Published : 19 Feb 2016 11:02 AM
Last Updated : 19 Feb 2016 11:02 AM
சோழவந்தான் எல்லையில் இருக்கிறது அஞ்சல தேநீர் விடுதி. நூற்றாண்டு கண்ட அந்தக் கடை வெறும் தேநீர் விடுதி அல்ல. அந்த ஊரில் பலரும் கூடிப் பேசும் இடம். பல விதமான மனிதர்களும் ஆசைகளும் கனவுகளும் முயற்சிகளும் சங்கமிக்கும் இடம். அந்த வட்டாரத்தின் உயிரோட்டமே அந்தக் கடைதான். புதிய நெடுஞ்சாலைத் திட்டத்தால் அந்த டீக்கடையை அகற்ற வேண்டும் என்ற நெருக்கடி வருகிறது. உள்ளூரில் சட்ட விரோத மதுபான வியாபாரி ஒருவரும் அந்தக் கடையை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார். நூறாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களையே எதிர்த்து நின்ற இந்தத் தேநீர் விடுதி இன்று இந்த இரட்டைத் தாக்குதலைச் சமாளிக்க முடிந்ததா என்பதுதான் ‘அஞ்சல’.
பொட்டல் வெளியாக இருந்த இடத்தில் வழிப்போக்கர்களின் பசி, தாகம் தீர்க்கும் இடமாக உருவான இந்த மையத்தை ஒட்டி மெல்ல மெல்ல ஒரு ஊரே உருவான வரலாற்றைச் சிக்கனமான காட்சிகளில் சித்தரிக்கிறார் இயக்குநர் தங்கம் சரவணன். சுதந்திர உணர்வுகளின் சங்கமமாக இருந்த அந்த இடம் இன்று அந்தச் சிறிய ஊரின் உயிர்த் துடிப்புள்ள மையமாக இருப்பதையும் காட்சிப்படுத்துகிறார். நெடுஞ்சாலைத் திட்டத்தைச் சட்டப்படி எதிர்கொள்ளும் அவர்களால் சாராய வியாபாரியின் கோபத்தை அத்தனை எளிதாக எதிர்த்து நிற்க முடியவில்லை என்னும் யதார்த்தத்தையும் காட்டுகிறார். நெருக்கடி ஏற்பட்டதும் அற்ற குளத்து அறுநீர்ப் பறவைபோலப் பலரும் அந்தக் கடையை விட்டு விலகுவதையும் அவர்களே மனம் மாறித் திரும்ப வருவதையும் நெகிழ்ச்சியோடு சித்தரித்திருக்கிறார். இவற்றுக்கு நடுவில் காதல், நட்பு, கனவு எனப் பல உணர்ச்சிகளும் சங்கமிக்கின்றன. கடைசியில் தேநீர் விடுதியின் தலையெழுத்து என்னவானது என்பதை யதார்த்தத்தை மீறாமல் சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் தேர்ந்தெடுத்துள்ள கதைக் களம் புதிது. பிரச்சினைகள் உருவாகும் விதமும் அவை எதிர்கொள்ளப்படும் விதமும் யதார்த்தமாக உள்ளன. தேநீர் விடுதியின் உரிமையாளராகப் பசுபதி நடித்திருக்கிறார். கடையில் வெளிப்படும் வாழ்வின் வண்ணங்கள் கதைக்கும் வண்ணம் சேர்க்கின்றன. வலுவான இந்த அம்சங்கள் இருந்தும் படம் பார்வையாளர்களைத் தன்னோடு ஒன்றச் செய்வதில் முழு வெற்றி பெறவில்லை. உணர்ச்சிகளைச் சித்தரிப்பதில் கவனம் செலுத்தியுள்ள இயக்குநர், சம்பவங்களை அழுத்தமாக அமைக்காததே இதற்குக் காரணம். புதிய களம் இருந்தும் புதிய காட்சிகளோ புதுமையான அணுகுமுறையோ இல்லை. பல திருப்பங்கள் சுவாரஸ்யமே இல்லாமல் இருப்பதுடன் நாடகப் பாங்கிலும் இருக்கின்றன. விமல், நந்திதா, சுப்பு பஞ்சு போன்றவர்களின் பாத்திர வார்ப்பு பலவீனமாக உள்ளது. கதாபாத்திரங்கள் மாறும் விதத்திலும் அவர்கள் வாழ்வில் நடக்கும் திருப்பங்களிலும் அறுபதுகளில் வந்த குடும்பப் படங்களை நினைவுபடுத்தும் அளவுக்குப் பழைய நெடி.
இவற்றுக்கிடையில் பசுபதியின் பக்குவமான நடிப்புதான் படத்தைக் காப்பாற்றுகிறது. வெவ்வேறு தலைமுறைகளில் அந்தக் கடையை நடத்தி வளர்க்கும் பாத்திரங்களிலும் பசுபதியே நடித்திருக்கிறார். சமகாலத்தில் நிதானமும் அமைதியும் மிக்க மனிதராக வரும் பசுபதி துளியும் மிகை இல்லாத நடிப்பைத் தந்திருக்கிறார்.
விமல் எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி நடிப்பதை எப்போது மாற்றிக்கொள்ளப்போகிறாரோ தெரியவில்லை. நந்திதா சிறிது நேரமே வந்தாலும் குறும்பும் காதலுமாக மனதில் தங்குகிறார். இமான் அண்ணாச்சியின் நகைச்சுவை பொறுமையைச் சோதிக்கிறது. வில்லத்தனமான வேடத்தில் சுப்பு பஞ்சு கச்சிதம். ஆடுகளம் முருகதாஸின் நடிப்பில் குறை இல்லை. ஆனால் அவரது பாத்திரம் அலுப்பூட்டுகிறது.
கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் எதுவும் தேறவில்லை. பின்னணி இசை சில இடங்களில் நன்றாக இருக்கிறது. எம்.ஜி.முருகனின் கலை இயக்கமும் ரவி கண்ணனின் ஒளிப்பதிவும் சேர்ந்து நூறாண்டுகளுக்கு முந்தைய காட்சிகளை நம்பகத்தன்மையோடு நம் கண் முன் கொண்டுவருகின்றன.
வித்தியாசமான கதைக் களம், யதார்த்தமான திரைக்கதைப் போக்கு ஆகியவற்றைக் கொண்ட ‘அஞ்சல’, அழுத்தமான சம்பவங்களும் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அஞ்சல தேநீர் விடுதி காலத்துக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. அதன் கதையைச் சொல்லும் படமோ காலத்தில் உறைந்து நிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT