திரைப்பார்வை: நவரசா - தலை வாழைப் படையல்!


திரைப்பார்வை: நவரசா - தலை வாழைப் படையல்!

தலைப்புக்கு நியாயம் சேர்க்கும்விதமாக, ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்பது குறும்படங்களோடு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது ‘நவரசா’ ஆந்தாலஜி. இதில் முதல் படைப்பாக வருவது கருணை உணர்வைப் பேசும் ‘எதிரி’. ஒரு கொலையை மையமாகக் கொண்ட குறும்படம். சந்தர்ப்பவசத்தால் கொலைசெய்துவிடும் ஒருவரும் கொலையானவரின் மனைவியும் மேற்கொள்ளும் வித்தியாசமான உரையாடலுடன் நிறைவடைகிறது.

குற்ற உணர்வில் தத்தளிக்கும் இருவர், எதிரெதிர் கரைகளில் நின்று, கருணை, மன்னிப்பு குறித்தெல்லாம் பேசுகிறார்கள். அத்துடன் அவரவர் அன்றாடங்களில் தவிர்க்க முடியாமல்போய்விட்ட மீறல்களை, அவற்றை கவனமாக அணுகியிருக்க வேண்டியதன் அவசியத்தை குறும்படம் அலசுகிறது. குறும்படத்தின் நீளத்துக்கு பொருந்தாத கதையை, தங்களுடைய நடிப்பால் ரேவதி, விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சிமிழுக்குள் அடக்க முயற்சித்துள்ளனர். மணிரத்னத்தின் கதையைக் கையாண்ட பிஜாய் நம்பியாரின் இயக்கத்தில் சிரத்தை தெறிக்கிறது.

‘சம்மர் ஆஃப் 92’ என்கிற இரண்டாவது குறும்படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். மலையாள நடிகர் ஒருவரின் வாழ்வில் நடந்த உண்மைக் கதையாம். ஆனால் இதர உணர்வுகளை விட ஒரு நகைச்சுவை படைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதை இந்த முயற்சி உணர்த்துகிறது. சினிமாவில் வெற்றிபெற்ற நகைச்சுவை நடிகர், தான் பயின்ற கிராமத்துப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மேடையேறி மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார். வறட்சியான நகைச்சுவை என்பதோடு, ‘வாழ்வில் வெற்றி பெற படிப்பு ஒரு பொருட்டல்ல’ என்கிற கதைக் கருவும் ஒட்டாது எட்ட நிற்கிறது. யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு, ஒய்.ஜி.மகேந்திரா என பலர் இருந்தும், உருவக்கேலி, அபத்த நகைச்சுவை ஆகியவற்றால் குறும்படம் துவள்கிறது.

மூன்றாவது குறும்படமான ‘புரஜெக்ட் அக்னி’ கிறிஸ்டோபர் நோலனில் தொடங்கி ‘டார்க்’ வலைத்தொடர் வரை, பலவற்றையும் உணர்த்திச் செல்கிறது. காலவெளியை ஊடறுக்கும் கண்டுபிடிப்பு ஒன்றினை, இஸ்ரோ விஞ்ஞானியாக இருக்கும் நண்பனுடன் பகிர்ந்துகொள்கிறார் இன்னொரு விஞ்ஞானி. எதிர்பார்ப்புக்குரியத் திருப்பத்துடன் குறும்படம் முடிகிறது. இதில் விவாதிக்கப்படும் அறிவியல் விளக்கங்களை விட, விஞ்ஞானிகளுடைய சொந்த வாழ்வின் ஈர இழைகள் உயிர்ப்பூட்டுகின்றன. அதற்கு உரையாடல் உரமூட்டியிருக்கிறது. அரவிந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா நடித்துள்ள இந்தக் குறும்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார்.

தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத்தக்க படைப்பாளியான தி.ஜானகிராமனின் ‘பாயசம்' என்கிற புகழ்பெற்ற சிறுகதையை அதே தலைப்பில் காட்சிகளில் விரித்திருக்கிறார் இயக்குநர் வசந்த். அருவருப்பு என்கிற உணர்வை மையப்படுத்தியுள்ள இந்தப் படத்தில், முதுமை, ஏழ்மை, இயலாமை, துயரம் என சொந்த வாழ்வின் அழுத்தங்களில் சிக்கி பேதலிக்கும் முதியவர், எல்லாம் வாய்த்த ரத்த உறவினர் வீட்டின் மங்கள வைபவத்தில் தனது சிறுமையை வெளிப்படுத்தி ஆறுதல் தேடுவதே கதை. டெல்லி கணேஷின் நடிப்பு மெச்சுவதற்குரியது. ரோகிணி, அதிதி பாலன் ஆகியோரின் நடிப்பையும் குறைசொல்வதற்கில்லை. இதே பாணியில் தமிழின் தலைசிறந்த எழுத்தாளுமைகளின் படைப்புகளை ஆந்தாலஜியாகவோ, வலைத்தொடர் வடிவத்திலோ மீளுருவாக்கம் செய்யலாமே என்கிற ஏக்கத்தையும் ‘பாயசம்’ உருவாக்குகிறது.

ஐந்தாவதாக ‘அமைதி’ என்கிற உணர்வை அதே தலைப்பிலான குறும்படம் சித்தரிக்கிறது. ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் கோட்டை விட்டதை இதில் நேர்செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இருப்பினும் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு இதுபோன்ற கதைக் களன்களை அணுகுவது நலம். சிறுவன் ஒருவனுக்காக இலங்கை ராணுவம் முற்றுகை செய்திருக்கும் பகுதிக்குள் ஊடுருவித் திரும்பும் ஈழத் தமிழ்ப் போராளி இளைஞர்கள் சிலரது உணர்வுகளின் வாயிலாக ‘அமைதி’ பற்றிப் பேசுகிறது. அமைதிக்காக ஏங்கும் மக்களின் வலி, போரின் மூலமே அமைதியை எதிர்நோக்குவதன் விசித்திரம் ஆகியவற்றையும் குறும்படம் அலசுகிறது. பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பிலான இந்தக் கதையில் அழுத்தம் குறைவு.

‘ரௌத்திரம்’ என்கிற குறும்படத்தின் மூலம் ‘சினம்’ என்னும் உணர்வை வடித்திருக்கிறார் அரவிந்த் சுவாமி. இயக்குநராக இவருக்கு இது முதல் முயற்சி. எனினும் அதற்கான சாயலின்றி ‘சின’த்தை திறம்பட வெளிப்பட முயன்றிருக்கிறார். ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய சுக துக்கங்களைப் புரிந்துகொள்வதில் கொண்டுள்ள போதாமைகள் இந்த படத்தில் உண்டு. ஏழ்மையால் தள்ளாடும் குடும்பத்தை தாங்கும் தவிப்பின் விளிம்பில், தாய் எட்டும் இயலாமையின் முடிவை அவரது வளர்ந்த பிள்ளைகள் சினத்துடன் எதிர்கொள்வதே கதை. காட்சிக் கோர்வையில் ‘நான்-லீனியர்’ வெளிப்பாட்டு உத்தி, குறும்படத்தை ரசிக்க வைக்கிறது. ரித்விகா, ராம், அபிநயா , கீதா கைலாசம் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

‘பயம்’ என்கிற உணர்வை ஆராய்கிறது ‘இன்மை’ . பழிக்குப்பழி என்கிற அரதப்பழசான ஒற்றை வரியில் அதிகம் பேசப்படாத இஸ்லாமிய நாட்டார் நம்பிக்கைகள், வழக்குகள் ஆகியவற்றின் பின்னணியில் கதை சொல்கிறார் ரதீந்திரன் ஆர்.பிரசாத். சித்தார்த், பார்வதி திருவோத்து, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பார்வதி, அபிராமி ஆகியோரின் நடிப்பு ஈர்த்தாலும் மெல்ல நகரும் கதை சோதிக்கிறது.

