Last Updated : 12 Feb, 2016 11:34 AM

 

Published : 12 Feb 2016 11:34 AM
Last Updated : 12 Feb 2016 11:34 AM

மும்பை மசாலா: இசை இல்லையென்றால் இறந்துவிடுவேன்! - சஞ்சய் லீலா பன்சாலி நேர்காணல்

சர்வதேச சினிமா பார்வையாளர்கள் இந்தியாவில் அதிகரித்துவருகிறார்கள். இந்நிலையில் இந்தியத் திரையிசை அருகிவரும் ஒன்றாக இருக்கிறது. சம்பிரதாயமான பாடல்களை நமது திரை இயக்குநர்கள் நீக்கத்தொடங்கியுள்ள நிலையில், புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியோ, பாடல்களை ஆசையுடன் எடுப்பவர். இந்திய சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த அடையாளம் பாட்டும் நடனமும் என்று நம்பும் திரை இயக்குநர்களில் ஒருவர். அவரது சமீபத்திய திரைப்படமான ‘பாஜிராவ் மஸ்தானி’, இந்திய அளவில் பெரிய வெற்றியை அடைந்ததோடு, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய திரை விருதுப் போட்டியில் ஐந்து விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படமாகவும் விளங்குகிறது. சிறந்த அசலான இசை பிரிவிலும் (ஒரிஜினல் மியூசிக்) பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேறு யாருமல்ல சஞ்சய் லீலா பன்சாலிதான்.

இசைக்கும் இந்திய சினிமாவுக்கும் உள்ள ஆழமான தொடர்பு குறித்து பன்சாலி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது…

உங்களைப் பொறுத்தவரை திரையிசையின் முக்கியத்துவம் என்ன?

இசைதான் எல்லாம். ஒரு திரைக்கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கும்போதே, ஒரு குறிப்பிட்ட பாடலிலிருந்துதான் அது உருவெடுக்கிறது. எனது பால்ய காலத்தில் விவித் பாரதி வானொலி சேவை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். காலையில் எழுந்து நான் முதலில் செய்யும் காரியம் எனது மியூசிக் ப்ளேயரை சுவிட்ச் ஆன் செய்வது. ஒரு நாளின் கடைசியில் செய்யும் காரியம், உறங்கும்போது மியூசிக் பிளையரை நிறுத்துவது. குளிக்கும்போது எனக்கு இசை தேவை.

காரில் தேவை. படப்பிடிப்பு அரங்கிலும் ஒரு ஷாட்டை எடுத்து முடித்த பின்னர், எனது ஐ பாட் உடனடியாக ஆன் செய்யப்படும். சுருதியும் லயமும் என்னை கவனம் சிதற விடாமல் வைத்திருக்கின்றன. எனக்குப் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் இசையுடன் சேர்ந்துதான் என் ஞாபகத்தில் இருக்கின்றனர். எந்நாளும் என்னைக் கவர்ந்த நடிகை ஹெலன்தான். ஒரு குழந்தையாக அவர் படங்களைப் பார்த்தபோது, அவரது நடனத்தைப் பார்க்கும் அனுபவத்துக்கு ஈடான சந்தோஷத்தை நான் அனுபவித்ததேயில்லை.

அவர் வினோதமான உடைகளுடன் காபரே ஆடும்போது கூட, அவரை நான் கடவுளுடன் சேர்த்துத்தான் பார்த்தேன். ஹெலன், சந்தியா, ஹேமாஜி (ஹேமமாலினி) எல்லாருமே எனது வாழ்க்கையில் நான் பார்த்த கடவுளர்கள்.

ஒரு படத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கும்போதே பாடல்தான் முதலில் வரும் என்று சொன்னீர்கள்… அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

பாஜிராவ் மஸ்தானியைப் பொருத்தவரை, கே. ஆசிப் அவர்களின் சினிமாக்களில் வந்த பாடல்கள் தான் உந்துதல். பூபாலி ராகத்தில் கிஷோரி அமோங்கர் பாடிய எத்தனையோ பாடல்களின் தூண்டுதலில்தான் அல்பெலா சாஜனின்-ன் புதிய பதிப்பை உருவாக்கினேன். லதா மங்கேஷ்கரின் பாடல்களும் என்னிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மராத்திய நாட்டுப்புறப் பாடல்களும் செவ்வியல் இசையும் பாஜிராவ் மஸ்தானிக்குத் தூண்டுதலாக அமைந்தன.

சாவரியா படத்தின் திரைக்கதைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உந்துதலாக இருந்தார். லகான் படத்தின் இசை தேவ்தாஸ் திரைக்கதைக்கு உத்வேகமாக அமைந்தது. தேவ்தாஸ் படத்தின் கிளைமாக்சை எடுக்கும்போது லகான் இசை எனது தலையில் ஓடிக்கொண்டிருந்தது.

