ஓடிடி உலகம்: எட்டு காதல் கதைகள்!


ஓடிடி உலகம்: எட்டு காதல் கதைகள்!

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் வெற்றிகரமான பத்திகளில் ஒன்று ‘மாடர்ன் லவ்’. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுவரும் இந்த பத்தியிலிருந்து சிறப்பான கதைகளைத் தொகுத்து அதே தலைப்பில் கடந்த 2019-ல் வெளியானது ‘மாடர்ன் லவ்’ சீசன் 1. தற்போது, 8 அத்தியாயங்களைக் கொண்ட இரண்டாவது சீஸனை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. பட்டாம்பூச்சி பருவக் காதல் தொடங்கி, முதிர் தம்பதியரின் பக்குவ காதல் வரை, நேசத்தின் நீள அகலங்களை அலசும் கதைகளில் காதலின் பல பரிமாணங்களை ரசிக்கலாம்.

உயிர் கடிகாரம் (Biological clock) தொடர்பான உடநலச் சிக்கலால், காலையில் உறங்கத் தொடங்கி மாலையில் கண் விழிக்கும் பெண் ஸோயி. சூரியனை பார்த்திராது நட்சத்திரங்களோடு மட்டுமே உலாத்தும் அவள் மீது காதலில் விழுகிறான் ஜோர்டன். இயல்பாய் இரவில் தூங்கி பகலில் பணியாற்றும் இளைஞன். இந்த இரவு - பகல் வேறுபாடே அவர்களின் காதலுக்கும் எதிரியாக, அதனை எப்படிக் கடந்து புரிதலில் இணைகிறார்கள் என்பதை விவரிக்கிறது ‘தி நைட் கேர்ள் ஃபைன்ட்ஸ் எ டே பாய்’.

இறந்துபோன முதல் கணவனின் நினைவாக உடனிருக்கும் வாகனத்தை விற்க தலைப்படும் பெண் அவள். அவனுடைய நினைவுகளில் அலைக்கழிவதன் ஊடே நிகழ்காலக் கணவனை எதிர்கொள்ளும் கதையாக முதல் அத்தியாயம், விவாகரத்தாகி பிரிந்த இருவர், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் காலம் இணைக்கும் துயரமும் மீட்சியும் கலந்த கடைசி அத்தியாயம் போன்றவை முதிர்ச்சியான காதலைப் பதிவு செய்கின்றன.

ஆந்தாலஜியின் வித்தியாசமான கதைகளில் ஒன்று ‘எ லைஃப் பிளான் ஃபார் டூ, ஃபாலோட் பை ஒன்’. 12 வயது சிறுமி லில், சக மாணவன் வின்ஸ் மீது புதிரான நேசத்தை உணர்கிறாள். பள்ளி முடித்து கல்லூரி வயதிலும் அவர்களின் நட்பு தொடர்கிறது. ஒரு நெருக்கமான தருணத்தில் அவள் எதிர்பார்த்த ஈர்ப்பின் அதிசயமும் நிகழ்கிறது. ஆனால் நட்பின் வளையத்தை உடைத்ததில் அவனும் உடைந்து போகிறான். அதன் பின்னர் அவனுடனான பிரிவுத் துயரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் போக்கும் லில், அப்படியே அத்துறையில் வித்தகராகவும் மாறுகிறாள். இப்போது வின்ஸ் உடனான சந்திப்பு மீண்டும் மலர, அவர்களின் பால்யம் தொட்ட நட்பின் அடுத்த கட்டம் என்னவாகிறது என்கிற சுவாரசியத்துடன் கதை முடிகிறது.

ரயில் சிநேகத்தில் கண்டதும் காதலில் விழும் இளஞ்ஜோடி, தங்கள் காதலின் ஆழத்தை பரிசோதிக்க அலைபேசி எண் பகிர்வை நிராகரித்து மறு சந்திப்புக்கான இடத்தை மட்டும் தீர்மானித்து பிரிகிறார்கள். ஆனால் ஊரடங்கு அறிவிப்பு அவர்களின் ஏற்பாட்டை புரட்டிப் போடுகிறது. மெய்யான நேசத்தின் தவிப்பு அதன் பின்னர் என்னவாகும் என்பதை நம்மையே ஊகிக்க விடுகிறது ‘ஸ்ட்ரேஞ்சர் ஆன் எ ட்ரெய்ன்’ கதை. ‘க்ளிஷே’ காட்சிகள் இருந்தபோதும் இளமைத் துள்ளலால் ஈர்க்கிறது இந்த அத்தியாயம்.

திருமண வேலியை எகிறிக் குதித்துக் கைகோக்கும் தத்தம் வாழ்க்கைத் துணைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் இருவர், ‘அவர்கள் போலல்ல நாம்..’ என்று பரஸ்பரம் அனுசரணையாகிறார்கள். ஆனால் அது தொடர்ந்ததா என்பதை விவரிக்கும் ‘இன் தி வெய்ட்டிங் ரூம்’ கதையும் சற்று சுவாரசியமாக நேசத்தை பேசுகிறது.

கதைகளின் பின்புலகமாக அமெரிக்காவின் இறுக்கமற்ற கலாச்சாரம் இருந்தாலும் காதலின் உலகப் பொது உணர்வை கடத்துவதில் ‘மாடர்ன் லவ் - 2’ அத்தியாயங்கள் வெற்றிபெறுகின்றன. இணையருடன் இணைந்து ரசிப்பதற்கான ஆந்தாலஜியாகவும் அமேசானின் மற்றுமொரு வெற்றிகரத் தொடராகவும் ‘மாடர்ன் லவ்’ சேர்ந்திருக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x