வீரம் என்கிற உணர்வை ஆராய்கிறது ‘துணிந்த பின்’ குறும்படம். அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவரிடம், கைது செய்யப்படும் முக்கிய நக்ஸலைட் ஒருவரைத் தலைமையகத்தில் சேர்க்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. காவல் படை வீரருக்கும் நக்ஸலைட்டுக்கும் இடையிலான உரையாடலில் விசித்திரமான இடத்தில் குறும்படம் நிறைகிறது. ‘குருதிப்புனல்’ அளவுக்கு எதிர்பார்ப்புக்குரிய கதையில் அப்படி எதுவுமே நிகழாதது ஏமாற்றம். அதர்வா, கிஷோர், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இக்குறும்படத்தை சர்ஜூன் இயக்கியிருக்கிறார்.

நிறைவாக கௌதம் மேனன் இயக்கியிருக்கும் ‘கிடார் கம்பி மேலே நின்று’ குறும்படம் ‘சிருங்கார’ உணர்வை விதந்தோதுகிறது. பாடல், இசை, இளமை, காதலைப் பிழியும் வசனங்கள் என கௌதம் வாசுதேவ் மேனன் படங்களுக்கே உரிய எல்லா அம்சங்களும் இதிலும் இருக்கின்றன. அதிகம் அலுப்பின்றி ரசிக்கவும் வைத்துவிடுகிறார். நாயகன் சூர்யாவைவிட பிரயாகா ரோஸ் மார்டினின் தோற்றமும் துள்ளலும் துடிப்பும் நிறைந்த நடிப்பும் குறும்படத் தலைப்புக்கு ஏகப் பொருத்தமாகிறது.

இயக்குநர்கள், நடிகர்கள் மட்டுமல்ல இதர கலைஞர்கள் தேர்விலும் பிரமாண்ட உணர்வை கலந்திருக்கிறது நவரசா ஆந்தாலஜி. அப்படியும் சிலவற்றில் சறுக்கவும் செய்திருக்கிறது. அரவிந்த் சுவாமியின் ‘ரௌத்திரம்’ குறும்படத்தில் கடலோர குடியிருப்பு, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்யும் தொடக்கக் காட்சியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வண்ணங்களின் குழைவை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார். ஆனால் அதே குறும்படத்தின் பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஏமாற்றிவிட்டார். இப்படி தேடித்தேடி ரசிப்பதற்கும் சலிப்பதற்கும் கூட நவரசாவில் இடமுண்டு. கல்யாண விருந்தின் இலையில் சில குறைகள் இருந்துவிடுவது இயல்பாக நிகழ்ந்துவிடுவது. எனினும் விருந்து விருந்துதான்! தவிர தமிழில் முக்கியமான ஆந்தாலஜி முயற்சிகளில் ஒன்றாக வெளிப்பட்டிருப்பதை மறுக்கமுடியாது. ஒரே அமர்வில் பார்ப்பதைவிட, தனித்தனியாக ரசிப்பதும் இந்த ஆந்தாலஜியின் குறும்படங்களை முழுமையாக உள்வாங்க உதவும்.

பெருந்தொற்றால் வாழ்வாதாரம் இழந்த திரைக்கலைஞர்களுக்கு உதவும் நோக்கிலான இந்த படைப்பை, இயக்குநர் மணிரத்னம், தனது நண்பர் ஜெயேந்திராவுடன் இணைந்து வழங்கியுள்ளார். திரைகொள்ளாத நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டு முயற்சியிலான நவரசாவை, ஓடிடி தளங்களில் பிராந்தியப் படைப்புகளின் பற்றாக்குறையை நேர் செய்வதற்கான முன்னெடுப்பாகவும் இருப்பதால் இதை வரவேற்கலாம்.

FOLLOW US

WRITE A COMMENT

x