Published : 01 Apr 2016 11:56 AM
Last Updated : 01 Apr 2016 11:56 AM
தமிழ் சினிமாவில் முன்னணிக் கதாநாயகிக்கு திருமணமாகிவிட்டால் அதன் பிறகு அவரைக் கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற மாயை உண்டு. ஆனால், மலையாளப் பட உலகில் இதுபோன்ற கற்பனையான பிம்பங்கள் எதுவும் கிடையாது. இதற்கு உதாரணம், திருமணத்துக்குப் பிறகு கதாநாயகிகளாக நடித்துவரும் நடிகைகள். இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் அமலா பால். தமிழில் தனுஷ் தயாரித்துவரும் ‘அம்மா கணக்கு' படத்தில் 14 வயது பெண்ணின் தாயாக நடித்துவருகிறார் அமலா. இதற்கிடையில் மலையாளத்தில் இவர் ஒப்புக்கொண்டிருக்கும் படம் ‘ஷாஜஹானும் பரீ குட்டியும்’. முக்கோணக் காதலைக் கதையாகக் கொண்ட இந்தப் படத்தில் அமலாதான் ஒரே நாயகி. இவரைத் திரையில் காதலிக்கத் தயாராகும் அந்த இரண்டு நாயகர்கள் ஜெயசூர்யாவும் குஞ்சாக்கோ போபனும்.
‘பிரியமானசம்’ சர்ச்சை
இந்தியாவில் இதுவரை வெகுசில திரைப்படங்கள் மட்டுமே சமஸ்கிருத மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளன. 1983ல் வெளியான ‘ஆதி சங்கராச்சாரியார்', 1993ல் வெளிவந்த ‘பகவத் கீதா'. இந்த இரண்டு படங்களைத் தயாரித்து இயக்கியவர் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல விருது இயக்குநர் ஜி.வி. ஐயர்.
கேரளத்தில், வினோத் மன்கரா இயக்கியிருக்கும் ‘பிரியமானசம்' மூன்றாவது சமஸ்கிருதத் திரைப்படம். அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் ‘பிரியமானசம்' படத்துக்கு சமஸ்கிருத மொழியில் சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
‘பிரியமானசம்' படத்திற்கு, மாநில மொழிப் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், கர்நாடகத்தில் ‘மட்டூர்' கிராமத்தில் மட்டுமே பேசப்படுகிறது. எந்த மாநிலத்திலும், பெரும்பான்மையான மக்களால் பேசப்படாத ஒரு மொழிக்கு எப்படி மாநில மொழிக்கான விருது வழங்கலாம் எனச் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
லிட்டில் ஸ்டார்
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைத் தட்டிவந்திருக்கும் பத்து வயது கௌரவ் மேனன் சரியான சுட்டி. சென்ற மாதம் ‘பென்’ என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள மாநில விருது கிடைத்ததும் கௌரவுக்குத்தான். ‘கோலு மிட்டாயி' என்ற மலையாளப் படத்தில் குட்டீஸ்களுடன் சைக்கிள் ஓட்டும் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது, ‘பென்' பட இயக்குநர் விபின், அவன் வைத்திருக்கும் மொபைல் போனுக்குக் கூப்பிட்டு ( இந்த வயசுல போன்!) “ டேய் நம்ம படத்துக்காக உனக்கு விருது கிடைச்சிருக்குடா!” என்று விருது கிடைத்திருக்கும் செய்தியைச் சொல்ல, துள்ளிக் குதித்திருக்கிறான் கௌரவ்.
“ ‘பென்' படத்தில் நடிக்கும்போது தினசரி மன அழுத்தம் தாங்க முடியாது. விபின் அங்கிள் பிழிஞ்சு எடுத்துட்டார்... அதான் அவார்டு கிடைச்சிருக்கு. எல்லாருக்கும் தேங்க்ஸ்” என்று பெரிய மனுஷ தோரணையில் வார்த்தைகள் வந்து விழுகின்றன. இந்த லிட்டில் ஸ்டார் படிப்பது ஐந்தாம் வகுப்பு.
திரைப்படமாகும் வாழ்க்கை
நகைச்சுவை நடிகராகத் திரையில் நுழைந்த கலாபவன் மணியை, குணசித்திர நடிகராக உயர்த்தியவர் இயக்குநர் வினயன். மணியின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், மணியின் வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்கித் தயாரிக்கிறார். சர்ச்சைகளைக் கடந்த வாழ்க்கை வரலாற்றுப் படமாக இந்தப் படத்தை இயக்கவிருப்பதாகக் கூறியிருக்கும் வினயன், ஒரு புதுமுகத்தை ‘மணியாக' அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறார்.
29-வது படம்
இயக்குநர் பிரியதர்ஷன், மோகன்லால் இருவரும் இணைந்து இதுவரை 28 படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் பாதிக்கு மேல் சூப்பர் ஹிட் படங்கள். கல்லூரித் தோழர்களான இவர்கள் இருவரும் தற்போது 29-வது படத்துக்காக இணைந்திருக்கிறார்கள். படத்துக்கு ‘ஒப்பம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். லாலுக்கு விமலா ராமன், சஞ்சிதா ஷெட்டி என இரண்டு நாயகிகள். வில்லன் சமுத்திரகனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT