Published : 27 May 2016 11:51 AM
Last Updated : 27 May 2016 11:51 AM
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தைத் தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அடுத்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ‘மஞ்சப்பை’ படத்தின் மூலம் ஹிட்டடித்த ராகவன். இந்தப் படத்தின் ஆர்யா. விறுவிறுப்பாகப் படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகியிருக்கிறார் கேத்தரின் தெரஸா. கார்த்தி, விஷாலைத் தொடர்ந்து ஆர்யாவின் ஜோடியாகியிருக்கும் கேத்தரினின் அடுத்த இலக்கு விஜய்யும் அஜித்துமாம்.
மூன்று மொழி நாயகன்!
மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க மோகன்லால் தயங்கியதில்லை. கமலுடன் ‘உன்னைப்போல் ஒருவன்’, விஜய்யுடன் ‘ஜில்லா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த மோகன்லால் தற்போது தெலுங்குப்பட உலகின் முன்னணி நாயகன் ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து ‘ஜனதா கேரேஜ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். கொரட்டலா சிவா இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா, நித்யா மேனன் என இரண்டு ஜோடிகள். மோகன்லால் பிறந்த தினத்தையொட்டி சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு அதிரடி கிளப்பினார்கள்.
இதற்கிடையில் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் மோகன்லால் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கவுதமி நடிக்கிறார். மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளுக்கு ‘நமது’ என்றும் தெலுங்குப் பதிப்புக்கு ‘மனமன்தா’ என்றும் தலைப்பு சூட்டியிருக்கிறார்கள்.
‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ என்ற மலையாளப் படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் கவுதமி ஜோடி தமிழ் பதிப்புக்கு மதன் கார்க்கி வசனம் மற்றும் பாடல்களை எழுத, படத்தை இயக்குபவர் பிரபல தெலுங்கு இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி.
சாட்டை 2
சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை போன்ற படங்களைத் தொடர்ந்து பிரபு சாலமன் தனது அடுத்த தயாரிப்புகளை சத்தமில்லாமல் தொடங்கிவிட்டார். பரத் நடிக்க, வடிவுடையான் இயக்கிவரும் ‘பொட்டு’ முடியும் கட்டத்துக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சாட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சாட்டை 2’ என்ற தலைப்பிலேயே தயாரிக்கிறார்கள். ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’, ‘ஹரிதாஸ்’ படங்களின் மூலம் புகழ்பெற்ற கிஷோர் மற்றும் ‘மைனா’ புகழ் தம்பி ராமைய்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுவருகிறதாம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கவுதம்.
இரண்டே கதாபாத்திரங்கள்
ராமநாதன் கே.பி. என்ற அறிமுக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகிவரும் படம் ‘வித்தையடி நானுனக்கு'. இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கதை, திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்கி வருகிறாராம். இது ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர். தமிழில் இந்த வகைமையில் இதுவரை படம் வரவில்லை என்கிறார் இயக்குநர்.
தன் வழி தனி வழி அதுதான் சரியான வழி என அடம்பிடிக்கும் கதாபாத்திரங்களாம் அந்த இரண்டு பேரும். இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேரெதிர் துருவங்கள். திகிலும் தீஞ்சுவையும் கலந்த அவர்களின் காதலும், மோதலும்தான் இந்தப் படம் என்கிறார் இயக்குநர். அமெரிக்கா வாழ் தமிழ்ப் பெண்ணான சௌரா சையத் கதாநாயகியாகவும் இயக்குநரே கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்கள்.
பெருமைப்படும் நாயகன்
49ஓ படத்தின் மூலம் தனது மறுவரவைத் தரமாக நிகழ்த்தினார் கவுண்டமணி. தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. இந்தப் படத்தின் மூலம் நாயகனாகத் தனது பயணத்தைத் தொடங்குகிறார் ‘சுந்தரபாண்டியன்’ படப்புகழ் சௌந்தரராஜா.
இந்தப் படத்தில் சௌந்தராஜாவுக்கு ஜோடி ‘பரதேசி’ புகழ் ரித்விகா. “அத்தனை சீக்கிரம் அமைந்துவிடாத வாய்ப்பாக கவுண்டமணியுடன் நடித்ததை நினைக்கிறேன்” என்று கூறும் சௌந்தர்ராஜா, “ என்னைத் தேடி வந்து கதை சொல்றவங்க கிட்ட எனக்கு பிடிச்ச கேரக்டர் இருந்தா சந்தோஷமா நடிப்பேன். அது ஹீரோவா இருந்தாலும் சரி. வில்லனா இருந்தாலும் சரி” எனும் இவர், நடிகர் சங்க கிரிக்கெட் நிகழ்ச்சியில், அஜித் பாட்டு போடக்கூடாது என்று சர்ச்சையில் சிக்கியவர். ஆனால், அஜித் எனக்குப் பிடித்த நடிகர். என் பெயர் எப்படியோ அடி பட்டுவிட்டது” என்று வருந்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT