Published : 01 Apr 2016 12:02 PM
Last Updated : 01 Apr 2016 12:02 PM

கோலிவுட் கிச்சடி: இரண்டு பேய்கள்

மாதம் ஒரு பேய்ப் படம் என்ற நிலை மாறி, மாதம் இரண்டு படங்களாக அதிகரித்தது. தற்போது வாரவாரம் பேய்ப் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. இன்று வெளியாகும் நான்கு படங்களில் இரண்டு படங்களில் பேய்கள் மோதுகின்றன. ஒரு படம் ‘டார்லிங் 2’. ‘மெட்ராஸ்’ படப் புகழ் கலையரசன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ்காந்த், காளி வெங்கட் நடித்திருக்கும் இந்தப் படத்தில் பல் மருத்துவர் மாயா பேயாக அவதாரம் எடுத்திருக்கிறாராம்.

படத்தை இயக்கியிருப்பவர் விருது பெற்ற குறும்படங்களை இயக்கியிருக்கும் சதீஷ் சந்திரசேகர். இரண்டாவது படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. இந்தப் படத்தில் ‘காக்கா முட்டை’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் பேயாக அவதாரம் எடுத்திருக்கிறார். கூடுதல் பேய் ஓவியாவாம். பேய்களிடம் மாட்டிக்கொண்டு விழிப்பவர்கள் கருணாகரன், வைபவ், வி.டி.வி. கணேஷ். படத்தை இயக்கியிருப்பவர் எஸ். பாஸ்கர். இந்தப் படத்தின் கதை பிடித்துப்போய் தயாரித்திருக்கிறார் தற்காலத்தின் பேய்ப்பட மன்னன் சுந்தர்.சி. எந்தப் பேய் வசூல் பேய் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.



மேலும் ஒரு ஹீரோ!

‘மௌன குரு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நகைச்சுவை நடிகர் காளி வெங்கட், குறும்படங்களில் நடித்துக் கிடைத்த புகழின் வழியாக சினிமாவுக்குள் நுழைந்தவர். ‘இறுதிச் சுற்று’ படத்தில் ரித்திகா சிங்கின் அப்பாவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். நகைச்சுவை குணசித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே ஜெயம் ரவி, தனுஷ், விஜய் என முன்னணி நாயகர்களின் நண்பனாக நடித்துவரும் இவரையும் தற்போது கதையின் நாயகன் ஆக்கிவிட்டார் புதிய பெண் இயக்குநர் உஷா கிருஷ்ணன். விரைவில் வெளியாக இருக்கும் ‘ராஜா மந்திரி’ படத்தில்தான் இந்தப் பதவி உயர்வு. பாசமான அண்ணன் தம்பிகள் இருவரும் ஒரே பெண்ணைக் காதலிப்பதுதான் கதை. சென்டிமென்ட் கலந்த நகைச்சுவைப் படமாக இதை உருவாக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார் சுசீந்திரனின் உதவியாளரான உஷா கிருஷ்ணன்.



தொடரும் பயணம்

பிரதான பாத்திரத்தில் சந்தானம் நடித்த ‘வாலிப ராஜா’ வெற்றி பெறவில்லை என்றாலும் அவரது கதாநாயகப் பயணம் ஜிவ்வென்று உயரப் பறக்கிறது. நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷுக்குப் பெரும் புகழைச் சேர்த்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தலைப்பை வாங்கி அதில் நாயகனாக நடிக்கிறார். இதில் சமையல் நிபுணராக நடிக்கும் சந்தானம், படப்பிடிப்பில் தனக்குச் சமையல் வித்தைகள் கற்றுத்தர சமையல் நிபுணர்களைப் பணியில் அமர்த்தியிருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆனந்த பால்கி இயக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடி மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா. சந்தோஷ் நாராயணன் இசைதான் இந்தப் படத்துக்கு வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கியிருக்கிறாராம் சந்தானம்.



பிருத்திவிராஜ் வாங்கிய ‘தெறி’

விஜய் நடித்து முடித்திருக்கும் ‘தெறி’ படத்தின் முதல் பிரதி தயாராகி தணிக்கை குழுவின் பார்வைக்கு படம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாம். இதற்கிடையில்‘தெறி’யின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது என்கிறார்கள். இந்தப் படத்தின் கேரள மாநில திரையரங்க விநியோக உரிமையைப் பிரபல மலையாள முன்னணி நடிகரான பிருத்திவிராஜ் தனது ‘ஆகஸ்ட் சினிமாஸ்’ நிறுவனம் மூலம் பெரும் தொகைக்கு வாங்கியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிருத்திவிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பாவாட’ படத்தில் அவர் விஜயின் ரசிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.



அணிவகுக்கும் படங்கள்

விஜய் சேதுபதிக்குத் திருப்புமுனை வெற்றியைக் கொடுத்த படம் ‘நானும் ரௌடிதான்’. அந்த நன்றியை மறக்காத விஜய் சேதுபதி இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்களாம். ஏற்கெனவே எக்கச்சக்கப் படங்களைக் கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் பட்டியலில் தற்போது இந்தப் படமும் இணைந்துள்ளது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்துக்கு இரண்டு கதாநாயகிகளைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.



16 ஆண்டுகள் இடைவெளி

திரைப்படக் கல்லூரி நடத்திக்கொண்டு விளம்பரப் படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்துவரும் ராஜீவ் மேனன் 2000-ல் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை இயக்கினார். தற்போது கிட்டத்தட்ட 16 வருட இடைவெளிக்குப் பிறகு அட்டகாசமான காதல் கதை ஒன்றை இயக்கத் தயாராகிவிட்டார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஹீரோ ‘பென்சில்’ நாயகன் ஜி.வி.பிரகாஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x