கல் என்கிற பின்னணியில் ஜனரஞ்சக சினிமாவாக இதை எழுதி, இயக்கி வருகிறார் சுரேஷ் சாத்தையா.
துவாரகா புரொடெக் ஷன் சார்பில் பிளேஸ் கண்ணன் - ஸ்ரீலதா தயாரித்து வரும் இப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன் நாயகியாக நடிக்க, உடன் ஆடுகளம் முருகதாஸ், நரேன், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், சுபத்ரா, சந்தான பாரதி என பிரபல குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் டீசரை யுவன் சங்கர் ராஜாவும் நாயகன் - நாயகி முதல் தோற்றங்களை ஜி.வி.பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்தும் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
வட்டார வழக்குப் பாடல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசப்படும் வட்டார வழக்கு, சொலவடைகளை மட்டுமே கொண்ட ‘அவிய எவிய’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர் ‘கும்பாரி’ படக் குழுவினர். ராயல் என்டர்பிரைசஸ் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.
அண்ணன் தங்கை பாசத்துக்குள் ஊடுருவும் ஒரு நட்பின் கதையாக உருவாகியுள்ள இதில், விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா ஆகியோருடன் ஜான்விஜய், பருத்தி வீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி ஆகிய மூன்று பேர் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT