Published : 04 Mar 2016 12:07 PM
Last Updated : 04 Mar 2016 12:07 PM

மும்பை மசாலா: சூப்பர் ஸ்டாருக்குள் ஒளிந்திருக்கும் ஓவியன்...!

சல்மான்கானுக்கு என்னவெல்லாம் தெரியும்? மற்ற நடிகர்களைவிடச் சம்பளம் அதிகம் வாங்கத் தெரியும். வருமானவரியாக 22 கோடி கட்டத் தெரியும்.... நெருக்கமானவர்களுக்கு , விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள் அளிக்கத் தெரியும் ...

தோழிகளை அவ்வப்போது மாற்றிக்கொள்ளத் தெரியும் ...

தெரிந்தோ தெரியாமலோ கார் ஏற்றி நடைபாதையில் உறங்குபவர்களை நிரந்தர உறக்கத்தில் தள்ளத் தெரியும்...

படங்களில் உடல் அழகைக் காட்டத் தெரியும்...

இவையெல்லாம் அனைவருக்கும் தெரியும். அவ்வளவாகத் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. அது சல்லுவுக்கு ஓவியங்கள் நன்றாக வரையத் தெரியும் என்பதே. ஆனால் அவர் வரைந்த ஓவியங்களைப் பெரும்பாலும் விற்பதில்லை. அவற்றை அன்பளிப்பாக நண்பர்களுக்குத் தந்துவிடுவார்.

ஓவியங்களை விற்றால் வரும் தொகையைத் தனது தொண்டு நிறுவனமான ‘Being human’னுக்கு நிதியாகத் தந்துவிடுகிறார்.

சல்மானுக்கு அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் முதல் மாடர்ன் ஆர்ட் சங்கதிகள் வரை எல்லாமே அத்துப்படி… இவரது ஓவியங்கள் மும்பை பன்வேலில் இருக்கும் சொந்த பங்களாவில் வைக்கப்பட்டுள்ளன.

ஒருமுறை, தாய்-மகன் பாசத்தை சல்மான் ஓவியமாக்க ... அது 22 லட்சத்துக்கு விலை போனது. “குறைந்த விலைக்கு ஏலம் போயிருக்கிறதே... இந்த ஓவியத்தின் தரத்துக்கு இன்னமும் அதிக விலை கிடைக்கணும்... ஓவியம் விற்பனைக்கு இல்லை ...” என்று சல்மான் சொல்லிவிட்டார். சில மாதங்கள் கழித்து, அந்த ஓவியத்தை மறு ஏலம் விட்டபோது இரண்டரைக் கோடிக்கு விலைபோனது .

சல்மான் அடிக்கடி வரைவது புத்தரைத்தான்... அடுத்து அதிகமாக வரைவது இயேசுவை.

இந்திப் படவுலகில் சல்மானின் ஓவியங்களுக்குப் பரம ரசிகர்கள் அநேகர். ஸ்ரீதேவிக்கு இரண்டு ஓவியங்களை அன்பளிப்பு செய்த சல்மான், கணவர் போனி கபூரை வெறுங்கையுடன் அனுப்பாமல். ‘இந்தாப் பிடிங்க…’ என்று சில ஓவியங்களை வழங்கினார்.

ஆமிர்கானின் ‘கஜினி’ பட வெற்றிக்காக, ஆமிரின் ‘கஜினி’ வேஷத்தை வரைந்து சல்மான் குஷிப்படுத்தினாராம். நடிகர் ராஜ்கபூரின் பேரன் ரன்பீர் கபூருக்கு, ‘வச்சுக்கோ’ என்று கொடுக்க.... “என்ன ஓவியம்...” என்று ரன்பீர் கேட்க... “பிரித்துத்தான் பாரேன்...” என்று சல்மான் சொல்ல.... ரன்பீர் நெகிழ்ந்து போனார். சல்மான் வரைந்திருந்தது, அவர் தாத்தா ராஜ்கபூரின் ஓவியம்.

காதலி ஐஸ்வர்யா ராயை வரைந்ததாகத் தகவல் இல்லை. ஆனால், ஐஸ்வர்யாவின் நினைவாக, ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ படத்தின் சல்மான்-ஐஸ்வர்யா காதல் காட்சிகளை நினைவுபடுத்தும் ஓவியங்களை சல்மான் வரைய மறக்கவில்லை.

‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படப்பிடிப்பின்போது சல்மான் வரைந்த ஓவியத்தை, ஜோடியாக நடித்த கரீனா கபூருக்கு அன்பளிப்பு செய்துவிட்டிருக்கிறார்.

எந்த விழாவில் கலந்துகொண்டாலும், வெள்ளை பேப்பர் கிடைத்தால் போதும்... சல்மான் வரைய ஆரம்பித்துவிடுவார். ஓவியத்தில் அவ்வளவு ஈடுபாடு.

“ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்களை சல்மான் சொல்லிக்கொடுத்தார்...” என்கிறார் சோனாக் ஷி. ... சோனாக் ஷிக்கு இதைக்கூட சல்மான் செய்யமாட்டாரா?

எல்லாம் சரிதான் சல்மான் பாய் .... காரை ஒழுங்கா ஓட்டியிருந்தா .... வாய்தா வழக்குன்னு அலையாம அந்த நேரத்தில் ரொம்ப ஓவியங்களை வரைந்திருக்கலாமே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x