உங்கள் ‘ப்ளாக்’ படத்தில் பாடல்களே கிடையாது… பாடலே இல்லாத இன்னொரு படத்தை உங்களால் எடுக்கமுடியுமா?

நான் ஒரு திரில்லர் படம் எடுத்தால் பாடல்களே தேவைப்படாது. ஆனால் ‘ப்ளாக்’ படம் எடுக்கும்போது அந்த விஷயம் என்னைப் பாதித்தது. ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் அனைவரின் மூடையும் செயல்திறனையும் சரியான நிலையில் வைத்திருக்க செட்டில் இசையை ஓடவிட்டே படமெடுத்தேன். இசையில்லாமல் எனது வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே இயலாது என்பதே உண்மை.

என்னிடமிருந்து இசையை எடுத்துவிட்டால், நான் இறந்துவிடுவேன். நான் அடிப்படையில் ஒரு அரசவைக் கூத்தாடி. என்னைச் சுற்றி ஆர்மோனியங்களும் டோலக்குகளும் வேண்டும். எந்த நல்ல படமும் ஒரு பாடலைப் போலத்தான் இருக்கிறது. ஒரு லயத்தோடு இருந்தால்தான் அது சினிமா. அப்படியில்லாவிடில் எங்கோ தவறு இருக்கிறது.

இஸ்மாயில் தர்பார், மோன்டி சர்மா போன்ற மகத்தான இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். நீங்களே இசையமைக்க வேண்டும் என்று எப்போது உணர்ந்தீர்கள்?

இரண்டு பேருமே பிரமாதமான இசையை எனக்குத் தந்துள்ளனர். ஆனால் இஸ்மாயில் தர்பார், தன்னை வேறு படங்களில் பணியாற்ற நான் தடைவிதிப்பதாக வெளிப்படையாகச் சொன்னார். தேவ்தாஸில் பணியாற்றும்போது எனக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட்டது. மோன்டியிடமும் அது ஏற்பட்டது. நான் அவரை ஆதிக்கம் செலுத்துவதாக எண்ணினார். எனது இசை சார்ந்த யோசனைகளை விளக்குவது சிரமமாக இருந்தது. அத்துடன் பாடல் சார்ந்த என்னுடைய தயாரிப்பு மிகவும் நீண்டது.

அதனால் நான் யோசித்தேன். என்னைவிட மேம்பட்ட இசையமைப்பாளர்கள் இருந்தாலும், அவர்களுடன் கடினமான வேலையை நான் செய்வதால் அதை நானே செய்துவிடலாம் என்று தோன்றியது. குஷாரிஷ்க்கு இப்படித்தான் இசையமைக்கத் தொடங்கினேன். ராம்லீலா எடுக்கும் கூடுதல் நம்பிக்கை வந்தது. பாஜிராவில் இசையமைப்பதை அனுபவித்துச் செய்யத் தொடங்கினேன். இனிமேல் இசையமைப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. அதில் களைப்பாகிவிட்டேன்.

விது வினோத் சோப்ராவுக்கு நடன இயக்குநராகத்தான் உங்கள் பணியைத் தொடங்கினீர்கள். பாடல்களை உருவாக்குவதில் உங்களுக்கென்று ஒரு பாணி இருக்கிறதே?

எனது தந்தை சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். ஒரு படத்தை மூன்று நான்கு முறை பார்ப்பதற்கு அழைத்துப் போவார். முகல் ஏ அஸம் படத்தைக் காண்பித்துவிட்டு, படே குலாம் அலிகான் பாடல் இதுவென்று சொல்லி கே. அசீப் எப்படி காமிராவை நகர்த்துகிறார் என்பதைக் கவனிக்கச் சொல்வார். அப்போது அவர் அப்படிச் சொன்னதை நான் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் சினிமா பார்க்கும் கலாசாரத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இசையைக் கேட்கும்போது, நான் அதை எப்படிப் படமெடுப்பேன் என்றுதான் யோசிப்பேன். கே. அசீப், மெஹ்பூப் கான், வி.சாந்தாராம், ராஜ்கபூர், பிமல் ராய் மற்றும் குரு தத் எப்படித் தங்கள் பாடல்களை எடுத்தார்கள் என்ற வியப்போடுதான் நான் வளரவே செய்தேன்.

தற்போதைய பெரும்பாலான படங்களில் நாயகனும் நாயகியும் பாடுவதற்கான சூழ்நிலைகளே உருவாக்கப்படுவதில்லை. அந்த மரபு காப்பாற்றப்பட வேண்டும். இந்தியாவில் எடுக்கப்படும் மாற்று சினிமாக்களைத் தவிர மேற்கு நாடுகளில் நமது பாடல்களே நமது அடையாளமாக உள்ளd. சத்யஜித் ராய் மற்றும் ரித்விக் கதக் போன்றவர்களின் படங்கள்கூட இசையோடு ஆழமான இணைப்பைக் கொண்டவையாகவே உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x