இருக்கை நுனியில் இருத்தும் த்ரில்லர் கதையில், சமூகத்துக்கு அவசியமான ‘செய்தி’ சொல்வது கிட்டத்தட்ட கத்திமேல் நடக்கும் ஆபத்தான சர்க்கஸ்! சோனி லிவ் தளத்தில் வெளியாகி இருக்கும் ‘திட்டம் இரண்டு ’ அப்படியொரு முயற்சி.
திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்). சொகுசுப் பேருந்து பயணம் ஒன்றில் சக பயணியான அர்ஜுன் (சுபாஷ் செல்வம்) மீது கண்டதும் காதலாகிறார். சென்னை சென்றதும் இந்தக் காதல் இன்னும் தழைத்து வளர்ந்து, திருமணம் நோக்கி நகர்கிறது. இன்னொரு பக்கம் பணியில் பொறுப்பேற்றவுடன் தனது பால்ய சிநேகிதி சூர்யா (அனன்யா) காணாமல் போன வழக்கைத் தீவிரமாகப் புலனாய்வு செய்கிறார். அந்தத் தோழி வாகன விபத்தொன்றில் எரிந்து மரணித்துவிட்டதைத் தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். அதன்பிறகும் அதை நம்புவதற்கு பாசக்கார மனதும் போலீஸ்காரப் புத்தியுமாகக் குழம்பி மருகுகிறார்.
இத்துடன் படத்தின் தொடக்கத்தில் கொலை கருவியுடன் மழையிரவில் தோன்றும் நபர் குறித்த மர்மங்கள், திரைக்கதையின் தனி இழையில் விறுவிறுவென நகர்கின்றன. தோழி சூர்யாவின் வயதையொத்த இன்னொரு பெண்ணின் கொலையும் அதையொட்டிய புதிர்களும் ஆதிராவை மேலும் அலைக்கழிக்கின்றன. காதலின் முகிழ்வு, நட்பின் இழப்பு என இரண்டு விதமான உளத் தடுமாற்றங்களில் ஒரே நேரத்தில் சிக்கும் ஆதிரா, தன்னுடைய விசாரணையில் சளைக்காது முன்னேறிச் செல்கிறார். திரைப்படத்தின் கிளைமாக்ஸ் அவரது தரையடியை நழுவச் செய்யும் உணர்வுபூர்வமான திடுக்கிடல்களால் தாக்குகிறது. பார்வையாளர்களான நமக்கும் கனமான ‘மெசேஜ்’ ஒன்றினை புகட்டி அனுப்புகிறது.
க்ளிஷேவாக வாய்ப்புள்ள த்ரில்லர் கதையில் சற்றும் ஊகிக்க முடியாத கிளைமாக்ஸை திடமான நம்பிக்கையுடன் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். த்ரில்லர் ரசனைக்கு உவப்பான இரண்டு மணி நேரத்துக்குள் ஓடி முடியும் படத்தில், பொழுதுபோக்கிற்கும் சிந்தனைக்கும் வழி செய்கிறது ‘திட்டம் இரண்டு’. கௌதம் மேனன் படங்களின் பாணியில் வாய்ஸ் ஓவருடன் தொடங்கும் கதையில், காதல் காட்சிகளிலும் அந்த பாணியே தெறிக்கிறது.
தொடக்கத்தில் அடுத்தடுத்து எதிர்ப் பார்ப்புகளை விதைக்கும் திரைக்கதை, நிறைவாக அந்த எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட திருப்பத்துடன் முடிகிறது. இரண்டுக்கும் மத்தியிலான இடத்தில் வேறுவழியில்லாமல் படம் சற்று துவளவும் செய்கிறது.
தலைகொள்ளாத சிகையும் தாடியுமாக அர்ஜுனாக வசீகரிக்கும் சுபாஷ், அடுக்கடுக்கான ரகசியங்களை புதைத்திருக்கும் சூர்யாவாக வரும் அனன்யா ஆகியோரின் திறமைக்கு நல் வாய்ப்பு தந்திருக்கிறது படம். பிடிகொடுக்காத வழக்கில் சிக்கித் திணறுவது, புதிர்கள் நிறைந்த காதலிலும் நட்பிலும் உருகுவது என நடிப்புக்கான சவால்களை எதிர்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். புலனாய்வின் பெயரில் போலீஸ் அதிகாரிக்கான டாம்பீகங்களை ஆதிராவிடம் திணிக்காதது ஆறுதல்.
இரவின் சாயலில் நீள நிழல்களின் பின்னணியிலான கோகுல் பினோயின் ஒளிப்பதிவு, இதயத் துடிப்பை எகிறச் செய்யும் சதீஷ் ரகுநாதனின் இசை ஆகிய த்ரில்லர் களத்துக்கு நேர்மை செய்கின்றன. இம்மாதிரியான படங்களின் வேகத்துக்கு பாடல்கள் இடையூறாகும், அதற்கு மாறாக ‘உன் கன்னங்குழியில்..’ பாடல் ரசிக்க வைக்கிறது.
திரைப்படம் சொல்ல வந்த செய்தி, கருத்தளவில் உயர்வானதாக இருந்தபோதும், காட்சி மொழியில் அதற்கானத் தாக்கத்தைத் தருவதில் தடுமாறித் தவிக்கிறது. கதைக்கு திருப்பம் தரும் பிரதான கதாபாத்திரம் ஒன்றின் சித்தரிப்பில், பரிவு ஏற்படுவதற்கு பதிலாக காதலின் பெயரிலான மோசடிப் பழியை சுமத்துகிறது திரைக்கதை. அந்த வகையில் திரைப்படத்தின் நோக்கத்துக்கு எதிராகவும் கதையின் போக்கு திரும்பி விடுகிறது. ஒரு த்ரில்லராக குறை சொல்ல வாய்ப்பில்லாத திரைக்கதையை வடித்தவர்கள், இந்தளவில் அதற்கான ‘பிளான் பி’ குறித்தும் யோசித்திருக்கலாம்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
WRITE A COMMENT