Published : 18 Dec 2015 12:23 PM
Last Updated : 18 Dec 2015 12:23 PM
இன்னொரு மாயா!
நடிப்பில் ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்’ ஆகிய இரண்டு படங்கள் ஜனவரியில் வெளியாகவிருக்கின்றன. இதையடுத்து ‘அரிமா நம்பி’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக நடிப்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் தாஸ் ராமசாமி என்ற அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் கதை ‘மாயா’ படத்தை மிஞ்சும் விதமாக கதாநாயகியை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லர் கதையாம். இந்தப் படம் தவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவும் நயன்தாரா கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவும், த்ரிஷாவும் சரி சமமான கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கிறார்கள்.
பாதையை மாற்றும் தயாரிப்பாளர்!
அஜித் படங்களை மட்டுமே தயாரிப்பார் என்று பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் பற்றி சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றி கொடுப்பதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்த அவர் தற்போது மீண்டும் தனது பாதைக்குத் திரும்பியிருக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ வெற்றிப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தையும் ‘டிமான்டி காலனி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தையும் ஒரேநேரத்தில் தயாரிக்கிறார்.
மீண்டும் இணையும் ஜோடி!
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகிக் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் சந்தித்த திரைப்படம் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா'. இந்தப் படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ்-ஆனந்தி ஜோடி தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு' என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ‘டார்லிங்' என்ற பேய்ப் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவிருக்கிறார்.
800 கோடி இலக்கு!
தமிழகத்தில் 100 நாட்கள் ஓடிச் சாதனை படைத்த ‘பாகுபலி’ உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் அந்தப் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, இரண்டாம் பாகம் 800 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறாராம்.
கட்டப்பா (சத்தியராஜ்) ஏன் பாகுபலியை (பிரபாஸ்) கொலை செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ள கண்டிப்பாக முதல் பாகத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுவரை திரையரங்கு சென்று படமே பார்க்காதவர்கள் கூட ‘பாகுபலி' படத்தைப் பார்த்துள்ளதால், இரண்டாம் பாகத்துக்கு முன்பைவிட அதிக எதிர்பார்ப்பு உருவாகும் என்று நண்பர்கள் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் ராஜமௌலி கூறி வருகிறாராம். இதனால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட இரண்டு காட்சிகளை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்கக் காட்சிகளை ரீ டிசைன் செய்துவருகிறார் என்று படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல்.
சேதுபதி முடிந்தது!
ரவுடி என்ற பாவனையுடன் உலாவரும் நகைச்சுவை நாயகன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார். ‘நானும் ரவுடிதான்' என்ற பெயரில் வெளியான அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இதற்கிடையில் அவர் முதல்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த 'சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு ஒரே வீச்சில் முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்தின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். மதுரையைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தை அருண்குமார் இயக்கியிருக்கிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி, பாராட்டுகளைப் பெற்ற ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கியவர். படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
சிம்புவின் மற்றொரு முகம்!
‘பீப்' பாடல் சர்ச்சைக்கு முன்பாக வெள்ள பாதிப்பின்போது ‘நிம் கேர்’ என்ற தொண்டு நிறுவனம் மூலமாக சுமார் 40 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார் சிம்பு. தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி செய்தால் மட்டுமே நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று அடையும் என்பதால் இப்படி செய்தாராம். நிவாரணப் பொருட்களை பேக் செய்யத் தனது வீட்டையும் கொடுத்து உதவியது மட்டுமல்லாமல் குழுவினருடன் அவரும் தொடர்ந்து 48 மணிநேரம் பேக் செய்வதில் சளைக்காமல் வேலை செய்தாராம். நிவராணப் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்த அந்த தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்களைப் பாராட்டி சிம்பு அவர்களை அழைத்து விருந்து கொடுத்து கவுரவம் செய்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT