Published : 06 Mar 2016 12:45 PM
Last Updated : 06 Mar 2016 12:45 PM

போக்கிரி ராஜா - திரை விமர்சனம்

கொட்டாவி விடுவதே பிரச்சினையாகக் கொண்ட ஒருவனுக்கு அதுவே அபார சக்தியாக மாறினால் என்ன நடக்கும்? அதுதான் ‘போக்கிரி ராஜா’.

அடிக்கடி பெரிதாகக் கொட்டாவி விடுவது நாயகன் ஜீவாவின் பிரச்சினை. இதனால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கொட்டாவி வர, இதுவே அவரது வேலை பறிபோகக் காரணமாகிறது. அவருடைய வேலை மட்டுமின்றிக் காதலும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் சமூக ஆர்வலர் ஹன்சிகா மோத்வானியின் அறிமுகம் கிடைக்கிறது. சாலையோரங்களில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்பவர்கள் மீது தண்ணீர் அடித்துத் துரத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவுதல் ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வரும் ஹன்சிகாவுடன் ஜீவாவும் சேர்ந்து கொள்கிறார்.

கூலிங் கிளாஸ் குணா (சிபிராஜ்) என்னும் ரவுடி மீது ஜீவா ஒருமுறை தண்ணீர் அடித்துவிடுகிறார். இதனால் அவமானமடையும் சிபி, கொலைவெறியோடு ஜீவாவைத் துரத்துகிறார். இதே நேரத்தில் ஜீவாவின் கொட்டாவி பிரச்சினை விபரீதமான வேறொரு பரிணாமம் எடுக்க, பழிவாங்க வரும் சிபி அதில் சிக்கிக்கொள்கிறார். ஜீவாவின் காதல், கொட்டாவி, சிபியின் கோபம் ஆகியவை என்ன ஆயின என்பதுதான் மீதிக் கதை.

தூக்கத்தின் அறிகுறியான கொட்டாவியை வைத்து உற்சாகமான ஒரு ஃபேன்டஸியை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. திரைக்கதை முழுவதிலும் நகைச்சுவையைக் கலந்து தருவதற்கும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், நகைச்சுவை நிரம்பிய ஃபேன்டஸி என்னும் அசத்தலான ஐடியாவை வைத்துக் கொண்டு சொதப்பலான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஜீவாவுக்குக் கொட்டாவியால் பிரச்சினை என்பதைச் சொல்லப் பல காட்சிகளை இயக்குநர் வீணடிக்கிறார். ஹன்ஸிகாவுக்கும் ஜீவாவுக்கும் இடையில் நெருக்கத்துக்கு முன் ஏற்படும் குழப்பத்தைச் சொல்வதற்கும் சிபியின் ரவுடி கெத்தைக் காட்டுவதற்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார். கதையின் முக்கியமான புள்ளிக்கு வருவதற்குள் பார்வையாளர்களுக்குக் கொட்டாவி வர ஆரம்பித்துவிடுகிறது. கொட்டாவிப் பிரச்சினையால் ஜீவாவுக்குப் பெரிய ஆபத்து என்பதுபோலக் காட்டிவிட்டு, பிறகு அது ஒரு அபூர்வமான சக்தி என்று கதையை மாற்றுவதெல்லாம் சரியான போங்கு.

ஜீவா, சிபி மோதலுக்குப் பெரும் முஸ்தீபுகளை உருவாக்கிவிட்டுக் கடைசியில் அதையும் காமெடி ஆக்கிவிடுகிறார் இயக்குநர். ஒவ்வொரு கட்டத்திலும் சுவாரஸ்யமோ நம்பகத்தன்மையோ இல்லாமல் ஏமாற்றமளிக்கிறது ‘போக்கிரி ராஜா’.

காமெடி ஹீரோவாக ஜீவா, சமூக சேவையில் ஈடுபடும் ஹன்சிகா, அதிரடி வில்லனாக சிபி, அவரது உதவியாளர் ராமதாஸ் என்று வலுவான கூட்டணியை வைத்துக்கொண்டு சரவெடி கொளுத்துவதற்குப் பதில் நமுத்துப்போன ஊசிப் பட்டாசைக் கொளுத்திப் போட்டு நோகடிக்கிறார், இயக்குநர். சாலையோரங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்களை யோசிக்கச் செய்யும் விதத்தில் அமைந்த காட்சிகளுக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

இரண்டு நாயகர்கள் இணையும் படத்தில் இருவருக்குமே நடிக்க வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதில் சமத்துவம் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஹன்சிகாவுக்கும் அதே நியாயத்தை வழங்கியிருக்கிறார். ஆனால், சிபியின் உதவியாளராக வரும் ராமதாஸ் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார். சிபிக்குக் கண் பிரச்சினை ஏற்படும்போது ராமதாஸ் போடும் ஆட்டம் திரையரங்கைக் குலுங்கவைக்கிறது.

டி.இமான் இசையில் ஒரு சில இடங்களில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் மிகவும் சுமார். ஒளிப்பதிவாளர் ஆஞ்சியின் பங்களிப்பு சிறப்பு.

நகைச்சுவை கலந்த ஃபேன்டஸி என்னும் கதைக்களத்தை வைத்து அதகளம் பண்ணியிருக்கக்கூடிய வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறார் இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x