Published : 19 Feb 2016 11:13 AM
Last Updated : 19 Feb 2016 11:13 AM
நடந்து முடிந்த13-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட படம் ‘லென்ஸ்’. “ஆன்லைன் குற்றங்கள் பெருகிவிட்ட நிலையில் அது பற்றி அழுத்தமாகப் பேசும் த்ரில்லர் இந்தப் படம்” என்று தனது முதல் சினிமா இயக்க முயற்சி பற்றி பேச ஆரம்பித்தார் ஜெயபிரகாஷ்.
‘லென்ஸ்’னு தலைப்பு வெச்சதுக்கு என்ன காரணம்?
நம்ம விழிகள் இரண்டும் லென்ஸ்தான். இண்டெர்நெட் மூலமா மத்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில நடக்கிற விஷயத்த தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிற பேராசையைப் பத்தினதுதான் இந்தக் கதையே. அதுக்குக் காரணமான வெப்கேம்ல இருக்கிறதும் லென்ஸ்தான். அதனாலதான் இந்தப் படத்துக்கு ‘லென்ஸ்’ என்ற தலைப்பைத் தேர்வு செஞ்சேன்.
நடிகரா இருந்துட்டு திடீர்ன்னு இயக்க வந்தது ஏன்?
'உருமி', 'என்னை அறிந்தால்’போன்ற படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்ஸ் பண்ணியிருக்கேன். ஆனா நடிக்க தொடர்ச்சியா வாய்ப்பு கிடைக்கல. அதனாலதான் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சேன். முதல்ல சாஃப்ட்வேர் துறையில இருந்தேன். இண்டியன் ஸ்கூல் ஆஃப் டிராமா நாடகப் பட்டறையில் வேலை பார்த்தேன். அங்க நடிக்க நல்ல பயிற்சி கிடைச்சது. இந்த படத்தோட ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் என் நண்பர். ‘சுப்ரமணியபுரம்’, ‘கற்றது தமிழ்’, ‘ராஜதந்திரம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சவர்.
அவர்கிட்ட போய்க் கதையைச் சொன்னேன். முழு ஸ்கிரிப்டையும் படிச்சுட்டு ‘இதை நீயே டைரக்ட் பண்ணா பக்காவா வரும்’ன்னு சொன்னார். ஒரு திறமையான ஒளிப்பதிவாளர் சொன்னா சரியா இருக்கும் இல்லையா? அதனாலதான் நானே இயக்கினேன். நான் நடிகனாவும் இருக்கிறதால மெயின் கேரக்டரை நானே நடிச்சுட்டேன். என்னோட சேர்ந்து ஆனந்த் சாமி, அஸ்வதி, மிஷா கோஷல் ஆகியோரும் நடிச்சிருக்காங்க. என்னோட ஏரியா ஆக்டிங்தான். இந்தப் படத்தை இயக்கின பிறகு இயக்கத்துலயும் ஆர்வம் வந்துடுச்சு.
எதனால இப்படி ஒரு படம் பண்ணனும்னு தோனுச்சு?
ஒருத்தர் தன்னோட தற்கொலையை ஃபேஸ்புக்ல பதிவு பண்ணின விஷயத்தைச் செய்தியா படிச்சப்போ ரொம்பவே ஷாக் ஆனேன். அப்புறம் யூடியூப்ல அமெண்டான்னு ஒரு வெளிநாட்டுப் பெண் தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு மிரட்டுற வீடியோவைப் பார்த்து மிரண்டுபோயிட்டேன். இந்த இரண்டாலயும் என் மனதுல ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாத்தான் இதைப் படமாப் பண்ணனும்னு நினைச்சேன்.
கதை இதுதான்னு முடிவானதும் சோஷியல் மீடியா பத்தி ஆராய்ச்சி செஞ்சீங்களா?
கண்டிப்பா. இந்தப் படத்தோட கதை ஒருத்தர் கேமரா முன்னாடி சாகறது. அப்படி அவங்க பண்றதுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். பொதுவா இப்படித் தற்கொலைகள் நடக்க முக்கியமான காரணம் எம்.எம்.எஸ். மோசடிகள்தான்னு உலகம் முழுக்க நிறைய ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க. அது இந்தியாவுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி அதை அழுத்தமாகக் காட்டணும்னு நெனச்சதுதான் இந்தப் படம் உருவாக முக்கியமான காரணம்.
சர்வதேசப் பட விழாக்களுக்கு இந்தப் படத்தைக் கொண்டுபோனீங்களா?
இந்த மாதிரிப் படங்கள் தியேட்டருக்கு வர்றதுக்கு முன்னாடி படவிழாக்கள் மூலமாகத்தானே அட்டென்ஷன் கிடைச்சாகணும். புனே பட விழால படம் முடிஞ்சதும் ஆடியன்ஸ் அத்தன பேரும் எழுந்து நின்னு கைதட்டினாங்க. பெங்களூர்ல படவிழால ஒரு ஷோ ஹவுஸ்ஃபுல் ஆகி இன்னொரு ஷோ திரையிட்டோம். சென்னை படவிழால பார்த்த ஆடியன்ஸ் எல்லாரும் ரொம்ப பாராட்டினாங்க. இப்போ இந்தியா முழுக்க மால் தியேட்டர்களுக்கு இந்தப் படத்தைக் கொண்டுபோற முயற்சியில இருக்கேன்.
ஒரு சுயேச்சையான இயக்குநரா இருக்கிறதுல என்ன சவால்கள் இருக்கிறதா நினைக்கிறீங்க?
சமுதாயத்துக்கு போல்டா கருத்து சொல்ற துணிச்சலான படம் இது. சில தயாரிப்பாளர்கள், ஒரு சில ஹீரோக்கள்கிட்ட கதை சொன்னேன். கதையைக் கேட்டு “அய்யோ தம்பி.. வம்புல மாட்டிவிடுறியேன்னு தெறிச்சு ஓட ஆரம்பிச்சாங்க. இப்படித் தன்னம்பிக்கையே இல்லாம இருக்காங்களேன்னு எனக்கு வியப்பா இருந்தது! அடுத்து, பணம்தான் பிரச்சினையா இருந்தது. அப்புறம் இந்தப் படத்துக்கு இசையமைச்ச சித்தார்த் விபின்தான் தயாரிப்பாளரா மாறினார். இன்னும் நிறைய பேர் உதவி செஞ்சாங்க.
லென்ஸுக்கு அடுத்து?
‘ஓட்டத் தூதுவன்’ படத்துல வில்லனா பண்ணியிருக்கேன். அந்தப் படத்துக்கும் பாராட்டுகள் கிடைக்கிறது சந்தோஷமா இருக்கு. லென்ஸுக்கு முன்னாடியே ஒரு ஸ்க்ரிப்ட் எழுதியிருந்தேன். இதை ரிலீஸ் பண்ணிட்டு அதத் தொடங்கலாம்னு இருக்கேன். அதுக்கு லென்ஸ் கமர்ஷியலா ஜெயிக்கணும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT