Published : 13 Jun 2014 11:45 AM
Last Updated : 13 Jun 2014 11:45 AM
‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என காதல் பாடலாகட்டும், ‘மயக்கமா கலக்கமா’ என சோக ராகமாகட்டும். கள்ளமும், கபடமும் இல்லாத காந்தக் குரலில் பாடித் திரிந்த கானக்குயில் பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று நம்முடன் இல்லை. தங்கச்சரிகை தலைப்பாகை, பட்டு அங்கவஸ்திரம், கண்ணாடி, கலர்கலராய் பேனாக்கள், இடது தோள்பட்டையில் ஒரு ஜோல்னா பை... இதுதான் மக்கள் மனதில் பதிந்திருக்கும் பி.பி. ஸ்ரீனிவாஸின் பிம்பம்..
அப்போது தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி. ஆருக்கும் டி.எம்.சௌந்தரராஜன்தான் பின்னணி பாடிக்கொண்டிருந்தார். அவர் குரல் ஜெமினி கணேசனுக்கு சரியாக பொருந்தாததால் அவருக்கு ஏ.எம்.ராஜா பின்னணி பாடிவந்தார்.
1959-ம் ஆண்டு வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜெமினி கணேசனுக்காக ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என்ற பாடலை முதன் முதலாகப் ஜி.ராமநாதனின் இசையில் பாடினார் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஜெமினி கணேசனின் குரலுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியது ஸ்ரீனிவாஸின் குரல். அதன்பின்னர் அவர் கிட்டத்தட்ட ஜெமினி கணேசனின் குரலாகவே மாறிப்போனார் என்றுகூட சொல்லலாம். பி.பி. ஸ்ரீனிவாஸ் 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இத்தனை பாடல்களை பாடிய இவர், தான் கலைத்துறையில் நுழைவதற்கு தடையாக இருந்த ஜோதிட சாஸ்திரத்தை அடித்து நொறுக்கிய கதை தெரியுமா?
ஸ்ரீனிவாஸ் கலைத்துறையில் வெற்றி பெறுவாரா என்று அறிவதற்காக அந்தக் காலத்தில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார் அவரது தயார் சேஷகிரி அம்மாள். ஸ்ரீனிவாஸின் ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்த ஜோதிடர் கலைத்துறையில் இந்தப் பிள்ளை ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டான் என்று அடித்துக் கூறிவிட்டார். ஜோதிடரின் கூற்றால் தாயார் மனம் கலங்கினாலும், ஸ்ரீனிவாஸ் துளியும் அசரவில்லை.
நீங்கள் சொல்லும் பலன்கள் எல்லாம் பலிக்குமா என்று ஸ்ரீனிவாஸ் ஜோதிடரைக் கேட்க, பெரும்பாலும் பலிக்கும். சிலவேளை பலிக்காமலும் போகலாம் என்று பதிலளித்தார் ஜோதிடர். அப்போது ஸ்ரீனிவாஸ் அவரிடம் “என் விஷயத்தில் உங்கள் ஜோதிடம் பலிக்காமல் போகலாம்” என்று சொல்ல, இந்த பதிலால் ஜோதிடரே சற்று மிரண்டு போனாராம். அதேமாதிரி சொன்னபடியே ஜோதிடத்தை பொய்யாக்கியாக்கியும் காட்டினார் ஸ்ரீனிவாஸ்.
சென்னையில் அண்ணாசாலையை ஒட்டிய உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டல் இடம் மாற்றப்படும் வரை தினமும் மாலை நாலுமணி அளவில் பி.பி.ஸ்ரீனிவாஸை அங்கே பார்க்கமுடியும். அவருக்கும், அவருக்கு பரிமாறும் ஊழியருக்குமான உறவு மிகவும் அலாதியானது. தனக்கு இன்னது வேண்டுமென அவரும் சொல்லமாட்டார், ஓட்டல் ஊழியரும் கேட்கமாட்டார். ஒரு டம்ளரில் தண்ணீர் வரும், அதைத் தொடர்ந்து காஃபி வரும். தன் பையில் இருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சில பிஸ்கெட்டுகளை அந்த காஃபியில் தொட்டு சாப்பிடுவார். தன் சுற்றத்தை கவனிக்காத ஒரு ஏகாந்தியாய் பிஸ்கெட்டையும், காஃபியையும் ருசித்துக் கொண்டிருப்பார். அதன்பின், தான் கொண்டுவந்திருக்கும் பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு தீவிரமான யோசனையுடன் எழுத ஆரம்பிப்பார். இது அவரின் அன்றாட வழக்கமாகவே மாறிப்போனது.
பாடாத பாட்டெல்லாம் பாடியபின், தமது 83 வயதில் மறைந்த அந்த மாமனிதரின் குரல் தமிழையும் அதன் அழகையும் இனிவரும் காலத்துக்கும் சொல்லிக்கொண்டேயிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT