Published : 28 Feb 2016 09:41 AM
Last Updated : 28 Feb 2016 09:41 AM

கணிதன் - திரை விமர்சனம்

போலிச் சான்றிதழ்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகாரவர்க்கத்தினரின் கூட்டு பற்றியும் அதன் நுண் அரசியலையும் அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்திருக்கும் படம்தான் ‘கணிதன்’.

அதிகம் பிரபலமாகாத ஒரு சேனலில் செய்தியாளராகப் பணிபுரிகிறார் கவுதம் (அதர்வா). பிபிசி சேனலில் புலனாய்வுச் செய்தியாளராக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவர் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறும் சமயத்தில், போலிச் சான்றிதழ் மூலம் கல்விக் கடன் பெற்றதாக அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது. அவர் படித்து வாங்கிய பட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்கிறது. பெருத்த அவமானத்துடன் ஜாமினில் வெளியே வரும் அதர்வா, செய்தியாளருக்குரிய புலனாய்வு மூளையை வைத்து என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

போலி கல்விச் சான்றிதழ் சமூகத்தில் எந்த அளவுக்கு அதிகமாகப் புழங்குகிறது, அதனால் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், திறமையே இல்லாதவர்கள் போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்புகளை எப்படியெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொன்ன இயக்குநர் டி.என். சந்தோஷுக்கு சபாஷ் போடலாம்.

சாதாரண பெட்டிக் கடைக்காரர் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை போலிச் சான்றிதழ் கும்பலின் நெட்வொர்க்கில் பிணைந்திருப்பதைக் காட்சிகளில் சொல்லும்போது கண்கள் விரிகின்றன. அந்தக் கும்பல் எல்லா இடங்களிலும் எப்படி வியாபித்திருக்கிறது, கன்சல்டன்சி நிறுவனங்களில் பெறப்படும் இளைஞர்களின் சான்றிதழ்கள், கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எப்படிப் போலியாகத் தயாரிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் நுணுக்கமாகச் சொல்லிப் பீதியூட்டுகிறார் இயக்குநர்.

சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும்போதும், நாயகனும் வில்லனும் பரஸ்பரம் வலை விரித்துக்கொள்ளும் காட்சிகளும் இதே போன்ற சில படங்களை அழுத்தமாகவே நினைவுபடுத்துகின்றன.

போலீஸ் அதர்வாவைக் கைது செய்வதோடு சரி; அதன் பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். போலிச் சான்றிதழ் கும்பல் பற்றி போலீஸ் பெயரில் போலிச் செய்திகளை அதர்வா செய்தி சேனல்களில் ஒளிபரப்பச் செய்கிறார். அதைப் பற்றியும்கூட போலீஸுக்கு எதுவுமே தெரியவில்லை. போலிச் சான்றிதழ் பற்றித் தொடர்ந்து மீடியாவில் செய்தி வரும்போதும் அந்தக் கும்பல் விடாமல் அந்த வேலையைத் தொடர்ந்து செய்வது, வில்லனின் இடத்துக்கு ஆபீஸ் பையன் ஒருவர் சென்று கம்ப்யூட்டரில் உள்ள எல்லாத் தகவல்களையும் சுட்டுக்கொண்டு வருவது என நம் காதில் சுற்ற நிறைய பூமாலைகளை இயக்குநர் தொடுத்துவைத்திருக்கிறார்.

அதர்வாவுக்கு ஏற்ற சரியான வேடம். போலிச் சான்றிதழ் தயாரிக்கும் கும்பலைப் பிடிக்க சிபிஐ ரேஞ்சுக்குத் திட்டம் போடும்போது துறுதுறுவென மாறிவிடுகிறார். வில்லன்களிடம் மோதும்போது ஆக்ரோஷமாகத் தெறிக்கவிடுகிறார். காதலியிடம் உருகும்போது ஐஸ்கிரீமாகிவிடுகிறார்.

இதுவரை பக்கத்து வீட்டுப் பெண் போன்ற சாயலில் ரசிகர்களை வசீகரித்த கேத்ரின் தெரசா, இந்தப் படத்தில் ‘கவர்ச்சி அவதாரம்’ எடுக்கிறார். வில்லனாக வரும் தருண் அரோரா பார்வையிலும் உடல் மொழியிலும் மிரட்டுகிறார்.

இசை டிரம்ஸ் சிவமணி. பாடல்கள் மனதில் நிற்கவில்லை. முதல் பாதியிலேயே படத்தின் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடுவதால் இரண்டாம் பாதி இழுவையாக அமைந்து சோர்வடையச் செய்கிறது. பாடல்கள் வேகத்தடை. விறுவிறுப்பான காட்சிகளுக்கு மத்தியில் விழுந்துவிட்ட ஓட்டைகளை அடைத்திருக்கலாம்.

வழக்கமான ஆக்‌ஷன் படமாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை ஊடகங்களின் பார்வையில் படமாக்கியிருப்பதன் மூலம் ‘கணிதன்’ கவனிக்க வைக்கிறான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x