Published : 20 May 2016 03:08 PM
Last Updated : 20 May 2016 03:08 PM

மும்பை மசாலா: காஜலின் துணிச்சல்!

காஜலின் துணிச்சல்!

காஜல் அகர்வாலுக்கு பாலிவுட் புதிதல்ல. கடந்த 2004-ல் வெளியான ‘க்யூன் ஹோ ஹயா நா’ (Kyun! Ho Gaya Na) படத்தில் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக அறிமுகமான பின்புதான் தென்னிந்தியப் திரைப்படங்களில் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தார். இங்கே பிரபலமான பிறகு ‘சிங்கம்’, `ஸ்பெஷல் 26’ என்று தாய்மொழியான இந்தியில் நடித்தாலும் தற்போது அவர் ரந்தீப் ஹூடாவுக்கு ஜோடியாக நடித்து முடித்திருக்கும் ‘டூ லஃப்ஸன் கீ கஹானி’ (Do Lafzon Ki Kahani) படத்துக்கு தென்னிந்தியாவிலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. காரணம், இந்தப் படத்தில் முதல் முறையாக `லிப் டு லிப்’ காட்சியில் துணிச்சலாக அவர் நடித்திருப்பதுதான்.

அய்யோ உதடுகள்!

கான் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த இந்தியப் படங்களைவிட அதிகமாகப் பேசப்பட்டது ஐஸ்வர்யாவின் ‘பர்ப்பிள்’ லிப்ஸ்டிக். ஐஸ்வர்யா ராயின் ‘கான்’ திரைப்பட விழா தோற்றம் குறித்தும் அவருடைய ‘பர்ப்பிள்’ லிப்ஸ்டிக் பற்றியும் டிவிட்டரில் அவரது ரசிக நெட்டிசன்கள், “அய்யோ உதடுகள்” என்று விமர்சித்துத் தள்ளிவிட்டார்கள். ஆனால், இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாத ஐஸ்வர்யா, “பதினைந்து ஆண்டுகளாக ‘கான்’ திரைப்பட விழாவில் கலந்துகொள்கிறேன். பேஷனை ஒரு கலையைப் போல நான் மதிக்கிறேன். ஆனால், எனக்கும் ஒரு வாழ்க்கை, குடும்பம் இருக்கிறது. இதில் மட்டும் என் கவனமில்லை. அதனால், என் தோற்றத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை” என்கிறார் ஐஸ்வர்யா.

சொதப்பிய ‘அசர்’

கடந்த வாரம் வெளியானது ‘அசர்’ திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்புவரை, கிரிக்கெட் வீரர் அசருதீன் வாழ்க்கையை அதிகார பூர்வமாகப் படமாக்குவதாகச் சொல்லிவந்த படக்குழுவினர், படத்தை வெளியிடும்போது, இது யாருடைய வாழ்க்கையையும் பிரதிபலிக்கவில்லை என்ற பொறுப்புத் துறப்பு வாசகத்துடன் வெளியிட்டிருந்தனர். இந்த விஷயமே பலரால் விமர்சிக்கப்பட்டது. காரணம் அசருதீன் பற்றிய சர்ச்சைகளுக்கு பதிலளிக்கக்கூடியதாக இந்தப் படம் இருக்கும் என்றும் பலத்தரப்பிலும் எதிர்பார்த்தனர். படமும் எந்த தாக்கத்தையும் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தவில்லை. அசருதீன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இம்ரான் ஹாஷ்மியின் நடிப்பும் படத்துக்குப் பெரிதாக உதவவில்லை. டோனி டி சவுசா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், ஒரு காட்சிகூட அசருதீன்மீது மீண்டும் நன்மதிப்பை உருவாக்கவில்லை. பாலிவுட் சில நல்ல ‘பயோபிக்’ வகைப் படங்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால், ஒரு ‘பயோபிக்’ படத்தை எந்தளவுக்கு மோசமாக எடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது ‘அசர்’ திரைப்படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x