Published : 11 Nov 2016 11:44 AM
Last Updated : 11 Nov 2016 11:44 AM

கோலிவுட் கிச்சடி: ஒருமனதாக தமன்னா!

விஷாலும் கார்த்தியும் திரட்டிய அணி நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றது முதலே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்களாம். தற்போது தங்களது நட்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ள பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தின் கதை இரண்டு ஹீரோக்களை முன்னிலைப்படுத்தி எழுதிப்பட்டிருக்கிறதாம். ஆனால் ஒரே ஹீரோயின். கார்த்தி, விஷால் இருவரும் ஆளுக்கொரு கதாநாயகியை முன்மொழிய, தனக்கு வெற்றி தேடித் தந்த கூட்டணியில் இடம்பிடித்த தமன்னாவை முன்மொழிந்திருக்கிறார் பிரபு தேவா. மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டுவிட்டார்களாம் இருவரும்.

டை கட்டிய சிங்கம்

வெளியான 40 மணி நேரத்தில் 40 லட்சம் முறை பார்வையிடப்பட்டிருக்கிறது ‘சிங்கம் 3’ படத்தின் டீஸர் ட்ரைலர். இந்த மகிழ்ச்சியை இயக்குநர் ஹரியும் தயாரிப்பாளர்கள் டீமும் கொண்டாடியிருக்கிறார்கள். தூத்துக்குடி, சென்னை என உள்ளூரிலும் உள்நாட்டிலும் களம் கண்டுவந்த துரைசிங்கம் ஐபிஎஸ் தற்போது உலக நாடுகளுக்குப் பயணித்து அந்நிய வில்லன்களைப் பந்தாடித் திரும்பியிருக்கிறார். காவல் அதிகாரியாக ஒரு சண்டைக் காட்சி முழுக்க டை கட்டியபடி வில்லனைப் புரட்டி எடுத்திருக்கிறாராம்.

மீண்டும் பட்டதாரி

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனது 25-வது படமாக தனுஷ் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ அவரது சூப்பர் வெற்றிகளில் ஒன்று. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பொறுப்பைத் தனது மைத்துனி சவுந்தர்யாவிடம் ஒப்படைத்திருக்கிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு அனிருத், ஷான் ரோல்டன் இருவருமே இசையமைக்கிறார்கள். தமிழிலும் தெலுங்கிலும் உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் கதை வசனத்தை தனுஷே எழுதியிருக்கிறார்.

சவுந்தர்யா இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில்தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தனுஷ். தற்போது முழு வீச்சில் நடிக்கத் தொடங்கியிருக்கும் அமலா பால் மீண்டும் இந்தப் படத்துக்காக தனுஷுடன் ஜோடி சேர்வாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்கிறது தனுஷ் வட்டாரம்.

அறிவியல் சிவா

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ இந்த ஆண்டின் வசூல் சாதனைப் படங்களில் ஒன்றாகிவிட்டதில் அவரது சந்தை மதிப்பு தாறுமாறாக ஏறிவிட்டதாம். இதனால் அவரது கால்ஷீட்டைப் பெற்றிருக்கும் இயக்குநர்களுக்குச் சம்பளத்தை அள்ளிக் கொடுத்து அவரது படங்களைக் கைப்பற்ற நினைக்கிறார்களாம் பலர். தற்போது மோகன் ராஜா இயக்கத்திலும் பொன்ராம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, கால இயந்திரத்தை வைத்து மாயாஜாலம் செய்துகாட்டிய `இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். பிரம்மாண்டமான படமாக உருவாக இருக்கும் அறிவியல் புனைவுக் கதையாம் இது. ‘ரெமோ’ படத்தைப் போலவே இதிலும் சிவாவின் தோற்றத்தில் அசத்தலான மாற்றம் இருக்குமாம்.

வசூல் புலி

மோகன்லால் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘புலி முருகன்’. வெளிநாடுகளைத் தவிர கேரளா உள்ளிட்ட மற்ற தென் மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் வெளியானது. ஆனால் மற்ற மாநிலங்களின் வசூலைச் சேர்க்காமல் கேரளாவில் மட்டுமே இதுவரை ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறதாம் படக் குழு.

இதற்கு முன் மலையாளத்தில் வெளியாகி ரூ.65 கோடிவரை வசூல் செய்த ‘த்ருஷ்யம்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களின் சாதனையை ‘புலி முருகன் முறியடித்துவிட்டதாம். வெளிநாட்டு வசூலையும் மற்ற மாநிலங்களின் வசூலையும் சேர்ந்தால் இப்போதைக்கு இதை வேறு எந்தப் படமும் நெருங்க முடியாது என்கிறார்கள். தமிழில் புலி முருகன் மறுஆக்கத்தில் நடிக்கலாமா என்று பரிசீலிக்க, சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறாராம் கமல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x