Published : 13 Oct 2016 05:46 PM
Last Updated : 13 Oct 2016 05:46 PM

கோலிவுட் கிச்சடி: ஜிம்சியும் வந்துவிட்டார்

கடந்த ஆண்டு மலையாளப் படவுலகை ‘பிரேமம்’ கவிதையாகக் கலங்கடித்து என்றால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் `மகேஷிண்ட பிரதிகாரம்' நெகிழவைத்திருக்கிறது. ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான அந்தப் படத்தில் `ஜிம்சி' என்ற கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம், ஆந்திரம் வரை பிரபலமாகிவிட்டார் அபர்ணா பாலமுரளி. அவரை உடனடியாக கோலிவுட்டுக்கு அழைத்து வந்துவிட்டார் அறிமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ். மிஷ்கினின் உதவியாளரான இவர் இயக்கிவரும் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இங்கே அறிமுகமாகிறார் அபர்ணா. எத்தனை பேர் கேரளத்திலிருந்து வந்தாலும் கொள்ளிடமாகிவிடுகிறது கோலிவுட்!



இரண்டு ஹீரோக்கள்

தேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்க சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக விருப்பதாகக் கூறப்பட்டுவரும் படம் `சங்கமித்ரா'. இதன் பட்ஜெட்டை இறுதி செய்வதில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர். இதில் ஜெயம் ரவியை நாயகனாக முதலில் ஒப்பந்தம் செய்தார் இயக்குநர். தற்போது ஆர்யாவையும் மற்றொரு ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர். இவர்கள் தவிர மேலும் இரண்டு பெரிய ஹீரோக்களுக்கு இந்தக் கதையில் இடமிருக்கிறதாம். இதற்காகத் தெலுங்கு மற்றும் இந்திப் படவுலகைச் சேர்ந்த இரண்டு ஹீரோக்களிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் இயக்குநர். ஹீரோக்களை முடிவு செய்த பிறகே கதாநாயகி வேட்டை தொடங்கும் என்கிறது இயக்குநர் தரப்பு.



ரத்னமகாதேவி அவதாரம்!

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘காஷ்மோரா’. சரித்திரப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ரத்னமகாதேவி என்கிற ராணியாக நடித்திருக்கிறாராம் நயன்தாரா. அனுஷ்காவுக்கு ஒரு ருத்ரமாதேவி போல, நயன்தாராவுக்கு இந்த ‘ரத்னமகாதேவி’ அமையுமா?



கலையரசன் அடுத்து

‘ராஜா மந்திரி’, ‘கபாலி’ படங்களைத் தொடர்ந்து மின்னல் வேகத்தில் நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து முடித்துவிட்டார் ‘மெட்ராஸ்’ படப் புகழ் கலையரசன். இதற்கிடையில் தனது அடுத்த படத்தையும் அறிவித்துவிட்டார். ‘அதே கண்கள்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் விஷ்ணுவர்த்தனின் உதவியாளரான ரோகின் வேங்கடேசன். பல அறிமுக இயக்குநர்களுக்கு முதல் வாய்ப்பினை அளித்த திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஜனனி ஐயர், ஷிவாதா என இரண்டு கதாநாயகிகள். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டருக்கு எக்கச்சக்கமாக லைக் போட்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.



பசுமை அரசியல்!

தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்குக் காய் கனிகளை விநியோகம் செய்யும் பசுமையான ஊர் ஒட்டன்சத்திரம். இந்தியாவின் மிகப் பெரிய காய் கனி மார்கெட்களில் ஒன்றான இதையே கதைக் களமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலமுருகன். இயக்குநர் ஜெகனின் உதவியாளரான இவர் இயக்கிவரும் ‘தங்கரதம்’ படத்தில் பச்சைக் காய் கனிகளின் அரசியலைப் பேசுகிறாராம். ‘எனக்குள் ஒருவன்’, ‘ஸ்ட்ராபெரி’ போன்ற படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த வெற்றி, இந்தப் படத்தில் தனிக் கதாநாயகன் ஆகிறார். கதாநாயகியாக நீரஜா அறிமுகமாகிறார்.



பொருந்தாத கதைகள்

‘தெறி’, ‘24’ படங்களுக்குப் பிறகு தமிழில் படங்களை ஒப்புக்கொள்ளாத சமந்தாவைச் சுற்றித் திருமணச் செய்திகளே வட்டமடித்துவந்தன. இந்நிலையில் அடுத்த ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. அதற்கு முன்பே மித்ரன் என்ற அறிமுக இயக்குநரின் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்கிடையில், பல கதைகளைக் கேட்ட சமந்தா, ‘எனக்குப் பொருத்தமாக இல்லை’ என்று நிராகரித்துவருகிறார் என்கிறார்கள். கல்யாண நெருக்கடி?



வெளியீட்டுக்கு முன்பே...

விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சைத்தான்' படத்தை எழுதி இயக்கியிருப்பவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்து அசந்துபோனாராம் சிபிராஜ். உடனடியாக இயக்குநரை அழைத்து, கைவசம் கதை இருக்கிறதா எனக் கேட்டிருக்கிறார். பிரதீப் சொன்ன கதை பிடித்துவிட்டதால் உடனே அவரைத் தனது அடுத்த படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்துவிட்டாராம். முதல் பட வெளியீட்டுக்கு முன்பே இரண்டாவது வாய்ப்பு!



லிங்குசாமியின் கதாநாயகி

தனது படங்களில் கதாநாயகிகளின் அழகை மிளிரச்செய்வதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார் இயக்குநர் லிங்குசாமி. ஒரு இடைவெளிக்குப் பிறகு, பிரபல தெலுங்கு நாயகன் அல்லு அர்ஜுனை வைத்துப் பெரிய பட்ஜெட் படம் இயக்கும் இவர், அந்தப் படத்துக்கு கீர்த்தி சுரேஷைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஏற்கெனவே ரசிகர்களைக் கிறங்கவைக்கும் கீர்த்தியின் வசீகரம் இந்தப் படத்திற்குப் பின் கூடிவிடும் என்று எதிர்பார்க்கலாம். லிங்குசாமியின் இணை இயக்குநரான ‘ரேணிகுண்டா’ படப்புகழ் பன்னீர்செல்வம் இயக்க, விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ்தான் கதாநாயகி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x