திரைப்பார்வை: எப்படி இருக்கிறது ‘12த் மேன்’ ?


திரைப்பார்வை: எப்படி இருக்கிறது ‘12த் மேன்’ ?

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் ‘12த் மேன்’. கிட்டதட்ட 3 மணி நேரம் அளவில் ஓடும் இந்தப் படம், பார்வையளார்களிடம் கலவையான விமர்சனத்தையும் பெற்றுள்ளது. ‘பெர்வெட்டி ஸ்கொனசூடி’ (Perfect strangers) என்னும் பெயரில் வெளிவந்த இத்தாலியப் படம், அகதா கிறிஸ்டியின் ‘Murder on the Orient Express’ நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் எடுக்கப்பட்ட படம் ஆகிய இரண்டும்தான் இந்தப் படத்துக்கான அடித்தளம் எனச் சொல்லப்படுகிறது.


பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்ட இத்தாலியப் படத்தின் கதையை, இந்தப் படம் முதற்பாதியாகக் கொண்டுள்ளது. கல்லூரி நண்பர்கள், அவர்கள் மனைவிமார், கல்யாணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 11 பேர் ஒரு சுற்றுலா விடுதிக்கு பேச்சுலர் பார்டிக்காகச் செல்கின்றனர். இந்தக் கூட்டத்தில் திருமணமாகாத, ஜெண்டில்மேனான சித்தார்த்தின் விருந்து இது. இந்த விருந்தின் தொடக்கத்தில் மோகன்லால் ஒரு குடிகாரனாக அறிமுகமாகிறார். விருந்து தொடங்கியதும் வங்கி அதிகாரியான சாமுக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதைத் தொடர்ந்து அழைப்புகள் குறித்த கிண்டல், நண்பர்களை ஒரு வினோத விளையாட்டுக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு நண்பர்கள் அனைவரும் தங்கள் போனைப் பொதுவில் வைக்க வேண்டும். அழைப்பு வந்தால் ஸ்பீக்கர் போனில் பேச வேண்டும். துண்டிக்கக் கூடாது. வாட்ஸ்-அப், குறுஞ்செய்திகளை எல்லோருக்கும் கேட்கப் படிக்க வேண்டும். இவைதான் விளையாட்டின் விதிகள். இதற்குச் சிலர் சம்மதிக்கத் தயங்குகிறார்கள். பிறகு மனைவிமாருக்குப் பயந்து போனை வைக்கிறார்கள். அழைப்புகள் வர வர, ரகரியங்கள், தவறுகள், அவர்களுக்குள்ளேயான திருமணம் மீறிய உறவுகள் எல்லாம் குதித்து வருகின்றன. விருந்திலிருந்து எல்லோரும் எழுந்து அறைகளுக்குள் செல்கிறார்கள். இதுவரை இத்தாலியப் படம்தான். ஆனால் அந்தப் படம், இதை உளவியல் ரீதியாக மனித உறவு குறித்த கேள்வியை எழுப்பும். இந்தப் படம் அதை, அடுத்தவர் ரகசியம் அறிய முயலும் குறுகுறுப்பு ஆக்கியிருக்கிறது.

ஒரு மர்மமான மரணத்துக்குப் பிறகு இந்தப் படம், தனது விசாரணை படலத்துக்குச் செல்கிறது. ‘12 ஆங்கிரி மேன்’ படம்போல் ஓர் அறைக்குள் மோகன்லாலுடன் சேர்த்து 11பேர் கூடுகிறார்கள். போலீஸ் அதிகாரியான மோகன்லால்தான் விசாரணை செய்கிறார். இந்த மோகன்லால் கதாபாத்திரம், அகதா கிறிஸ்டியின் நாவலில் வரும் துப்பறியும் நாயகன்போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கொலையானவருடன் நெருங்கிய தொடர்புள்ள ஒவ்வொருவரும் கொலைகாரராக இருக்க வாய்ப்புள்ள ரீதியில் விசாரணை செல்கிறது. இதில் விசாரணை அறையிலிருந்து விவரிப்புக்கு, காட்சி மாறும் முறை நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காட்சிகளில் உள்ள சீரியல் வசனங்களைப் போல் அல்லாமல் விசாரணை முறுக, முறுக வசனம் பொருத்தமாக இருக்கிறது.

இந்தப் படத்தை இரு முடிவுள்ள கதையாகப் பார்க்கலாம். மூன்று மணிநேரம் என்பதை இந்த அம்சம்தான் பார்க்கக் கூடியதாக மாற்றியிருக்கிறது. அனுஸ்ரீ கதாபாத்திர வடிவமைப்புதான் படத்துக்குக் குணம் செய்யக்கூடியது என்பதால் அதைத் தொடக்கத்திலிருந்தே ஒழுங்காக வடிவமைத்திருக்கிறார்கள். தன் மன சஞ்சலங்களையும் அவர் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். விசாரணைக்குள் மோகன்லால் உள்பட எல்லோரும் பொருத்தமான நடிப்பை நல்கியிருக்கிறார்காள்.

வழக்கமான ஜீத்து ஜோசப் படங்களில் வெளிப்படும் நாடகத்தனம் இந்தப் படத்திலும் உண்டு. வலுவாக திரைக்கதைதான் அவரது படங்களின் பலம். அதை நம்பித்தான் இப்படமும் பயணிக்கிறது. ஆனால், ‘த்ரிஷ்ய’த்தில் சாமானியம்-அமைப்பு என்னும் ஒரு போராட்டம் இதில் இல்லை. முற்றிலும் த்ரில்லர் மட்டுமே இருக்கிறது. பார்வையாளர்களின் முடிவுக்கு மாறுபட்ட ஒன்றைச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு வினோதமான வில்லனை இந்தப் படம் இறுதியில் கூண்டில் ஏற்றிவிடுகிறது. அதனால் முடிச்சு அவிழும் இடம் பார்வையாளர்காளுக்குத் திருப்தி அளிக்காத விதத்தில் இந்தப் படம் முடிந்துவிடுகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x