Last Updated : 27 Jun, 2014 11:19 AM

 

Published : 27 Jun 2014 11:19 AM
Last Updated : 27 Jun 2014 11:19 AM

குறும்படத்தை சினிமா போல் எடுப்பது சரியல்ல!: லெனின் நேர்காணல்

தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர் பீம்சிங்கின் புதல்வர். தமிழ்த் திரையுலகின் முக்கிய திரைப்படங்களான உதிரிப்பூக்கள், மெட்டி, மௌனராகம், நாயகன் தொடங்கித் தற்போதைய ராமானுஜன் வரை படைப்புகளாகச் சிலாகிக்கப்படும் பல படங்களுக்கும், வர்த்தக வெற்றிகளைக் குவித்த வணிகப் படங்களுக்கும் நேர்த்தியாய் கத்தரி வைத்த படத்தொகுப்பாளர். மற்றொரு பக்கம் ‘நாக் அவுட்’ குறும்படத்தில் ஆரம்பித்து பல முழுநீள படங்களின் இயக்குநர் எனப் படைப்பாளி முகம் கொண்டவர் லெனின்.

புதுவையில் நடந்த திருநங்கைகள் திரைப்பட விழாவுக்கு வந்திருந்தார். அவரது இயக்கத்தில் உருவான ’மதி எனும் மனிதனின் மரணம்’ குறும்படமும் ஒளிபரப்பானது.

திரைப்பட விழாவின் இறுதியில் ’ தி இந்து’வின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் லெனின்.

தமிழ் சினிமா சூழல் உங்க பார்வையில் எப்படியிருக்கு?

குழப்பான நிலையில் இருக்கு. பட உருவாக்கம் குழப்பமாகியுள்ளது. செலவு தான் அதிகமாகியிருக்கு. மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதுபோல் இல்லை.

குறும்படத்திலிருந்து திரைப்படத்துறைக்கு வருவோர் அதிகரித்திருக்கிறார்களே?

குறும்படமும் கமர்சியலா மாறிப்போச்சு. அது சரியான முறை இல்லை. குறும்படத்தையும் சினிமா போல் எடுப்பது தவறு. இயல்பா இல்லாம, சினிமா போலவே ஷாட் வைக்கிறாங்க. செலவும் குறும்படத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கு. குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வருவது சரியான முறையில்லை என்பது என் கருத்து. குறும்படத்தின் நோக்கம் பொழுதுபோக்கு அல்ல.

தமிழ் திரையுலகில் பிசியான எடிட்டர் நீங்க. ஏன் குறும்பட உலகுக்கு வந்தீங்க?

இப்பவும் எடிட்டரா இருக்கேன். குறும்படம் எடுக்கிறேன். ரொம்ப வருசமா எடிட்டரா இருக்கேன். ஒரே மாதிரி கதை, களம் என்று பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி? அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். மனசில தேக்க நிலை வரக் கூடாது. புது விசயத்தைக் கத்துக்கிட்டே இருக்கணும். அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்.

குறும்பட உலகத்தைத் தொடர்ந்து கமர்ஷியல் சினிமா தர விருப்பமுள்ளதா?

கமர்சியல் சினிமாவில் ஆர்வமில்லை. திருநங்கையர் திரைப்பட விழாவுக்கு வந்த வேளையில் சென்னையில் பிரபலமான ஒருவர் குறும்பட விழாவை ஏற்பாடு செய்திருந்தார். நான் அங்கு செல்வதைவிட இங்கு வந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவே விரும்புறேன்.

நிறையபேர் சென்னையிலதானே சினிமா இருப்பதா நினைக்கிறாங்க?

உண்மையில் சினிமா சென்னையில் மாத்திரம் இல்லை. கமர்சியல் வழக்கப்படி பி மற்றும் சி சென்டர்களான பல ஊர்களில்தான் கிரியேட்டிவ் திறனுடன் இருப்பவர்கள் வருகிறார்கள். அந்த சென்டர்களில்தான் படைப்புத் திறன் அதிகமாக இருக்கு. நல்ல குறும்படங்களை இங்கிருந்து வருவோர்தான் தருகிறார்கள்.

நீங்க இப்ப என்ன குறும்படம் எடுக்குறீங்க?

பழனியில் ஓடும் குதிரை வண்டிகள் பற்றி கடந்த 3 ஆண்டுகளாக ஆவணப்படம் எடுத்துட்டு இருக்கேன். குதிரை வண்டி பயணம் மறைந்து விட்ட இக்காலத்திலும் அங்குதான் குதிரை வண்டி பயணம் அதிகளவில் நடக்குது. குதிரைகளைப் பார்த்தவுடன் குழந்தைகள் பார்க்கும் பார்வை அலாதியானது. பலரும் பயணங்களுக்குப் பயன்படுத்துறாங்க. படத்தோரு பெயர் ஜர்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x