Published : 19 Feb 2016 10:59 AM
Last Updated : 19 Feb 2016 10:59 AM

வில் அம்பு - திரை விமர்சனம்

இரண்டு இளைஞர்கள், தங்களை அறியாமலேயே இன்னொருவரின் வாழ்வின் போக்கையே மாற்றிவிடுவது பற்றிய கதைதான் ‘வில் அம்பு’.

கோயம்பத்தூரில் ஒரு குடிசைப் பகுதியில் வாழும் ஸ்ரீ ஒரு சின்ன ரவுடி. அவனது துணிச்சல், துடுக்குத்தனத்தால் ஈர்க்கப்படும் பள்ளி மாணவி (சம்ஸ்க்ருதி) அவனைக் காதலிக்கிறாள். சம்ஸ்க்ருதியின் அப்பா அந்தப் பகுதி அரசியல்வாதியின் வலது கை. ஸ்ரீயை அவருக்குப் பிடிக்காது. ஸ்ரீ, சம்ஸ்கிருதி காதல் அவருக்குத் தெரியவந்தால் ஆளையே இல்லாமல் செய்துவிடுவார். இது ஒரு கதை.

ஸ்ரீயின் குடியிருப்புக்குப் பக்கத்தில், நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் பகுதியொன்றில் இருக்கும் ஹரிஷ், அப்பாவுக்கு பயந்த பிள்ளை. தன் மகன் ஐடி துறையில் வேலைபார்க்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார் அப்பா. ஆனால் ஹரிஷுக்கோ ஒளிப்படக் கலையின் மேல் காதல். ஒளிப்பதிவாளர் ஆவது கனவு. ஹரிஷின் காதலி சிருஷ்டி டாங்கே. குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் (சாந்தினி), ஹரிஷை ஒருதலையாகக் காதலிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஹரிஷ் மீது திருட்டுப் பழி விழுகிறது. அந்த அதிர்ச்சியில் ஹரிஷ் அப்பாவுக்கு மாரடைப்பு. இது இரண்டாவது கதை.

ஸ்ரீ, சம்ஸ்க்ருதி காதல் என்னவானது? ஹரிஷ் தன் மீது படிந்த கறையைத் துடைத்தாரா? சாந்தினியின் ஒருதலைக் காதல் ஹரிஷுக்குத் தெரிந்ததா இல்லையா? இதுதான் வில் அம்பு.

இரண்டு கதாநாயகர்களை வைத்துப் பின்னப்பட்ட கதை. இருவரும் கடைசிக் காட்சியில்தான் பரஸ்பரம் அறிமுகமாகிறார்கள். அதற்கு முன் ஒருவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களுக்கு மற்றொருவர் மறைமுகக் காரணமாக இருக்கிறார். இது இருவருக்குமே தெரிவதில்லை. இக்கதைப் பின்னலை, தற்செயல் நிகழ்வுகளின் சங்கிலித் தொடராக நீளும் காட்சிகள் மூலம் கட்டமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்.

தற்செயல் நிகழ்வு என்பது ‘தங்க முட்டை’ போன்றது. அதைத் திரைக்கதையின் முக்கியமான தருணத்தில் ஒருமுறையோ அல்லது சில முறைகளோ பயன்படுத்தலாம். ஆனால் இந்தப் படத்தின் நாயகர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் சம்பவங்களில் பலவும் தற்செயல் நிகழ்வுகளாக இருப்பது உறுத்துகிறது. இவர்கள் இருவருக்கும் ஏற்படும் ஒவ்வொரு திருப்பமும் இன்னொருவரால் நிகழ்வது திரும்பத் திரும்ப வரும்போது நம்பகத்தன்மை அடிவாங்குகிறது.

ஆனால் நிகழ்வுகளின் பின்னலை இறுக்கமாகப் போட்டிருக்கும் விதத்தில் அறிமுக இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் கவனிக்கவைக்கிறார். பார்வையாளர்களுக்கு யோசிக்க அவகாசம் கொடுக்காமல் விறுவிறுப்பாகக் கதையை நகர்த்திச் செல்லும் சுவாரஸ்யத்தை இந்தச் சம்பவங்கள் கொண்டிருப்பதால் இந்த உத்தியே படத்தை சுவாரஸ்யமாக்கிவிடுகிறது. உள்ளூர் அரசியல் உள்குத்து விளையாட்டு ஒன்றைக் கிளைக்கதையாக இணைத்த விதத்திலும் ‘தற்செயல்’ எட்டிப் பார்த்தாலும் அதைக் கச்சிதமாகச் சித்தரித்த விதம் அந்தக் குறையைப் போக்கிவிடுகிறது.

வசனங்கள் இயல்பாக உள்ளன. இரண்டு குடும்பங்களின் சூழல்களைச் சித்தரித்துள்ள விதமும் நன்றாக உள்ளது. காவல் நிலையச் சம்பவங்கள் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கஞ்சாவும் கையுமாகப் பிடிபட்டவனை அத்தனை எளிதாக விட்டுவிடுவார்களா?

திரையரங்கில் பிளாக் டிக்கெட் விற்பது, சிறு திருட்டில் ஈடுபடுவது, காதலிக்காகத் திருந்தி புதிய வாழ்க்கையை வாழத் தொடங்குவது என உதிரி இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் ஸ்ரீ. தன் கனவை நனவாக்கப் போராடும் நேரத்தில் தன் மீது படியும் கறையைக் களையப் போராடும் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார் ஹரீஷ். இருவருமே தத்தமது பாத்திரத்தை உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சம்ஸ்கிருதி தன் அழகான உருண்டையான கண்களாலேயே நடித்துவிடுகிறார். சில காட்சிகளே வந்தாலும் ஸ்ருஷ்டி டாங்கேயின் உற்சாகம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. குடிசைப் பகுதியில் இருந்து கொண்டு, தள்ளுவண்டியில் இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்திருக்கும் சாந்தினி தன் காதலைக் கண்களாலேயே வெளிப்படுத்தும் விதம் அழகு. எதிர் வீட்டுப் பெண்ணுடன் சண்டை போடும் இடங்களில் பட்டையைக் கிளப்புகிறார். இந்தச் சண்டைகளில் வசனமும் பொருத்தமாக இருக்கிறது.

நவீன் இசையில் பாடல்கள் கேட்கும்போது ஈர்த்தாலும் மெட்டுக்கள் மனதில் தங்குமளவுக்கு இல்லை. பின்னணி இசையை மெல்லிசையாக ஒலிக்கவிடுகிறார். சோகமான காட்சிகளில் பின்னணி இசை மனதைத் தொடுகிறது. மார்டின் ஜோவின் ஒளிப்பதிவு நிகழ்வுகள் மீதும் அவை நிகழும் இடங்களை அழுத்தமாக முன்னிறுத்துவதிலும் கவனம் செலுத்திப் பார்வையாளர்களின் கவனத்தைப் படத்துடன் ஒன்றவைக்கிறது. இரண்டு தனித்தனிக் கதைகளைத் தடையின்றிப் பாயும் நீரோடைபோல இணைத்துச் சென்றிருக்கிறார் படத் தொகுப்பாளர் ரூபன்.

எளிமையான கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு வலுவான திரைக்கதையையும் காட்சியமைப்புகளையும் அமைத்து விறுவிறுப்பான பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x