Published : 10 Dec 2015 09:59 AM
Last Updated : 10 Dec 2015 09:59 AM
ஜென்ம துரோகத்தை பழிதீர்க்கும் யுத்தம் தான் இந்த ‘உறுமீன்’.
18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜசிம் மன் என்ற மன்னனின் வீர வரலாற்றை எடுத்துச் சொல்லும் சரித்திரப் பின்னணியோடு படம் தொடங்குகிறது. ராஜசிம்மன் கதாபாத்திரத்தில் பாபிசிம்ஹா நடித்திருக்கிறார். உடன் இருந்து காட்டிக்கொடுத்த துரோகி கருணாவின் (கலை யரசன்) சூழ்ச்சியால் ராஜசிம்மனின் ஆட்சி சீர்குலைகிறது. தன் உயிர் பிரிவதை எதிரிகள் தீர்மானிக்கக் கூடாது என்று முடிவெடுக்கும் ராஜசிம்மன், நிகழ்வுகளை ஒரு நூலாக எழுதி வைத்துவிட்டு மாண்டுபோகிறான்.
கதை அங்கிருந்து நிகழ்காலத்துக்கு வருகிறது. பொறியியல் படித்துவிட்டு சென்னையில் நண்பன் காளியின் அறையில் தங்கி வேலை தேடும் இளைஞனாக அறிமுகமாகிறார் பாபி சிம்ஹா. அவரிடம் ஒரு புத்தகம் கிடைக்கிறது. அது ராஜ சிம்மன் எழுதிய புத்தகம். அந்த நூலுக்கும், பாபிக் கும் இடையேயான தொடர்பு தெரியவருகிறது. வேலை தேடிவந்த பாபி சிம்ஹாவுக்கு ஒரு பிபீஓ கம்பெனியில் வேலை கிடைக்கிறது. தன்னுடன் கல் லூரியில் படித்த நாயகி ரேஷ்மி மேனனை அங்கு சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது.
அதே ஊரில் வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து கமிஷன் பெறுவது, மிரட்டல், அடிதடியில் ஈடுபட்டுவரும் கதாபாத்திரத்தில் கலையரசன் வருகிறார். ஒரு கட்டத்தில் பாபியும், கலையும் பகையாளியாக மாறுகிறார்கள். அது என்ன பகை? இருவரும் எந்தப் புள்ளியில் சந்திக்கிறார்கள்? அதற்கான தீர்வு என்ன என்பதை மீதி படம் விவரிக்கிறது.
மூன்று காலகட்டத்தின் திரைக்கதை நகர்வை நிதானமாக வடிவமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி. ஆனால், கதை மாந்தர்கள் பற்றிய பின்னணியை இவ்வளவு விரிவாகக் கொடுத்திருக்க வேண்டியதில்லை.
பாபி சிம்ஹாவை கலையரசன் தன் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவருவது உள்ளிட்ட காட்சிகளில் இன்னும் சஸ்பென்ஸ், த்ரில்லிங் கூட்டியிருக் கலாம். 1930-களில் கேரள மலைப்பகுதியில் நடக்கும் 2-வது காலகட்டத்தின் காட்சிகள் அழகு. சட்டம் படித்துவிட்டு மிடுக்காகத் திரியும் பாபியின் நடிப்பும், அவரது நண்பனாக வரும் கலையரசன், விசுவாசம் காட்டும் அப்புக்குட்டி ஆகியோரது நடிப் பும், அதைப் படமாக்கியிருக்கும் சூழலும் ரசனை.
கலையரசனின் ஆட்களை அடித்து துவம்சம் செய்துவிட்டுச் செல்கிறார் பாபி சிம்ஹா. நேரில் வந்து பார்க்கும் கலையரசன், இறந்து கிடப்பவரின் பையில் இருந்து செல்போனை எடுத்து பாபி சிம்ஹாவுக்கு போன் போட்டு ‘உன்னை தீர்த்துக்கட்டுகிறேன்’ என்கிறார். அவருக்கு பாபி சிம்ஹாவின் செல்போன் எண் எப்படி தெரியும்? இதுபோல சில இடங்களில் லாஜிக் இடிக்கிறது.
நாயகன் பாபிக்கு இணையாக வில்லன் கலையின் கதாபாத்திரமும் மிரட்டுகிறது. பிபீஓ கம்பெனி ஊழியராகவும், சட்டம் படித்த இளைஞராகவும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் பாபி. நாயகி ரேஷ்மி மேனன் சில நிமிடங்கள் வந்தாலும் படத்துக்கு அழகைக் கூட்டிவிடுகிறார். வசனமே பேசாமல் வரும் காட்சிகளில் மனோபாலா சிரிக்க வைக்கிறார்.
18-ம் நூற்றாண்டு மன்னனின் வரலாறு, 1930-களில் ஆங்கிலேயரின் அராஜக காலம், தற் போதைய ஐ.டி. தொழில்நுட்பச் சூழல் இந்த மூன்று பருவங்களையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்திக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். அந்தந்த காலத்தின் சூழலை சிறப்பாகப் படம்பிடித்திருக் கிறார் ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குரு. அச்சு ராஜாமணியின் இசையும் பலம் சேர்த்திருக்கிறது. ராஜசிம்மன் கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் படமாக்கியது வித்தியாசம்.
மாறுபட்ட கதைக்களத்தை எடுத்துக்கொண்டு உழைத்திருக்கும் இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது. கதாபாத்திர சித்தரிப்புகளில் விறுவிறுப்பு கூட்டி, சஸ்பென்ஸ் விஷயங்களில் சற்றுக் கூடுதலாக கவனம் செலுத்தியிருந்தால், ‘உறுமீன்’ இன்னும் ஜோராகத் துள்ளி இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT