Published : 05 Feb 2016 12:06 PM
Last Updated : 05 Feb 2016 12:06 PM
நடிகர்களுக்கு மத்தியில் நிலவும் பாதுகாப்பின்மையே பாலிவுட்டின் இருண்ட முகம் என்று சொல்லியிருக்கிறார் வித்யா பாலன். பாலிவுட்டின் மூன்று மோசமான விஷயங்கள் எவை என்று கேட்டதற்கு, “படப்பிடிப்பு முடிந்த பிறகான ஸ்டூடியோக்கள், நள்ளிரவுக்குப் பிறகு மட்டுமே தொடங்கும் பார்ட்டிகள், நடிகர்கள் அடிக்கடி உணரும் பாதுகாப்பின்மை” என்று வரிசைப்படுத்தியிருக்கிறார் வித்யா.
“நடிகர்கள் பாதுகாப்பின்மையை உணருவது இயல்பான விஷயம்தான். எல்லோரும் ஏதோவொரு கட்டத்தில் பாதுகாப்பின்மையை உணர்ந்திருப்பார்கள். இந்தத் துறையில் எல்லாமே எழுதப்படுகிறது, எல்லா உணர்வுகளும் பெரிதாக்கப்படுகிறது” என்கிறார் வித்யா.
வித்யா பாலன், தற்போது ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் ‘டிஇ3என்’ படத்தில் நடித்துவருகிறார். அமிதாப் பச்சன், நவாஸுத்தீன் சித்திக்கீ உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் மே 20-ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘ஆஸ்கர்’ தொகுப்பாளினி
அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் ‘குவான்டிகோ’வில் நடிப்பது பிரியங்கா சோப்ராவை சர்வதேசப் பிரபலமாக மாற்றியிருக்கிறது. ‘குவாண்டிகோ’வின் புகழால் இந்த ஆண்டு ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா தொகுப்பாளர்களின் பட்டியல்களில் பிரியங்காவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
கேர்ரி வாஷிங்டன், ரீஸ் விதர்ஸ்பூன், ஸ்டீவ் கரேல் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து பிரியங்கா ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கப்போகிறார். இதைப் பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் பிரியங்கா. இதனால் பிரியங்காவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆஸ்கர் விழா பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஸ்வராவின் சவால்!
ஸ்வரா பாஸ்கர் நடிப்பில் ‘நில் பத்தி சன்னாட்டா’திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பதினைந்து வயது மகளுக்கு அம்மாவாக நடிப்பது சவாலான அனுபவமாக இருந்ததாகச் சொல்கிறார் ஸ்வரா.
“பதினைந்து வயது மகளின் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது தற்கொலைக்குச் சமமானது என்று என்னைப் பலரும் எச்சரித்தனர். ஆனால், இந்தப் படத்தின் கதை என்னால் மறுக்க முடியாதளவுக்கு அழகாக இருந்தது. இந்தப் படத்தில் நடித்ததைப் பற்றி பெருமைப்படுகிறேன்” என்கிறார் ஸ்வரா.
சீனாவின் ‘சில்க் ரோட்’ திரைப்பட விழாவில், ஸ்வரா பாஸ்கருக்கு இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. ‘தங்கல்’ பட இயக்குநர் நித்தேஷ் திவாரியின் மனைவி அஸ்வினி திவாரி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ‘நில் பத்தி சன்னாட்டா’ ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
தொகுப்பு: கனி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT