Last Updated : 18 Dec, 2015 01:21 PM

 

Published : 18 Dec 2015 01:21 PM
Last Updated : 18 Dec 2015 01:21 PM

கேமராவைக் கடவுளாக நினைக்கிறேன்: காஜோல் சிறப்பு பேட்டி

ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ‘தில்வாலே’ படத்தில் நடிக்கிறார் காஜோல். அவர் கேமராவை ஏன் கடவுளாகக் கருதுகிறார், ‘டி.டி.எல்.ஜே’ மீது நீடிக்கும் வசீகரம், தாய்மைக்கு ஏன் முதல் முன்னுரிமை என்பது பற்றியெல்லாம் இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

பாலிவுட் கதாநாயகிகளுக்கு ‘ஷெல்ஃப் லைஃப்’ இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். திருமணமும் தாய்மையும் அவர்களுடைய பணிவாழ்க்கையையும், வெல்ல முடியாத நட்சத்திர அந்தஸ்தையும் காலிசெய்துவிடுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, காஜோல் நடிக்க வரும்போதெல்லாம், அவருக்கு இது எதுவும் பொருந்தவில்லை என்றுதான் தோன்றுகிறது. “நான் அதிகமாகப் பேசினால், நிறுத்திவிடுங்கள்” என்ற நிபந்தனையுடன் பேசத் தொடங்கினார் காஜோல். 41 வயதாகும் காஜோல், அதிகம் பேசும் நடிகை என்ற புகழ்பெற்றவர். அவர் பேசியதிலிருந்து...

‘தில்வாலே’ படத்தில் என்ன சிறப்பு?

நான் ஏற்றிருக்கும் ‘மீரா’ கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. நிஜ வாழ்க்கையில், மீரா போன்ற ஒரு பெண்ணைச் சந்தித்தால், நான் நிச்சயமாக அவளுடன் நட்பு பாராட்ட விரும்புவேன். அத்துடன் ஷாருக் கான், இயக்குநர் ரோஹித் ஷெட்டி என ‘கம்ஃபோர்ட்டாக’ உணரும் டீம். பிடிக்காதவர்களுடன் நூறு நாட்கள் இருப்பதை என்னால் கற்பனைகூடச் செய்ய முடியாது.

உங்களுக்கும், ஷாருக் கானுக்கும் இருக்கும் ‘ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’ பற்றி?

நாங்கள் இருவரும் ஏழு படத்தில்தான் சேர்ந்து நடித்திருக்கிறோம். இயக்குநர்கள், எழுத்தாளர்கள், படத்தில் பணியாற்றியவர்கள் இவர்களுடன் ஒப்பிடும்போது இந்த ‘ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’யில் எங்களுடைய பங்கு மிகக் குறைவுதான்.

ஆனால், எனக்கும் ஷாருக்குக்கும் வலுவான புரிதல் இருக்கிறது. அவருடன் நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்கலாம். பேசியே தீர வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இருக்காது. நாங்கள் ஒருவருக்கொருவர் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கிறோம். அவர் குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பதாகத்தான் நான் உணர்கிறேன். ஒரு நடிகராக அவர் இன்னும் தன் முழுத் திறனை வெளிப்படுத்தவில்லை. அவருக்குள் என்ன இருக்கிறது, அவரால் என்ன செய்ய முடியும் என்பதெல்லாம், நாம் இதுவரை பார்த்திருப்பதைவிடப் பல மடங்கு அதிகம். அவரும் என்னைப் பற்றி இப்படித்தான் சொல்வார் என்பதும் எனக்கு தெரியும். ‘இவை உன்னுடைய படங்கள். உன்னுடைய முடிவுகள். ஆனால், நீ இன்னும் நிறையச் செய்திருக்க முடியும்’ என்று சொல்வார். நான், ‘ஆமாம், ஆமாம், என்ன செய்வது’ என்று பதில் சொல்வேன்.

‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ (அக்டோபர் 19, 1995) வெளியாகி 20 ஆண்டுகள் ஓடியிருக்கிறதே?

அது மாதிரி ஒரு விஷயத்தை மறுபடியும் யாராலும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ‘டிடிஎல்ஜே’ தனக்கான வாழ்க்கையை அதுவே நிர்ணயித்துக்கொண்டது. தங்கள் குழந்தைகளை ‘டிடிஎல்ஜே’ படத்தைப் பார்க்க வைக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களை நான் சந்தித்திருக்கிறேன். அது ஒரு கலாச்சார விஷயமாக மாறிவிட்டது.

நிறைய ‘மெலோடிராமாக்களில்’ நடித்திருக்கிறீர்கள். ஆனாலும் இயல்பான நடிகையாகக் கருதப்படுகிறீர்கள். இதன் ரகசியம் என்ன?

நான் கேமராவைக் கடவுளாக நினைக்கிறேன். அதனால், எல்லாவற்றையும் பார்க்க முடியும். அது உண்மையைப் பதிவுசெய்கிறது. நீங்கள் யார், என்ன என்பதின் சாரம் அதில் அப்படியே பதிவாகிறது. அதற்கு முன்னால், கதாபாத்திரத்துக்கும், திரைக்கதைக்கும் பொருத்தமில்லாமல் நீங்கள் பொய் சொன்னால், மாட்டிக்கொள்வீர்கள். திறமை முக்கியம்தான். ஆனால், அதே அளவுக்கு நேர்மையும் அர்ப்பணிப்பும் முக்கியம். நான் இயல்பிலேயே ‘மெலோடிராமாட்டிக்’கான நபர்தான். அதனால், என்னுடைய அசைவுகளில் கூட ‘டிராமா’ இருப்பதை எப்போதும் உங்களால் பார்க்க முடியும்.

திரைப்படங்களை விடக் குடும்பத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஒரு நடிகையாக, திருமணமும் தாய்மையும் எப்படி உங்களை மாற்றியிருக்கிறது?

உண்மை என்னவென்றால், நடிப்பு என் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். என் வாழ்க்கை என்னைச் சிறந்த நடிகையாக மாற்றவில்லை. அது என்னைச் சிறந்த தாயாகவும், சிறந்த மனுஷியாகவும் மாற்றியிருக்கிறது. என் இரண்டு குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பதுதான் என்னுடைய இரண்டு வாழ்நாள் லட்சியங்கள்.

சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி | தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x