Last Updated : 25 Nov, 2016 10:36 AM

 

Published : 25 Nov 2016 10:36 AM
Last Updated : 25 Nov 2016 10:36 AM

வெற்றிப் படங்களின் சூத்திரதாரி!

அஞ்சலி: கே.சுபாஷ்

நடிகர் விஜயகாந்துக்கே உரிய பரபரப்போ, ஆர்ப்பாட்டமோ இல்லாத கதாபாத்திரம் அது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. வேலை எதற்கும் செல்லாமல் சமையல் செய்து, வீட்டுப்பாடம் கற்றுக்கொடுத்து உறங்கவைத்த பின்னர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் தனிமையில் மது அருந்தும் பன்னீர் செல்வம் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி, பின்பாதியில் விஸ்வரூபம் எடுக்கும் அந்தப் படம் தான் 1990-ல் வெளியான ‘சத்ரியன்’. கிழட்டு வில்லனாக மலையாள நடிகர் திலகன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுவகை உக்கிரத்தையும் யதார்த்தத்தையும் வழங்கிய படம். மணி ரத்னம் திரைக்கதை எழுதித் தயாரித்த அப்படத்தின் இயக்குநர்தான் கே. சுபாஷ்.

நவம்பர் 23 அன்று தன் 57-வது வயதில் காலமான கே. சுபாஷுக்கு சத்ரியன் மூன்றாவது திரைப்படம்தான். ஆனால் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்த படம் அது. சங்கர் கிருஷ்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட கே.சுபாஷ், ‘பராசக்தி’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களாக கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரில் ஒருவரான கிருஷ்ணனின் மகன் இவர். மணிரத்னத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘நாயகன்’ படத்தின் தயாரிப்பில் இவருக்குப் பெரும்பங்குண்டு என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாணியோ, தனித்துவமோ, முத்திரையையோ உருவாக்காமல், ஆனால் நீண்டகாலம் இயங்கி, வெற்றியையும் தோல்வியையும் கண்ட இயக்குநர்கள் வரிசை உண்டு. அந்த வரிசையில் கே. சுபாஷுக்கு இடம் உண்டு. 1989 முதல் 2005 வரை பல படங்களை இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட பத்துத் திரைப்படங்கள் வெற்றிப்படங்கள். தமிழ்த் திரையைத் தாண்டி இந்திப் படவுலகில் பல வெற்றிப்படங்களின் எழுத்தாளராக மின்னியவர்.

விஜயகாந்தின் நடிப்பு வாழ்விலும் அவரது அரசியல் பிம்பத்தைப் பெருமளவு உயர்த்தியதிலும் முக்கியப் பங்கு ‘ரமணா’ படத்துக்கு உண்டு. வெளியே மிகச் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒருவன்; அவனது இன்னொரு முகமோ சாகசத் தன்மை வாய்ந்தது. அமைதியாகக் குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் ஒரு சாதாரண நடுத்தர வர்க்க அப்பாவாகத்தான் ரமணாவில் அறிமுகமாவார் விஜயகாந்த். ரமணாவைக் கொஞ்சம் கூர்ந்துபார்த்தால் போதும்; சத்ரியன் எத்தனையோ வகையில் அந்தப் படத்துக்குத் தந்தை எனலாம். அந்த வகையில் கே. சுபாஷ், பன்னீர்செல்வத்தை உருவாக்கியதற்காக நினைவுகூரப்படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x